ஜூலை முதல் குழந்தைகளுக்கு ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து

தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ், ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து வழங்கும் திட்டம் தமிழகத்தில் ஜூலை மாதம் முதல் தொடங்க உள்ளது. குழந்தை பிறந்த ஒன்றரை மாதம்,
ரோட்டா வைரஸ் மருந்து திட்டத்தில் மாநில பயிற்றுநர்களுக்கான பயிற்சி கையேட்டை வெள்ளிக்கிழமை வெளியிட்ட சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
ரோட்டா வைரஸ் மருந்து திட்டத்தில் மாநில பயிற்றுநர்களுக்கான பயிற்சி கையேட்டை வெள்ளிக்கிழமை வெளியிட்ட சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ், ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து வழங்கும் திட்டம் தமிழகத்தில் ஜூலை மாதம் முதல் தொடங்க உள்ளது. குழந்தை பிறந்த ஒன்றரை மாதம், இரண்டரை மாதம், மூன்றரை மாதம் என 3 தவணைகளாக இந்தத் தடுப்பு மருந்து வழங்கப்படும்.
ஜூலை மாதம் முதல் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இந்த மருத்து இலவசமாக வழங்கப்படும். இதனை தனியார் மருத்துவமனைகளில் பெற ரூ.3 ஆயிரம் வரை செலவாகும்.
ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து அளிப்பதற்கு மாநில பயிற்றுநர்களுக்கான பயிற்சி சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியது:
உலக அளவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பதற்கு வயிற்றுப்போக்கு இரண்டாவது முக்கியக் காரணமாக உள்ளது. இந்தியாவில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் மிதமான மற்றும் கடுமையான வயிற்றுப்போக்குகளில் 40 சதவீதம் ரோட்டா வைரஸ் கிருமி தொற்றினால் ஏற்படுகிறது. ஓராண்டில் 32.7 லட்சம் குழந்தைகள் புறநோயாளிகளாகவும், 8.72 இலட்சம் குழந்தைகள் உள்நோயாளிகளாகவும் ரோட்டா வைரஸ் தொற்றினால் ஏற்படும் வயிற்றுப்போக்குக்காக சிகிச்சை பெறுகின்றனர்.
வயிற்றுப்போக்கின் தாக்கம் மற்றும் இறப்புகளை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த அணுகுமுறை மிகவும் அவசியம். அதன்படி, ரோட்டா வைரஸ் மற்றும் தட்டம்மை ரூபெல்லா தடுப்பு மருந்துகள் அளித்தல், சுகாதாரம் பேணுதல், தாய்ப்பால் அளிப்பதை ஊக்குவித்தல், துத்தநாக மாத்திரை அளித்தல் உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டியது அவசியம்.
ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து திட்டம் தற்போது 92 நாடுகளில் நடைமுறையில் உள்ளது என்றார் அவர்.
சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com