2.5 கோடி பேருக்கு பார்வைத்திறன் குறைபாடு: நிபுணர் தகவல்

நாட்டில் 2.5 கோடி பேருக்கு பார்வைத்திறன் இல்லை என்று ராஜன் கண் மருத்துவமனையின் தலைவர்- மருத்துவ இயக்குநர் டாக்டர் மோகன் ராஜன் கூறினார்.

நாட்டில் 2.5 கோடி பேருக்கு பார்வைத்திறன் இல்லை என்று ராஜன் கண் மருத்துவமனையின் தலைவர்- மருத்துவ இயக்குநர் டாக்டர் மோகன் ராஜன் கூறினார்.
சென்னை ராஜன் கண் மருத்துவமனை, ரோட்டரி ராஜன் கண் வங்கி ஆகியன சார்பில் கண் தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
விழாவில், மோகன் ராஜன் பேசியது:-
நாட்டில் 2.5 கோடி பேருக்கு பார்வைத்திறன் இல்லாத நிலை உள்ளது.
அவற்றில் 30 லட்சம் பேருக்கு விழிவெண்படல (கருவிழி) பார்வைத்திறன் குறைபாடு உள்ளது. 30 லட்சத்தில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் 15 வயதுக்குக் கீழ் உள்ள சிறுவர்கள்.
தரமான கண்கள் கிடைக்காததாலும், குறைந்த அளவிலான கண் தானத்தினாலும் 45 ஆயிரம் பேருக்கு மட்டுமே அறுவைச் சிகிச்சை செய்து பார்வை கிடைக்கிறது.
கண்களில் காயம், நோய்த்தொற்று, உறவில் திருமணம், வைட்டமின் ஏ குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. கடிகாரத்தில் உள்ள கண்ணாடி உடைந்தால் மாற்றுவதுபோல, விழிவெண்படல பாதிப்பையும், கண் தானத்தின் மூலம் எளிதில் குணப்படுத்த முடியும்.
புத்த மதத்தில் கண்களை தானம் செய்தால்தான் சொர்க்கத்துக்குச் செல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
அதனால் இலங்கையில் புத்த மதத்தைப் பின்பற்றுவோர் இறப்புக்குப் பின்பு தவறாமல் கண்தானம் செய்கின்றனர். அதே போன்ற நிலை இந்தியாவிலும் வர வேண்டும் என்றார்.
கண் தான உறுதிமொழி அளித்த கிரிக்கெட் வீரர்: விழாவில் கண் தானம் செய்வதற்கான உறுதிமொழியை அளித்த, கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியதாவது:-
கண் தானம் என்பது தலைசிறந்த செயலாகும். அஸ்வின் அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கவுள்ள இந்த நேரத்தில், கண் தானம் செய்வதற்காக உறுதி அளித்தது மகிழ்ச்சியளிக்கிறது. அனைவரும் கண் தானம் அளிக்க முன்வர வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com