முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 4 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: காப்பீட்டுத் தொகை ரூ.2 லட்சமாக அதிகரிப்பு

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மேலும் 4 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், உயர் மருத்துவச் சிகிச்சைக்கான காப்பீட்டுத் தொகை ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மேலும் 4 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், உயர் மருத்துவச் சிகிச்சைக்கான காப்பீட்டுத் தொகை ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 312 சிகிச்சைகள் இத்திட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த 2012 -ஆம் ஆண்டு தொடங்கப்ப்ட முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 1.58 கோடி குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அடையான அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 5 ஆண்டுகளில் இந்தத் திட்டத்தில் 17.60 லட்சத்துக்கும் அதிகமானோர், ரூ.3,615 கோடிக்கு பயனடைந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 7.11 லட்சம் பேருக்கு, ரூ.1,286 கோடியில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
தொகுப்பு நிதி: மேலும், அதிநவீன உயர் சிறப்பு சிகிச்சைகளை மேற்கொள்ளும் ஏழை மக்களுக்கு உதவிடும் வகையில், மாநில அரசின் பங்களிப்பு ரூ.35 கோடியுடன் தொகுப்பு நிதி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 4,300 பேர், ரூ.318.42 கோடி செலவில் சிறப்பு அறுவைச் சிகிச்சை செய்து பயனடைந்துள்ளனர்.
புதிய நிறுவனம்: இந்தத் திட்டத்தின் காப்பீட்டு நிறுவனத்துடனான உடன்படிக்கை ஜனவரி 10 -ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, இந்தத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்காக திறந்த ஒப்பந்தப்புள்ளி மூலம் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தக் காப்பீட்டு நிறுவனம், முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தை 4 ஆண்டுகளுக்கு செயல்படுத்தும். இந்தத் திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ.1,270 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
மேலும் சிறப்பு சிகிச்சை முறைகளுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.1.50 லட்சம் காப்பீட்டு தொகை, ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் 312 சிகிச்சை முறைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்: முதல் முறையாக இந்தத் திட்டத்தில், தமிழகத்தில் குடியேறி 6 மாதத்துக்கும் மேல் வசிக்கும் கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்ட புலம் பெயர்ந்தவர்கள் முறையான அதிகாரிகளால் சான்றளிக்கப்பட்டு, தொழிலாளர் நலத் துறை மூலம் சேர்க்கப்படுவார்கள். மேலும், மாநில அரசால் அனாதைகள் என வரையறுக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் தனி காப்பீட்டு அட்டை வழங்கப்படும். தற்போதைய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை முறை தொடரப்படும்.
கட்டணமில்லா தொலைபேசி: இத்திட்டத்தைப் பற்றி அறிந்துகொள்ளவும், சிகிச்சை பெறுவது குறித்த வழிகாட்டுதலுக்கும், சிகிச்சை பெறுவதில் உள்ள சிரமங்களை சரி செய்யவும், புகார் தெரிவிக்கவும் 24 மணி நேரமும் செயல்படும் 1800 425 3993 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com