காய்ச்சல் நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கக் கூடாது: சுகாதாரத் துறை அதிரடி

காய்ச்சல் நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கக் கூடாது: சுகாதாரத் துறை அதிரடி

காய்ச்சல் நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கக் கூடாது.

காய்ச்சல் நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கக் கூடாது. அவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடந்த ஆண்டைக் காட்டிலும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இது தொடர்பான புள்ளி விவரங்கள் மத்திய சுகாதாரத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களைக் கட்டுப்படுத்துவது குறித்து சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் அனைத்து துறை இயக்குநர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் காணொலிக் காட்சி மூலம் அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அறிவுரை அளிக்கப்பட்டது.
அதன்படி, காய்ச்சலோடு தட்டணுக்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் குறைவாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கக் கூடாது. அதை டெங்கு காய்ச்சலாகக் கருதி உடனடியாக அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட வேண்டும். அவ்வாறு அனுப்பாமல் நோயாளி உயிரிழக்க நேர்ந்தாலோ, அரசு மருத்துவமனைக்கு தாமதமாக பரிந்துரைக்கப்பட்டு உயிரிழக்க நேர்ந்தாலோ, சிகிச்சை அளித்த தனியார் மருத்துவரும் மருத்துவமனையும் அந்த உயிரிழப்புக்குப் பொறுப்பேற்க வேண்டும்.
மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டுள்ள மருந்தகங்கள், தனியார் மருந்தகங்கள் உள்ளிட்டவை மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துகளை வழங்கக் கூடாது. காய்ச்சல் பாதிப்பால் உயிரிழக்கும் நபர் குறித்த ஆய்வு மேற்கொள்ளும்போது, மருந்தகங்களில் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்து வாங்கியது கண்டறியப்பட்டால், குறிப்பிட்ட மருந்தகம் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மருந்தகங்களையும் மருந்து ஆய்வாளர்கள், மருந்துகள் கட்டுப்பாட்டு உதவி இயக்குநர்கள் ஆகியோர் தொடர்ந்து கண்காணித்து, பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டால் அது குறித்து ஊரக நலப்பணிகள் இயக்ககத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தும் தனியார் மருத்துவமனைகள் அரசு மருத்துவமனைகளுடன் இணைந்து காய்ச்சல் முகாம்களை நடத்த வேண்டும். மருத்துவமனைகள், மருந்தகங்கள் ஆகிய இடங்களில் கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகள் அளிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஏ.எட்வின் ஜோ கூறுகையில், டெங்கு, காய்ச்சல் பாதிப்பால் உயிரிழக்கும் நோயாளிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும்போது, அவர்கள் நீண்ட காலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஆபத்தான இறுதிக் கட்டத்தில் அரசு மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்படுவது தெரியவந்தது. இதனால் அரசு மருத்துவமனைக்கு வந்த உடனே நோயாளிகள் இறப்பு நேரிடுகிறது. இதனைத் தடுப்பதற்காகவே காய்ச்சல் நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com