தன்னம்பிக்கைக்கு ஒரு உதாரணம் இவர்!

72 சதவிகித நோயாளிகள் மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சையை பின்பற்றுவதில்லை
தன்னம்பிக்கைக்கு ஒரு உதாரணம் இவர்!

72 சதவிகித நோயாளிகள் மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சையை பின்பற்றுவதில்லை என்கிறது ஒரு மருத்துவ ஆய்வு. அதிலும் குறிப்பாக சிறுநீரக பாதிப்படைந்தவர்கள் வாரம் மூன்று முறை டயாலிசிஸ் செய்து கொள்ள வேண்டும். ஆனால் பல நோயாளிகள் இதைத் தவிர்க்கிறார்கள். வாரம் இரண்டு முறை அல்லது ஒரு தடவை மட்டும் வந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். இதனால் பிரச்னைகள் ஏற்பட்டு அவர்கள் வாழ்க்கைத் தரத்தையும் ஆயுளையும் குறைக்கலாம் என்பதை உணர மறுக்கிறார்கள் என்கிறார் கமல் ஷா. இவர் நெஃப்ரோ ப்ளஸ் என்ற டயாலிசிஸ் சிகிச்சை மையத்தின் துணை நிறுவனர். இவருக்கும் சிறுநீரகம் செயலிழந்து கடந்து இருபது வருடங்களாக டயாலிசிஸ் செய்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் இவர் தனது வலைத்தளத்தில் சிறுநீரக வியாதிகளுடன் இருபது ஆண்டு காலம் நிறைவு என்று பதிவிட்டிருந்தார். சிறுநீரக பாதிப்பால் அவதியுற்று டயாலிலிஸ் செய்து கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய வலைத்தளம் கமல் ஷாவினுடையது. தன்னம்பிக்கை தரும் எழுத்துக்களுக்கு சொந்தக்காரர் அவர். பத்து வருடங்களுக்கு முன்னால் அவர் வலைத்தளத்தில் தன் சிகிச்சை அனுபவங்களை எழுதத் தொடங்கியதுடன் இல்லாமல் அவருடைய நண்பர்களான விக்ரம், சந்தீப் உதவியுடன் நெப்ரோ ப்ளஸ் நிறுவனத்தை தொடங்கினார்.  இருபது ஆண்டுகளுக்கு முன்னால் திடீரென்று ஒரு நாள் அவரது சிறுநீரகங்கள் செயல் இழந்துவிட்டன என்று தெரிந்து கொண்ட போது கமல் ஷாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. அதற்குப் பின் மெள்ள மீண்டு, தன்னம்பிக்கையுடன் அதை எதிர்த்துப் போராடத் தொடங்கினார்.

முதன் முதலில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கிரீஷ் நாராயணனுடன் இருபது வருடம் கழித்து மீண்டும் புகைப்படம் எடுத்து அதை அந்த வலைத்தளத்திலும் பதிவிட்டார். ஆனால் தன்னைப் போல் சிறுநீரகப் பாதிப்பு அடையும் பலர் சிகிச்சையை சரிவர மேற்கொள்வதில்லை என்ற வருத்தம் கமல் ஷாவுக்கு உண்டு. தன்னுடைய வலைத்தளத்தில் அதைப் பற்றியும் பகிர்ந்துள்ளார். அவருடைய எழுத்துக்கும்  தன்னம்பிக்கை தரும் பேச்சுக்கும் நிறைய ரசிகர்கள் உண்டு. சிறுநீரக பாதிப்படைந்தவர்களின் வாழ்க்கை முறை, உணவு, உறக்கம், மருத்துவம் என அனைத்து விஷயங்களையும் தன் சொந்த அனுபவத்திலிருந்து ஜாலியாக அரட்டை அடிப்பது போன்று எழுதுவார் அவர். படிப்பவர்களுக்கு அவர் இப்பிரச்னையில் பாதிப்படைந்துள்ளார் என நம்புவது கஷ்டமாக இருக்கும். அந்தளவுக்கு நேர்மறைச் சிந்தனையுடன் தன் பிரச்னையை உணர்ந்து அதற்கேற்றபடி வாழ்க்கையை வாழ்ந்து தீர்ப்பவர் அவர்.

'ஒரு முறை டயாலிசிஸ் செய்து கொள்ளவே அதிக செலவாகிறது. தவிர பக்கவிளைவாக சிலருக்கு மாரடைப்பு ஏற்படுவதுண்டு என்ற காரணங்களால் டயாலிசிஸ் செய்வதைத் தவிர்க்கிறார்கள். தமிழ்நாடு, ஆந்திரா, கர்னாடகா, மஹாராஷ்ட்ரா, கேரளா, தில்லி, தெலுங்கானா, ஜார்கண்ட், உத்தர்கண்ட் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய பத்து மாநிலங்களில் சுமார் 1300 நோயாளிகளைப் பரிசோதித்து இந்த ஆய்வினை ஓராண்டு காலமாக செய்து முடித்தனர். வருடம்தோறும் இரண்டு லட்சம் பேருக்கு சிறுநீர் செயலிழப்பு ஏற்படும் நிலையில், இது உடனடியாக கவனிக்க வேண்டிய முக்கியமான பிரச்னை.

'சில மாநிலங்களில் டயாலிசிஸ் செய்ய சலுகைக் கட்டணங்கள் இருந்தாலும், மேலும் இதற்கான விலையைக் குறைக்க மத்திய மற்றும் மாநில அரசு தலையிட்டு தீர்வு காணவேண்டும்’ என்று கூறினார் கமல் ஷா.

இது குறித்து மும்பை கிட்னி பவுண்டேஷனின் சேர்மன் டாக்டர் உமேஷ் கன்னா கூறுகையில், ‘டயாலிசிஸ் கட்டணங்கள் எல்லா நோயாளிகளும் செய்துக்கொள்ளும் விதமாக குறைக்கப்படவேண்டும். இதற்கு தனியார் மற்றும் பொது நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.’ என்றார்   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com