சிறுதுளை அறுவைச் சிகிச்சை மூலம் இளம் பெண்ணின் தைராய்டு கட்டி நீக்கம்

சிறுதுளை அறுவைச் சிகிச்சை மூலம் இளம் பெண்னின் தைராய்டு கட்டி அகற்றப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முறையாகவும், உலக அளவில் 3-ஆவது முறையாகவும் இந்த சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

சிறுதுளை அறுவைச் சிகிச்சை மூலம் இளம் பெண்னின் தைராய்டு கட்டி அகற்றப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முறையாகவும், உலக அளவில் 3-ஆவது முறையாகவும் இந்த சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
லைஃப்லைன் மருத்துவமனையின் ஓர் அங்கமான கீழ்ப்பாக்கம் லிமா மருத்துவமனையில் இந்த அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவமனையின் தலைமை லேப்ராஸ்கோப்பி அறுவைச் சிகிச்சை நிபுணர் ராஜ்குமார் சென்னை செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
19 வயதான இளம்பெண் ஒருவருக்கு கழுத்துப் பகுதியில் தைராய்டு கட்டி உருவானது. கழுத்தில் தைராய்டு சுரப்பிக்குக் கீழ்ப் பகுதியில் இருந்து கட்டி தொடங்கி நாக்கின் மேல் பகுதி வரை இணைந்து காணப்பட்டது. இந்தக் கட்டியை நீக்காவிட்டால் நோய்த்தொற்று ஏற்படவும், புற்றுநோய்க் கட்டியாக மாறவும் வாய்ப்புள்ளது.
எனவே, கட்டியை அறுவைச் சிகிச்சை செய்து அகற்றத் தீர்மானிக்கப்பட்டது. பொதுவாக இந்த வகை அறுவைச் சிகிச்சை செய்யும்போது, கழுத்துப் பகுதியில் 2 பெரிய தழும்புகள் ஏற்படும். நோயாளி இளம்பெண் என்பதால் லேப்ராஸ்கோப்பி மூலம் சிறுதுளைகள் இட்டு அறுவைச் சிகிச்சை செய்யத் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, பெண்ணின் 2 மார்பகங்களிலும் 10 மி.மீ. அளவுக்கு சிறிய துளையிட்டு அதன் வழியாக லேப்ராஸ்கோப்பி கருவிகள் செலுத்தப்பட்டன. அதன் மூலம் தைராய்டு சுரப்பியில் இருந்து நாக்கு வரை பரவியிருந்த கட்டி அறுவைச் சிகிச்சை செய்து அகற்றப்பட்டது.
லேப்ராஸ்கோப்பி என்பது வயிறு தொடர்பான சிகிச்சைகளுக்கு மட்டுமே என்றிருந்த நிலையை மாற்றி, கழுத்துப் பகுதியில் ஏற்படும் பாதிப்புக்கும் இதனைப் பயன்படுத்தலாம் என்று நிருபித்துள்ளோம் என்றார்.
இந்த வகை அறுவைச் சிகிச்சை இதற்கு முன் கொரியாவில் ரோபோவின் உதவியுடன் செய்யப்பட்டது. பிரேசிலில் இதே அறுவைச் சிகிச்சை செய்ய முயற்சிக்கப்பட்டது. அதற்கு பின் இங்குதான் ரோபோவை உபயோகிக்காமல் மருத்துவர்களே இணைந்து இந்த அறுவைச் சிகிச்சையை செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com