வைட்டமின் டி குறைபாடு ஆண்களை என்ன செய்யும்?

நடுத்தர வயது ஆண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியின்மை காரணமாக உண்டாகும்
வைட்டமின் டி குறைபாடு ஆண்களை என்ன செய்யும்?

நடுத்தர வயது ஆண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியின்மை காரணமாக உண்டாகும் பல்வேறு நோய்கள் மற்றும் ஹார்மோன் பிரச்னைகளுக்கு வைட்டமின் டி குறைபாடு காரணமாகலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.  

எலும்புகளின் வலுவுக்கு கால்ஷியம் மிகவும் முக்கியம். அந்த கால்ஷியம் சத்து உடலில் கிரகிக்கப்பட வைட்டமின் டி சத்து மிகவும் அவசியம். எலும்புகளின் ஆரோக்கியத்தை காப்பாற்றுவதை தாண்டி வைட்டமின் டிக்கு பல முக்கிய பணிகள் உண்டு. அதுவும் ஆண்களுக்கு நீரிழிவு வராமல் தடுப்பதில் தொடங்கி, குழந்தையின்மையைத் தவிர்ப்பது வரை இதில் அடக்கம்.

எலும்புகளில் மட்டுமின்றி, உடல் திசுக்கள் பலவற்றிலும் இந்த வைட்டமின் இருப்பதும், மூளையின் பிட்யூட்டரி சுரப்பி, தைராய்டு சுரப்பி, கணையம் போன்றவற்றிலும்கூட இருக்கிறது. ஆண்களுக்கு உயிரணு உற்பத்திக் குறை பாட்டுக்கும், அந்த அணுக்களின் தரக் குறைவுக்கும்கூட வைட்டமின் டி குறைபாடு காரணமாகலாம் என்கிறது இந்த ஆராய்ச்சி.

வைட்டமின் டி சத்தில் குறைபாடு ஏற்பட்டுவிட்டால் அது உடல் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்காக செயல்படும் ஹார்மோன்களின் சீரான சுரப்பை குறைத்து விடுவதுடன் நாளாவட்டத்தில் உடல் தசை சரிவடைந்து பலவீனமடையச் செய்துவிடும் என்று அந்த ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. படிப்படியாக உடலில் உள்ள சத்துக்களை இழந்து, உடல் இயக்கப் பிரச்னை ஏற்பட்டு, வயது ஏறும் போதே வலுவிழந்து, உடல் பகுதிகளில் பாதிப்படைந்து ஒரு கட்டத்தில் மரணம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது என்று அச்சுறுத்துகிறது இந்த ஆராய்ச்சி. உலகம் முழுவதும் பலவீனம் சார்ந்த பிரச்னைகள் அதிகரித்து வருகிறது என்கிறார் அக்னிஸ்கா ஸ்விகிக்கா.

எலும்பு அடர்த்தி மற்றும் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் டி மிகவும் அத்தியாவசியமானது என்றார். மேலும் தசை உட்சேர்க்கைக்குரிய அனபாலிக் ஹார்மோன் குறைபாடு ஏற்பட்டுவிட்டால் உடல் அதிகமாக பலவீனம் அடைந்துவிடும்.ஆண்களில் வயதானவர்களிடம் காணப்பட்ட குறைந்த அளவு டிஹைட்ரோஎபியன்டோஸ்டிரோன் ஹார்மோன் (dehydroepiandrosterone sulfate (DHEA-S))அவர்களை அதிக அளவு பலவீனப்படுத்துகிறது.

இத்தகைய ஆராய்ச்சிகள் ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் பொருந்தாது. இன்னும் சில தீவிர ஆய்வுக்குப் பிறகே இதனைப் பற்றி முழுமையாகக் கூற முடியும். ஆனால் வைட்டமின் டி சத்து குறைவு நடுத்தர வயது ஆண்களையும் முதியோர்களையும் நிச்சயம் கடுமையாக பாதித்துவிடும் என்று ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் அக்னிஸ்கா ஸ்விகிக்கா

இந்த ஆய்வு முடிவு ஆர்லாண்டோவில் எண்டோக்ரைன் சொசைட்டியின் 99-வது வருடாந்திர எண்டோ 2017 கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

இத்தனை அவசியமான இந்த வைட்டமினை நம் உடலே உற்பத்தி செய்கிறது. சூரிய வெளிச்சத்தில் உள்ள புற ஊதா கதிர்கள், ஒரு வித ஹார்மோனின் தூண்டுதலின் உதவியுடன், டீஹைட்ரோ கொலஸ்ட்ரால் என்பதை சில வேதியல் மாற்றங்கள் செய்து, வைட்டமின் டியாக மாற்றித் தருகின்றன.

தேவையான அளவு வைட்டமின் டி அளவுகள் உணவுமுறையில் சேர்த்தல் மற்றும்/அல்லது சூரிய ஒளி வெளிப்பாடு ஆகியவற்றின் மூலம் பெற முடியும். வைட்டமின் D2வை விட விரைவாக உறிஞ்சப்படக் கூடிய வைட்டமின் D3 (கோல்கேல்சிஃபெரால்) என்பதே விரும்பப்படும் வடிவமாகும்.

காளான், மீனின் சதை (சல்மான், டியூனா மற்றும் மாக்கரெல்) மற்றும் மீனின் குடல் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் டி அதிக அளவில் இருக்கும் எனவே அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாற்பது வயதுக்கு மேல் அடிக்கடி கை, கால் வலி, எலும்பு வலி, உடல் வலி போன்றவை இருந்தால் உடனே மருத்துவரை நாடி வைட்டமின் டி சத்துக் குறைபாடு இருக்கிறதா என ரத்தப் பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்க வேண்டும். அப்படி குறைபாடு உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டாலும் கவலை வேண்டாம். இதற்கான சிகிச்சையை உடனே மேற்கொண்டு இரண்டு அல்லது மூன்று மாதங்களில் குணமாக்கிவிடலாம். தினமும் 20 நிமிடங்களாவது சூரிய வெளிச்சம் படும்படி இருப்பது மிகவும் முக்கியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com