ஸிகா வைரஸ் தடுப்புப் பணிகள் தீவிரம்: 9 மாவட்டங்களில் ஆய்வு

தமிழகத்தில் பூச்சியியல் நிபுணர்கள் ஸிகா வைரஸ் தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஸிகா வைரஸ் தடுப்புப் பணிகள் தீவிரம்: 9 மாவட்டங்களில் ஆய்வு

தமிழகத்தில் பூச்சியியல் நிபுணர்கள் ஸிகா வைரஸ் தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கடந்த 2015 -ஆம் ஆண்டில் இருந்து ஸிகா வைரஸ் நோய் பல நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. தற்போது அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட 67 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கண்டறிந்துள்ளது.
இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் குஜராத் மாநிலத்தில் 3 பேருக்கு ஸிகா வைரஸ் பாதிப்பு இருப்பது ரத்தப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதில் இருவர் பெண்கள். ஒருவருக்கு பிரசவம் முடிந்ததும் கண்டறியப்பட்டது, மற்றொருவருக்கு 37 -ஆவது வார கர்ப்பக் காலத்தில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து நாடு முழுவதும் ஸிகா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத் துறை முடுக்கிவிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் பயணிகள் கண்காணிக்கப்படுகின்றனர். யாரேனும் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் வந்தால் அங்கேயே அவர்கள் பரிசோதிக்கப்படுகின்றனர்.
தமிழகத்திலும் பொது சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஸிகா வரைஸ் தடுப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
3 ஆய்வகங்கள்: மதுரை, ஓசூர், புதுச்சேரி ஆகிய மூன்று இடங்களில் உள்ள பூச்சியியல் ஆய்வு நிறுவனங்களின் மூலம் ஸிகா வைரஸ் பரவுகிறதா என்பது குறித்து கண்டறியப்பட்டு வருகிறது. டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்டவற்றைப் பரப்பும் ஏடிஎஸ் கொசு வகையின் மூலம் ஸிகா வைரஸ் பரவும் என்பதால், அந்தக் கொசுக்கள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
9 மண்டல குழுக்கள்: நெல்லை, விருதுநகர், திண்டுக்கல், கோவை, சேலம், தஞ்சாவூர், வேலூர், திருச்சி, கடலூர் ஆகிய இடங்களில் தமிழக அரசின் சார்பில் 9 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்காணிப்புக் குழுக்களில் உள்ள பூச்சியியல் நிபுணர்கள், ஸிகா வைரஸ் பரவுவது குறித்து ஆய்வுப் பணிகளையும், கண்காணிப்புப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் திடீரென்று காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாவோரின் மருத்துவ வரவாறு குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விமான நிலையம், துறைமுகம்: சென்னை விமான நிலையத்தில் ஸிகா வைரஸ் பாதிப்புள்ள நாடுகளுக்கு பயணிப்போர், அங்கிருந்து வருவோர் ஆகியோர் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றனர். விமான நிலையங்களில் ஸிகா வைரஸ் குறித்த விழிப்புணர்வு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் துறைமுகம், விமான நிலையங்கள் அமைந்துள்ள இடங்களிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் கொசுக்கள் பரவாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறியது: தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் தீவிர கண்காணிப்புகளில் இருந்து ஸிகா வைரஸ் தப்புவதற்கு வாய்ப்பில்லை. இதுவரை தமிழகத்தில் யாருக்கும் ஸிகா வைரஸ் பாதிப்பு இல்லை. இருப்பினும் பொதுமக்கள் தங்களையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் ஏடிஎஸ் கொசுக்களின் மூலம் பரவும் நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.
ஸிகா வைரஸ் பாதிப்பைத் தடுப்பதற்கான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் இல்லை. எனவே, கொசுக்கள் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். ஸிகா வைரஸ் பாதிப்பைக் கண்டறியும் வசதி சென்னை கிங் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ளது என்றார் அவர்.
ஸிகாவை அறிவது எப்படி?
ஒருவருக்கு ஸிகா வைரஸ் தொற்றியிருந்தால் காய்ச்சல், தோலில் அரிப்பு, கண்நோய், எலும்பு மூட்டுகளில் வலி, உடல்சோர்வு போன்ற சாதாரண அறிகுறிகளே தோன்றும். இந்த வைரஸை சுமந்து வரும் ஏடிஸ் கொசுக்கள் கடித்த 2 முதல் 7 நாள்களில் இந்த அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும். இந்த வகை கொசுக்கள் நல்ல நீரில் இனப்பெருக்கம் செய்யும்; காலை, பிற்பகல் வேளைகளில் மனிதர்களை கடிக்கும்.
ஒரு பெண் கர்ப்பம் தரித்த முதல் 3 மாதங்களில் அவருக்கு ஸிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் பிறக்கும் குழந்தைக்கு மரபணு, நரம்பியல் உள்ளிட்ட நோய்களால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த வைரஸால் தாக்கப்பட்ட கர்ப்பிணிக்கு பிறக்கும் குழந்தையின் தலை சிறியதாக காணப்படுகிறது. இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முற்றிலும் குணப்படுத்த முடியும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com