குழந்தைகளுக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை!: மியாட் மருத்துவமனையில் மறுவாழ்வு

தான்சானியா நாட்டைச் சேர்ந்த 6 மாதக் குழந்தைக்கும், செஷல்ஸ் நாட்டைச் சேர்ந்த 2 வயதுக் குழந்தைக்கும் கல்லீரல் மாற்று சிகிச்சை செய்து சென்னை மியாட் மருத்துவமனையில் மறுவாழ்வு
கல்லீரல் மாற்று சிகிச்சை மூலம் மறுவாழ்வு பெற்ற குழந்தைகள், அவர்களது தாயுடன் டாக்டர் ஆர்.சுரேந்திரன், மருத்துவமனைத் தலைவர் மல்லிகா மோகன்தாஸ்.
கல்லீரல் மாற்று சிகிச்சை மூலம் மறுவாழ்வு பெற்ற குழந்தைகள், அவர்களது தாயுடன் டாக்டர் ஆர்.சுரேந்திரன், மருத்துவமனைத் தலைவர் மல்லிகா மோகன்தாஸ்.

தான்சானியா நாட்டைச் சேர்ந்த 6 மாதக் குழந்தைக்கும், செஷல்ஸ் நாட்டைச் சேர்ந்த 2 வயதுக் குழந்தைக்கும் கல்லீரல் மாற்று சிகிச்சை செய்து சென்னை மியாட் மருத்துவமனையில் மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மியாட் மருத்துவமனை கல்லீரல் மாற்று சிகிச்சைத் துறை தலைவர் டாக்டர் ஆர்.சுரேந்திரன், டாக்டர் பாரி விஜயராகவன், மியாட் மருத்துவமனை தலைவர் மல்லிகா மோகன்தாஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:
6 மாதக் குழந்தைக்கு...தான்சானியா நாட்டைச் சேர்ந்த 6 மாத ஆண் குழந்தை அமீத் ஹாஃபித் பிறந்த 15 நாள்களில் மஞ்சள்காமாலை, ரத்தப் போக்கு கண்டறியப்பட்டது. வயிற்றில் நீர் சேர்ந்தது; மஞ்சள்காமாலை அதிகரித்தது. தாய்ப்பால் உள்ளிட்ட உணவை குழந்தையால் சாப்பிட முடியவில்லை. குறைவான உணவு கிரகிப்பு, வெள்ளை களிமண் போன்ற மலம், குழந்தையின் எடை வெறும் 6 கிலோ ஆகிய விளைவுகள் ஏற்பட்டன. 4 மாதங்களில் கவலைக்கிடமான நிலை ஏற்பட்டது.
உயர் சிகிச்சைக்காக குழந்தையை சென்னை மியாட் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். பிறப்பிலேயே பித்த நாளங்கள் பாதிக்கப்பட்டதால் ('பைலரி அட்ரீஸியா') செயலிழப்பு நிலைக்கு கல்லீரல் தள்ளப்பட்டது. இதையடுத்து தாயின் கல்லீரலின்
ஒரு பகுதியை வெட்டி எடுத்து, 12 மணி நேர மாற்று சிகிச்சை மூலம் குழந்தைக்கு புதிதாக கல்லீரல் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
2 வயது குழந்தைக்கு...செஷல்ஸ் நாட்டின் 2 வயது பெண் குழந்தை கிரேஸ் கியாரா செரிலுக்கும் 'பைலரி அட்ரீஸியா' எனப்படும் பித்தநாள பிறவிக் குறைபாடு இருந்தது. பிறந்த 6 மாதத்தில் இலங்கையில் இதற்காக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அண்மையில் 2 வயதை இக்குழந்தை அடைந்தபோது மஞ்சள் காமாலை, உணவு சாப்பிட முடியாமை உள்ளிட்ட கல்லீரல் செயலிழப்பு பாதிப்புகள் ஏற்பட்டன.
இதையடுத்து சென்னை மியாட் மருத்துவமனையில் தாயின் கல்லீரலின் ஒரு பகுதி எடுக்கப்பட்டு, குழந்தை கிரேஸ் கியாரா செரிலுக்கும் மாற்று சிகிச்சை மூலம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.
இரு குழந்தைகளும் தாயுடன் நலமாகி விரைவில் அவர்களின் நாடுகளுக்குத் திரும்புகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com