காபிக்கு நீங்கள் அடிமையா? இதைப் படித்துவிடுங்கள்!

சிலருக்கு காபி குடிப்பது ஒரு உன்னதமான அனுபவம். நுரை ததும்ப காபியின் நறுமணம்
காபிக்கு நீங்கள் அடிமையா? இதைப் படித்துவிடுங்கள்!

சிலருக்கு காபி குடிப்பது ஒரு உன்னதமான அனுபவம். நுரை ததும்ப காபியின் நறுமணம் நாசியை நிறைக்க அதன் கசப்புச் சுவை நுனி நாக்கில் பட்டு அதன் பின் அதைக் குடிக்கும் போது கிடைக்கும் பரவசம்...அஹா அதற்கு ஈடு இணை இல்லை என்பார்கள் காபி பிரியர்கள்.

காபி உடல் நலத்துக்கு நல்லது என்று ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டனர் அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள். இதன் மூலம் தினமும் காபி குடித்தால் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியும் என்றும் கூறினர் .
 
காபி குடிப்பவர்களுக்கு இதய நோய், அல்சைமர் புற்று நோய், கீல்வாதம், சர்க்கரை வியாதி, கல்லீரல் நோய், பக்கவாதம் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட நோய்களின் தாக்கம் மிகவும் குறைவு என்று ஆய்வில் கண்டறிந்தனர். காபியில் ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் எனப்படும் நச்சுத்தன்மை எதிர்ப்பு சக்தி அதிக அளவில் உள்ளதால் இந்நோய்கள் வராமல் தடுக்கின்றன என்றனர்.

இந்த ஆராய்ச்சிகள் ஒரு பக்கம் இருக்கட்டும், ஒரு கேள்வி நமக்குள் அடிக்கடி எழுவது உண்மைதானே? காபி குடிப்பது நல்லதா? கெட்டதா?

காபியில் காஃபேன் (Caffeine)  என்கிற வேதிப்பொருள் உள்ளது. அதைப் பருகிய உடன் நரம்பு மண்டலத்தை தூண்டி ஒருவித மயக்கத்தை ஏற்படுத்துவதால்தான் அடிக்கடி காபி குடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. மூளை நரம்புகளில் அடினோசினின் ஆதிக்கத்தைக் காஃபீன் குறைப்பதால் மனஅழுத்தம் பிரச்னைகள் ஏற்படாது.
 
ஆனால் காஃபேன் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது பல பிரச்னைகளுக்கு வழிவகுத்துவிடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அது ரத்தத்திலுள்ள இரும்புச்சத்தின் அளவை குறைந்து ரத்தசோகையை ஏற்படுத்தும். அடிக்கடி தலைவலி என்று காபி குடித்தால் அதற்கு அடிமை ஆகி, மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலியும் ஏற்படும் என சில மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன.

சிலருக்கு காலையில் எழுந்தவுடன் காபி குடிக்கவில்லை என்றால் கைகள் நடுங்கும் அல்லது பதற்றம் ஏற்படும். காபி குடித்தவுடன் தான் நிம்மதியாக உணர்வார்கள். உடனடியாக உற்சாகத்தைத் தருவதால், அது இந்த அளவுக்கு அவர்களை அடிமைப்படுத்தி வைத்துள்ளது. எனவே இது ஒரு நோய்த் தன்மை தான். இன்னும் சிலருக்கு இரவில் காபி குடித்துவிட்டால் விடியும் வரை தூக்கம் வராது. தொடர்ந்து மாலையில் காபி குடித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் தாமதமாகவே தூக்கம் வரும். சிலருக்குத் தூக்கத்தில் சிக்கல்கள் உண்டாகலாம். இன்னும் சிலருக்குச் சரியான நேரத்தில் காபி குடிக்கவில்லை என்றாலே பதற்றம் உண்டாகும். இதுவும் ஒரு வகை நோய்தான்.

சாதாரண காபியை விட பால் சேர்க்காத ப்ளாக் காபி நல்லது. நாளொன்று இரண்டு அல்லது மூன்று காபி மட்டுமே பருகினால் பிரச்னை எதுவும் ஏற்படாது. ஆனால் அதற்கு மேற்பட்ட எண்ணிக்கை நிச்சயம் உடல் நலத்தைப் பாதிக்கும். காபி நல்லதா கெட்டதா என்று இப்போது நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com