ரூபெல்லா தடுப்பூசி: வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்: மருத்துவர்கள் தகவல்

தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது. அதனால் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது. அதனால் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்திய குழந்தை நல மருத்துவர்கள் கூட்டமைப்பின் தமிழ்நாடு கிளைத் தலைவர் திருமலைக்கொழுந்து, திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ரூபெல்லா என்பது காய்ச்சல், நெறிக்கட்டி, சருமத் தடிப்பு ஆகிய அறிகுறிகளுடன் வரும் அம்மை நோய். இதேபோல, தட்டம்மை என்பது குழந்தைகளுக்கு காய்ச்சலுடன் உடலில் தடுப்புடன் வரும் அம்மை வகைகளில் ஒன்றாகும். 2015ஆம் ஆண்டில் தட்டம்மை சார்ந்த பிரச்னைகளால் இந்தியாவில் மட்டும் 70 ஆயிரம் குழந்தைகள் பலியானதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 1980ஆம் ஆண்டு முதல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தட்டம்மை தடுப்பூசி இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி தனியார் வசம் மட்டுமே போடப்பட்டு வந்த நிலை மாறி, இப்போது முற்றிலும் இலவசமாக அரசே அனைவருக்கும் போட உள்ளது. இந்தத் தடுப்பூசி முகாம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் சமூக வலைத்தளங்கள், கட்செவிஅஞ்சல் போன்றவற்றில் பல தவறான வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. பல பொய்யான தகவல்கள் உண்மை போல் திரிக்கப்பட்டு கதைகளாக வலம் வருகின்றன. இதனால் பெற்றோர்களும் தீவிர குழப்பம் அடைந்துள்ளனர். இந்தத் தடுப்பூசி வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட ஒன்று என்றும்,வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பரிசோதனை ஊசி என்றும்,ஆட்டிசம் உள்பட பல கொடிய பக்க விளைவுகள் ஏற்படுத்தும் என்றும் கட்டுக்கதைகள் அவிழ்த்து விடப்படுகின்றன.
பெரியம்மை நோயை தடுப்பூசி மூலம் உலகத்தை விட்டே ஒழித்தது போல, போலியோ எனும் கொடிய நோயை சொட்டு மருந்து மூலம் இந்தியாவை விட்டே துரத்தியதை போல, இந்தியாவில் தட்டம்மை நோயை 2020ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழிக்க அரசு முடிவு செய்துள்ளது. எனவே, வீண் புரளிகளை நம்பாமல் அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். மேலும், சந்தேகங்களுக்கு அருகில் உள்ள அரசு பொது சுகாதாரத் துறை மருத்துவர்களையோ, குழந்தைகள் நல மருத்துவர்களையோ அனுகலாம் என்றார் அவர்.
பேட்டியின்போது, யுனிசெப் நிர்வாகி மருத்துவர் ஜெகதீசன், குழந்தைகள் நல மருத்துவர்கள் ஆனந்தசிரீ, மாணிக்கவாசகம், பிரதாப்சந்திரன், நந்தகுமார், மீரான் முகைதீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com