'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைவது எங்கே?: முதல்வர் பழனிசாமி பதில்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பரிந்துரைத்த 5 இடங்களில் ஓர் இடத்தில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறினார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், காது நுண் எலும்பு கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 200 -ஆவது குழந்தைக்கு செவித்திறன் கேட்கும் கருவியின் செயல்பாட்டை தொடக்கி வைத்த முதல்வர்
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், காது நுண் எலும்பு கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 200 -ஆவது குழந்தைக்கு செவித்திறன் கேட்கும் கருவியின் செயல்பாட்டை தொடக்கி வைத்த முதல்வர்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பரிந்துரைத்த 5 இடங்களில் ஓர் இடத்தில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறினார்.
'எய்ம்ஸ்' மருத்துவமனை மதுரையில் அமைக்கப்பட வேண்டும் என்று அப்பகுதி எம்.எல்.ஏ.க்களும், தஞ்சாவூரில் அமைக்கப்பட வேண்டும் என்று அப்பகுதியினரும் கோரி வந்த நிலையில் முதல்வர் இவ்வாறு கூறியுள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் செவித்திறன் குறைபாடுடைய 200 -ஆவது குழந்தைக்கு காக்ளியர் கருவி பொருத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (ஜூன் 13) நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ரிக்ஷிதா என்ற 4 வயது பெண் குழந்தைக்கும், அன்பு என்ற 2 வயது ஆண் குழந்தைக்கும் பொருத்தப்பட்ட காக்ளியர் கருவியின் இயக்கத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
ஏற்கெனவே காக்ளியர் கருவி பொருத்தப்பட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளிடமும் அவர் கலந்துரையாடினார். மேலும் காது - மூக்கு - தொண்டை சிகிச்சைப் பிரிவு உள்நோயாளிகளைச் சந்தித்து, சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம் செயல்படுத்தப்படும் கட்டடத்தை முதல்வர் பார்வையிட்டார்.
அதன் பிறகு அவர் அளித்த பேட்டி: அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டத்தின்கீழ் இதுவரை 16,500 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தத் திட்டம் பிற அரசு மருத்துவமனைகளுக்கு படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு 5 இடங்களை மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார். அந்தப் பரிந்துரை மத்திய அரசிடம் உள்ளது. அது பரிசீலிக்கப்பட்டு ஐந்து இடங்களில் ஓரிடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்றார் முதல்வர்.
முன்னதாக, காக்ளியர் கருவி பொருத்தும் நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியது:
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், தமிழகத்தில் இதுவரை 2,856 செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு காக்ளியர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.220.66 கோடி செலவில் இந்தக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
தனியார் மருத்துவமனையில் ரூ.10 லட்சம் வரை செலவாகும் இந்தச் சிகிச்சை, அரசு மருத்துவமனையில் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.
இதன் மூலம் பிறவியில் இருந்து செவித்திறன் இல்லாத குழந்தைகள், செவித்திறனைப் பெற்று எல்லோரையும் போல இயல்பான வாழ்க்கையைத் தொடர முடியும் என்றார் அவர்.
தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ, பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி, சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் நாராயண பாபு, காது - மூக்கு - தொண்டை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் முத்துக்குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com