டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த மக்களின் பங்கும் அவசியம்: சுகாதாரத் துறைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன்

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் பங்கும் மிகவும் முக்கியம் என மாநில சுகாதாரத் துறைச் செயலர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
காய்ச்சல் சிறப்புப் பிரிவில் வியாழக்கிழமை ஆய்வு செய்த சுகாதாரத் துறைச் செயலர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன்.
காய்ச்சல் சிறப்புப் பிரிவில் வியாழக்கிழமை ஆய்வு செய்த சுகாதாரத் துறைச் செயலர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன்.

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் பங்கும் மிகவும் முக்கியம் என மாநில சுகாதாரத் துறைச் செயலர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு வார்டு உள்ளிட்ட வார்டுகளை வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழ்நாட்டில் குமரி, நெல்லை, பழனி, திண்டுக்கல், சேலம், எடப்பாடி, ஓமலூர் உள்ளிட்ட இடங்களிலும், மேலும் தருமபுரியில் சில ஒன்றியங்களிலும் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
25 ஆயிரம் துப்புரவுப் பணியாளர்கள், 3,500 சுகாதார ஆய்வாளர்கள், 130 பூச்சியியல் வல்லுநர்கள் இப் பணிகளை விரைவுபடுத்தியுள்ளனர். டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஈடிஸ் வகை கொசு நல்ல தண்ணீரில் தான் முட்டையிடும். பகலில் தான் கடிக்கும். எனவே, இதுகுறித்த விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்பட வேண்டும்.
நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதுடன், தொட்டிகளையும், தண்ணீர் சேகரித்து வைத்துக் கொள்ளும் பாத்திரங்களையும் அவ்வப்போது சுத்தமாகக் கழுவி, மூடி வைத்துப் பராமரிக்க வேண்டும். இது மிகவும் முக்கியம். இதைச் செய்தாலே கொசுப் புழுக்களின் உற்பத்தியைத் தடுத்து விடலாம். இப் பணியை பொதுமக்கள் விழிப்புணர்வால் மட்டுமே மேற்கொள்ள முடியும்.
காய்ச்சல் வந்துவிட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். தாமதிக்கக் கூடாது. சுயமாக மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. காய்ச்சல் நின்ற பிறகும் இரு நாள்கள் மருத்துவமனையில் தங்கி முழு சிகிச்சையையும் எடுத்துச் செல்ல வேண்டும்.
ஏற்கெனவே, இந்திய மரபு மருத்துவ முறைகளான நிலவேம்புக் குடிநீர் அருந்துவதும், பப்பாளிச் சாறு அருந்துவது போன்றவையும் நல்ல பலனைத் தருகின்றன. மாநிலம் முழுவதும் சித்த மருத்துவத் துறை மூலமாக இவற்றை வழங்குவதற்கு சிறப்பு முகாம்கள் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போலி மருத்துவர்களின் தவறான சிகிச்சைகளால் மரணம் நிகழலாம் என கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் 75 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களுக்கு தடுப்பூசி இருப்பதாக பரப்பப்படுகிறது. இது முற்றிலும் வதந்தியே. யாரும் நம்ப வேண்டாம் என்றார் ராதாகிருஷ்ணன்.
ஆய்வின்போது, தருமபுரி மாவட்ட ஆட்சியர் (பொ) அ. சங்கர், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் கே. சீனிவாசன், மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் எம். இளங்கோவன், இருக்கை மருத்துவ அலுவலர் டாக்டர் ஆர். சுரபி உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
தருமபுரியில் தற்போது 7 பேருக்கு டெங்கு சிகிச்சை
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது 7 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெங்களூருக்கும், சேலத்துக்கும் நடுவே உள்ள மாவட்டம் என்பதால், அதிக எண்ணிக்கையிலான மக்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை நோக்கி வருகின்றனர்.
இதை கவனத்தில் கொண்டு, கூடுதல் கட்டடங்கள், கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி, போதிய பணியாளர்களையும் நியமிக்க ஏற்கெனவே பரிந்துரைகள் வந்துள்ளன. விரைவில் அவற்றை செய்து தர தனிக் கவனம் செலுத்தப்படும் என்றார் ராதாகிருஷ்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com