எய்ட்ஸ் நோயாளிகளைப் புறக்கணித்தால் சிறை: புதிய சட்டத்துக்கு பிரணாப் ஒப்புதல்

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களைப் புறக்கணித்தாலோ அல்லது பணி வாய்ப்பு வழங்க மறுத்தாலோ 2 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய சட்டத்துக்கு
எய்ட்ஸ் நோயாளிகளைப் புறக்கணித்தால் சிறை: புதிய சட்டத்துக்கு பிரணாப் ஒப்புதல்

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களைப் புறக்கணித்தாலோ அல்லது பணி வாய்ப்பு வழங்க மறுத்தாலோ 2 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
இதையடுத்து அந்தச் சட்டம் விரைவில் அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஹெச்ஐவி தொற்று பாதிப்பு உள்ளவர்களின் சமூக உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சமூகத்தில் எய்ட்ஸ் நோயாளிகள் பாரபட்சத்துடனும், வெறுப்புணர்வுடனும் நடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு நிறுவனங்களில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும், ஏற்கெனவே பணியில் உள்ளவர்களுக்கு அத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அவர்களை நீக்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத் தவிர, மருத்துவப் பரிசோதனை என்ற பெயரில் சம்பந்தப்பட்ட நபருக்கே தெரியாமல் ஹெச்ஐவி பரிசோதனைகள் நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, பொது இடங்களில் எய்ட்ஸ் நோயாளிகளை வெறுப்புணர்வுடனும், பாரபட்சத்துடனும் நடத்தும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
இத்தகைய அவலங்களைத் தடுக்கும் பொருட்டு புதிதாக ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸ் தடுப்புச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
அதன்படி, எய்ட்ஸ் நோயாளிகள் மீது வெறுப்புணர்வை உருவாக்குபவர்களுக்கும், அவர்களை புறக்கணிப்பவர்களுக்கும் சிறைத் தண்டனை விதிக்க அச்சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
அத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு மூன்று மாதங்களில் இருந்து 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட நபரின் அனுமதியின்றி ஹெச்ஐவி பரிசோதனை நடத்தவோ, எய்ட்ஸ் நோய் உள்ளதா என்பது குறித்த விவரங்களைத் தெரிவிக்குமாறு அவரை நிர்பந்திக்கவோ கூடாது என்றும் புதிய சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இந்தச் சட்டம் தொடர்பான மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இந்நிலையில், அதற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அண்மையில் ஒப்புதல் அளித்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com