டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி சாவு: முடுவார்பட்டியை சேர்ந்த 18 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி

மதுரை மாவட்டம் முடுவார்பட்டியில் டெங்குவால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை இறந்தார்.
டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி சாவு: முடுவார்பட்டியை சேர்ந்த 18 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி

மதுரை மாவட்டம் முடுவார்பட்டியில் டெங்குவால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை இறந்தார். அதே கிராமத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள மேலும் 18 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள முடுவார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் கடந்த 20 நாள்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து முடுவார்பட்டியில் சுகாதாரப் பணிகள் முடுக்கிவிப்பட்டுள்ளன. சுகாதாரத்துறை சார்பாக காய்ச்சல் தடுப்பு மருத்துவக் குழுவினர் ஊரில் முகாமிட்டு காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். மேலும், டெங்கு அறிகுறி உள்ளவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் பரிந்துரைக்கப்பட்டனர்.
இதில் முடுவார்பட்டியைச் சேர்ந்த இளையபெருமாள், நந்தினி ஆகியோரின் மகள் அழகுமீனாள்(8), கங்கா(7), பார்வதி(45) மற்றும் ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்பட 9 பேர் அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி அழகுமீனாள் திங்கள்கிழமை காலை இறந்தார்.
இதில் அழகுமீனாள் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 10 நாள்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டநிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். அங்கு ரத்தப்பரிசோதனை மேற்கொண்டதில் அழகுமீனாளுக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரிந்தது. இதையடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்துள்ளார்.
அழகுமீனாள் இறந்ததை அடுத்து முடுவார்பட்டியில் கூடுதல் மருத்துவக் குழுக்கள் திங்கள்கிழமை முகாமிட்டு வீடு வீடாகச் சென்று டெங்கு பாதிப்பு தொடர்பாக கேட்டறிந்து சிகிச்சை அளித்தனர். மேலும், டெங்கு அறிகுறி உள்ள காமு(21), ஹரிகரன்(16), ஆண்டம்மாள்(47) உள்பட 9 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதையடுத்து, ஒரே கிராமத்தைச் சேர்ந்த 18 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டநிலையில் அரசு மருத்துவமனையில் உள்ளனர். மேலும் கிராமத்தைச் சேர்ந்த பலருக்கு முடுவார்பட்டி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கே.வி.அர்ஜூன்குமார் கூறியதாவது:
சிறுமி அழகுமீனாளுக்கு காய்ச்சல் ஆரம்ப நிலையில் இருந்தபோதே மதுரைஅரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். ஆனால், அப்போது கொண்டு செல்லாமல் வேறு எங்கோ சிகிச்சைப்பெற்று கவலைக்கிடமான நிலையில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாதல் அவரைக் காப்பாற்ற இயலவில்லை. முடுவார்பட்டியில் ஜூலை 21 முதல் மருத்துவக் குழுக்கள் முகாமிட்டு பணியாற்றி வருகின்றன. மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை உள்பட பல்வேறு துறைகள் இணைந்து பணியாற்றி வருகின்றன. தற்போது இரண்டு மருத்துவக்குழுக்கள், அனைத்து வகையான சிகிச்சை உபகரணங்கள் அடங்கிய நடமாடும் மருத்துவக்குழு ஒன்று, மருத்துவ நிபுணர்கள் கொண்ட துரித சிகிச்சைக்குழு (ரேபீட் ஆக்சன் மெடிக்கல் டீம்) ஆகியவை முகாமிட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் 30 பேர் முடுவார் பட்டியில் பணியில் ஈடுபட்டுள்ளனர். கிராமத்தின் அனைத்து பகுதிகளிலும காலை மாலை இருவேளைகளிலும் கொசு ஒழிப்பு புகை மருந்து தெளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com