தமிழகத்தில் 5 மாதங்களில் 3,000 பேருக்கு டெங்கு பாதிப்பு: தடுப்பு பணிகளைத் தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்

தமிழகத்தில் 5 மாதங்களில் 3,000-த்துக்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் 5 மாதங்களில் 3,000 பேருக்கு டெங்கு பாதிப்பு: தடுப்பு பணிகளைத் தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்

தமிழகத்தில் 5 மாதங்களில் 3,000-த்துக்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
2016-ஆம் ஆண்டு 2,500 பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 5 மாதங்களிலேயே 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளது நோயின் தீவிரத்தை அறிவிப்பதாக உள்ளது. எனவே, தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
டெங்கு பாதிப்பு: அண்மைக்காலமாக பிற நோய்களைக் காட்டிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. 1980 முதல் 2000 ஆண்டுகளுக்குட்பட்ட ஆண்டுகளில் தில்லி, ஹரியானா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், இமாசலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மட்டுமே அதிக அளவில் காணப்பட்ட டெங்கு பாதிப்பு, தற்போது பெரும்பாலான மாநிலங்களுக்கு பரவியுள்ளது.
ஆண்டு முழுவதும் பாதிப்பு: ஏடிஸ் எனப்படும் நல்ல நீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் கொசுக்களால் டெங்கு பரப்பப்படுகிறது. பருவமழைக் காலங்களில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்திய இந்த வகைக் கொசுக்கள் அண்மைக் காலமாக ஆண்டு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இது தொடர்பாக முன்னாள் பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் இளங்கோ கூறியதாவது:
ஏடிஸ் கொசுக்களானது எல்லா காலநிலைகளுக்கும் நிலைத்திருக்கும் வகையில் அதன் குணம் மாறியுள்ளது.
மேலும் 20 முதல் 25 நாள்களாக இருந்த அதன் ஆயுள்காலம் தற்போது 40 நாள்களாக அதிகரித்துள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. கொசுக்களால் பரவும் பிற நோய்களைப் பொருத்தவரை கொசுக்களின் அடர்த்தியைக் (எண்ணிக்கையைக்) கொண்டு அவை பரவும். ஆனால், ஒரு ஏடிஸ் கொசுவால் பலருக்கு டெங்கு காய்ச்சலைப் பரப்ப முடியும். இந்தக் காரணங்களால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஆண்டு முழுவதும் ஏற்படுகிறது என்றார்.
தமிழகத்தில் அதிகரிப்பு: இந்நிலையில் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது டெங்கு பாதிப்பு தீவிரமாகியுள்ளது. 2016-ஆம் ஆண்டில் 2,531 பேர் பாதிக்கப்பட்டு, 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் 2017-ஆம் ஆண்டில் மே 31-ஆம் தேதி வரையில் 3,259 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று மத்திய சுகாதாரத் துறையின் இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குறிப்பாக கன்னியாகுமரி, ராமநாதபுரம் (பரமக்குடி), திருநெல்வேலி சங்கரன்கோவில்), திண்டுக்கல், உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை தற்போதுதான் தொடங்கியுள்ளது என்பதாலும், வடகிழக்கு பருவமழைக் காலம் அடுத்து வரவுள்ளதாலும் இந்த எண்ணிக்கை மேலும் பலமடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மத்திய அரசு கடிதம்: இந்நிலையில் மத்திய அரசின் தேசிய ஊரகத் திட்டத்தின் கூடுதல் செயலர் அருண் கே பாண்டா அனைத்து மாநிலத்தின் சுகாதாரத் துறை செயலர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் டெங்கு பாதிப்பு கடந்த ஓரிரு ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. 2016-ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். டெங்கு சிகிச்சைக்கென்று இதுவரை பிரத்யேக மருந்துகளும், தடுப்பு மருந்துகளும் இல்லை. எனவே, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, நோய் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறியது: தமிழகத்தில் வறட்சி நிலவி வருவதால், தண்ணீரைச் சேமித்து வைக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. அவற்றை முறையாக மூடி வைத்து பராமரிக்காத காரணத்தால் டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் பரவுகின்றன. மேலும் பருவமழைக் காலத்தில் சுற்றுப்புறங்களில் உள்ள பயன்படுத்தாத டயர், தேங்காய் ஓடுகள், கட்டுமானப் பணியிடங்களில் உள்ள குழிகளில் போன்றவற்றில் நீர் தேங்கி, அதில் ஏடிஸ் கொசுக்கள் பரவுகின்றன. தமிழகத்தைப் பொருத்தவரை அரசு சார்பில் 75 இடங்களில் டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியைத் தடுப்பதற்கு உள்ளாட்சி நிர்வாகங்களுடன் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிகிச்சைக்கான அனைத்து வசதிகளும் உள்ளன என்றார்.
எல்லைகளில் கண்காணிப்பு: டெங்கு காய்ச்சல் பாதிப்பு அண்டை மாநிலமான கேரளத்தில் அதிகமாகக் காணப்படுகிறது. எனவே, தமிழக - கேரள எல்லைகளான கன்னியாகுமரி, தேனி, கோவை, திருநெல்வேலி ஆகியப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக - ஆந்திரம் மற்றும் கர்நாடக எல்லைகளும் கண்காணிப்பில் உள்ள என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மலேரியா இடத்தைப் பிடித்த டெங்கு கொசுக்கள்!
டெங்கு கொசுக்கள் அதிகரித்துள்ளதால் மலேரியாவைப் பரப்பும் கொசுக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
காடுகள், காட்டில் உள்ள காய்ந்த மரப்பொந்துகள், ரப்பர் தோட்டங்களில் பால் வடிவதற்காக வைக்கப்படும் கொட்டாங்குச்சிகள், அன்னாசிப்பழச் செடியில் உள்ள தண்டுகள் உள்ளிட்டவற்றில் அதிக வீரியமுடைய ஏடிஸ் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன.
ஆனால் காடுகள் அழிக்கப்படுவதால் இந்தக் கொசுக்கள் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்துவிட்டன என்பது 2016-ஆம் ஆண்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மலேரியாவைப் பரப்பும் கொசுக்களும் நல்ல நீரில் இனப்பெருக்கம் செய்பவை ஆகும். இந்நிலையில், டெங்குவைப் பரப்பும் கொசுக்கள் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்து, மலேரியாவைப் பரப்பும் கொசுக்களை உயிரியல் மாற்றம் செய்துவிட்டன. இதனால் மலேரியா பாதிப்பு குறைந்து, டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது என்று பூச்சியியல் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com