ஜிஎஸ்டி எதிரொலி! தமிழகம் முழுவதும் மருந்துகள் தட்டுப்பாடு!

தமிழகம் முழுவதும் ஜூலை 1 முதல் மருந்து, மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது
ஜிஎஸ்டி எதிரொலி! தமிழகம் முழுவதும் மருந்துகள் தட்டுப்பாடு!

ஜிஎஸ்டி வரி விதிப்பின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் ஜூலை 1 முதல் மருந்து, மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் ஆனந்தன் கூறியது: புதிய வரி விதிப்பின்படி, பெரும்பாலான மருந்துகளுக்கு 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதேவேளையில், பொதுமக்கள் பழைய மருந்துகளை முந்தைய விலையிலேயே வாங்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், மருந்து கடைகாரர்கள் விற்பனை செய்யும் மருந்துகளுக்கு 12 சதவீத வரி விதிக்கப்பகிறது. இதனால் மருந்துகளை இருப்பு வைத்துள்ள விற்பனையாளர்களுக்கு சுமார் 7 சதவீதம் வரை நஷ்டம் ஏற்படுகிறது. இதன் காரணமாக மருந்து வணிகர்கள் இருப்பு வைப்பதைக் குறைத்துவிட்டதால் தட்டுப்பாடு நிலவுகிறது. இருப்பிலுள்ள மருந்துகளை பழைய விலைக்கே விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் கோரிக்கை அளித்துள்ளோம் என்றார்.

மருந்து நிறுவனங்கள், விநியோகிஸ்தர்கள் என பலரும் இந்த வரியை இன்னும் தங்கள் விலைப்பட்டியலில் சேர்க்கவில்லை. பெரும்பாலான கணினியில் இதற்கான மென்பொருள் இணைக்கப்படவில்லை, அதனால் மருந்துக்களுக்கு ரசீது தருவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. எனவே மருந்து வாங்கினால் அதற்கான தொகையை ஜி.எஸ்.டி வரியினைச் சேர்த்து கணினியில் பதிவேற்றம் செய்ய முடியாத நிலையில் விற்பனையில் தேக்க நிலை நிலவுகிறது.

சென்னையைப் பொருத்தவரையில் இப்பிரச்னை ஓரளவுக்கு சமாளிக்கும் நிலையில்தான் உள்ளது. ஆனால் புறநகர் மற்றும் கிராமப் பகுதிகளில் சிரமமாக உள்ளது என்றார் மோடி & கோ நிறுவனர் சாந்தி சந்த். ரான்பாக்ஸி, சிப்லா மற்றும் சன் ஃபார்மா ஆகிய பெரும் நிறுவனங்களின் மருந்து மாத்திரைகளை 700 மருந்துக் கடைகளுக்கு தமிழகம் முழுவதும் விநியோகம் செய்வது மோடி அண்ட் கோ நிறுவனம்தான்.

இணையதளம் மூலமாக பதிவு செய்து ஜிஎஸ்டி எண்ணை பெற்றுக் கொள்ளும் கொள்ளும் வசதி இருந்தும், ஒரே சமயத்தில் பலர் ஆன்லைனில் பதிவு செய்ய முயற்சி செய்வதனால், அந்த இணையதளம் சரிவர செயல்படுவதில்லை.

தட்டுப்பாட்டைச் சமாளிக்க ஏற்பாடு: இந்நிலையில் மருந்துகள் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குநர் (பொறுப்பு) சிவபாலன் கூறுகையில், பொதுமக்கள் யாருக்காவது மருந்துகள் தேவைப்பட்டால் 044 -  2432 1830, 2433 5201, 2433506 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் இயக்ககத்தின் http://www.drugscontrol.tn.gov.in  என்ற இணையதளத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள மருந்துகள் கட்டுப்பாட்டு உதவி இயக்குநர்களின் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தோர் அந்த மாவட்ட உதவி இயக்குநரைத் தொடர்பு கொண்டு என்ன மருந்து தேவைப்படுகிறது என்று தெரிவித்தால், உடனடியாக ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com