பச்சை காப்பிக் கொட்டை 'B' குரூப் ரத்தத்தை 'O' குரூப்பாக மாற்றுமா?

இந்த ஆய்வின் அடிப்படையில் ரத்த குரூப்கள் மாற்றம் செய்யப்பட்டு இந்தியாவில் எவருக்கேனும் அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்பட்டுள்ளதா?
பச்சை காப்பிக் கொட்டை 'B' குரூப் ரத்தத்தை 'O' குரூப்பாக மாற்றுமா?

நிர்மலா கான்வென்ட் என்றொரு தெலுங்குத் திரைப்படம், அதில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது அவசரமாக 'O' குரூப் ரத்தம் தேவைப்படும். ஆனால் மருத்துவமனையில் அந்த நேரத்தில் 'B' குரூப் ரத்தமே ஸ்டாக் இருக்கும். உடனே படத்தின் நாயகனான பள்ளிச்சிறுவன் மருத்துவரிடம் சென்று மேலும் தேவையான அளவுக்கு B குரூப் ரத்தம் சேகரியுங்கள் டாக்டர் என்று சொல்லி விட்டு வெளியில் காட்டுக்குள் ஓடிச் சென்று பச்சை காப்பிக் கொட்டைகளைப் பறித்து வந்து சேகரிக்கப்பட்டிருக்கும் அந்த ரத்தக் குப்பிகளில் குறிப்பிட்ட அளவுக்கு சேர்ப்பான். கைகளில் கிளவுஸ் மாட்டிக் கொண்டு தான். அவனது இந்த முந்திரிக் கொட்டத்தனமான செயலுக்காக டாக்டர் அவனைத் திட்டுவார், அவனோ, டாக்டரிடம் தயவு செய்து இப்போது அந்த ரத்தத்தைச் சோதித்துப் பாருங்கள் குரூப் மாறி இருக்கும் என்பான். டாக்டர் திட்டிக் கொண்டே அந்த ரத்தக் குப்பிகளை சோதனைக்கு எடுத்துச் செல்வார். என்னே ஆசர்யம்! நிஜமாகவே சில வினாடிகளில் பச்சை காப்பிக் கொட்டை சேர்க்கப்பட்ட B குரூப் ரத்தம் O குரூப் ரத்தமாக மாறி இருக்கும். 

அடிப்படையில் இப்படி ஒரு கண்டுபிடிப்பு இருப்பது நிஜம் தான். ஆனால் அதை அவர்கள் படமாக்கிய விதம் சற்று விபரீதமாக இருந்தது. இது குறித்த சோதனைகள் இன்னும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. முற்றிலுமாக ஒரு பள்ளிச்சிறுவனால் இத்தகைய சாகஸங்களை நிகழ்த்தி விட முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால் இப்படி ஒரு ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்தியாவில் இந்த முறையில் ரத்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதற்குப் போதிய சான்றுகள் இல்லை.

ஆனால் இதில் ஒரு விஷயம் மட்டும் உண்மை என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு பல்லாண்டுகளாகிறது. 1981 ஆம் ஆண்டு வாக்கில் பச்சை காப்பிக் கொட்டைகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் B குரூப் ரத்தத்தில் உள்ள சர்க்கரை மூலக்கூறுகள் அதாவது ஆண்ட்டிஜென்கள் பச்சை காப்பிக் கொட்டையால் நீக்கப்படுவதன் வாயிலாக அது தானே O  குரூப் ரத்தமாக மாற்றம் அடைவதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். அதற்கான காப்புரிமை கூட இந்திய விஞ்ஞானி ஒருவருக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அந்தப் படத்தில் ஒரு காட்சி வருகிறது. ஆனால் அந்த விஞ்ஞானி யார்? இந்த ஆய்வின் அடிப்படையில் ரத்த குரூப்கள் மாற்றம் செய்யப்பட்டு இந்தியாவில் எவருக்கேனும் அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பதைக் குறித்த தகவல்கள் எதையும் தேடிய வரையில் காணோம்.

ரத்த குரூப்களைப் பொறுத்தவரை ஒருவருக்கு A, B, AB, A நெகட்டிவ், B நெகட்டிவ், O, O நெகடிவ் என்றெல்லாம் ரத்த குரூப்கள் பிரிக்கப்படுவது அவற்றில் உள்ள சர்க்கரை மூலக்கூறுகளின் அடிப்படையில் தான். ஒரு ரத்த குரூப்பில் எவ்விதமான சர்க்கரை மூலக்கூறுகளும் இல்லாவிட்டால் அந்த ரத்தம் O குரூப் என அறிவிக்கப்படுகிறது. இது தான் இந்த ஆராய்ச்சியின் அடிப்படை.

இந்தக் கண்டுபிடிப்பால் ஒரு சின்ன ஆறுதல் என்னவென்றால், ஒருவேளை இந்த பச்சைக் காப்பிக் கொட்டை என்ஸைம் நாளை இந்திய மருத்துவச் சந்தையில் அறிமுகமாகி அனைத்து வகை ரத்த குரூப்களையும் யூனிவர்சல் டோனர்களான ‘O' ரத்த குரூப்களாக மாற்றத்தக்கதாகும் எனில் குறிப்பிட்ட வகை ரத்த குரூப்காக நாம் வெகு பிரயத்தனப்பட்டு அங்கே, இங்கே என வாட்ஸ் அப், இன்டர்நெட், என அலைந்து திரிய வேண்டியதில்லை. குடும்பத்தில் யாருக்கு ரத்தம் தேவைப்பட்டாலும் ரத்த குரூப்கள் வெவ்வேறாக இருந்த போதும் அவற்றைச் சேகரித்து காப்பிக் கொட்டை என்ஸைம் மூலமாக ரத்தப் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும் என்பது கூட ஒரு வகையில் நிம்மதி தான்.

இதில் ஒரே ஒரு சோகம் என்னவென்றால் பிறகு தமிழ் சினிமாக்களில் இந்த ரத்தத்தை மையமாக வைத்து உருவாக்கப்படும் செண்டிமெண்ட் காட்சிகளுக்கு பங்கம் வந்து விடும். ரத்ததான அழுகாச்சி சீன்களே பின்னர் அரிதான ஒன்றாகி விடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com