குறைவாய் தூங்கி நிறைவாய் ஓய்வெடுக்க 10 டிப்ஸ்  

வாழ்க்கையுடன் போராடாதீர்கள் உடலுக்கு ஓய்வு தேவை, தூக்கமல்ல. பெரும்பாலானவர்கள்
குறைவாய் தூங்கி நிறைவாய் ஓய்வெடுக்க 10 டிப்ஸ்  

சந்தோஷமா? துன்பமா?

#1 வாழ்க்கையுடன் போராடாதீர்கள் உடலுக்கு ஓய்வு தேவை, தூக்கமல்ல. பெரும்பாலானவர்கள் அனுபவத்தில், அவர்கள் அறிந்திருக்கும் ஆழமான ஓய்வு தூக்கம்தான், அதனால் அவர்கள் தூக்கம் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் அடிப்படையில் உடல் தூக்கத்தைத் தேடுவதில்லை, ஓய்வுநிலையையே தேடுகிறது. உங்கள் இரவுப்பொழுது ஓய்வு தருவதாக இல்லாவிட்டால் உங்கள் பகல்ப்பொழுது மோசமாகவே இருக்கும். அதனால் வித்தியாசத்தை ஏற்படுத்துவது தூக்கமல்ல, ஓய்வுதான். நாள் முழுவதும் உடலை ஓய்வுநிலையில் நீங்கள் வைத்திருந்தால், உங்கள் வேலை, உடற்பயிற்சி, என்று நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் உடலைத் தளர்த்தி ஓய்வுதருவதாக மாறிவிட்டால், நீங்கள் தூங்கத் தேவையான நேரம் தானாகக் குறையும். பிரச்சனை என்னவென்றால், மனிதர்களுக்கு எல்லாவற்றையும் கடினமாகச் செய்திடவே கற்றுத்தரப்படுகிறது. உடற்பயிற்சிக்காக நடந்துசெல்பவர்கள் கூட மிகவும் டென்ஷனாக நடந்துசெல்வதை நான் கவனிக்கிறேன். இப்படிப்பட்ட உடற்பயிற்சி நல்வாழ்விற்கு பதிலாக பாதிப்பைத்தான் ஏற்படுத்தும். எல்லாவற்றையும் போர்புரிவது போல அணுகாதீர்கள். நீங்கள் நடந்துகொண்டிருந்தாலும், ஓடிக்கொண்டிருந்தாலும், உடற்பயிற்சி செய்தாலும், அதை முயற்சியின்றி, ஆனந்தமாக ஏன் செய்யக்கூடாது?

வாழ்க்கையோடு சண்டை போடாதீர்கள். உங்களை ஆரோக்கியமாகவும் நலமாகவும் வைத்துக்கொள்வது ஒரு போராட்டமல்ல. விளையாட்டு, நீச்சல், நடப்பது என்று நீங்கள் விரும்புவதைச் செய்யுங்கள். நீங்கள் நாள் முழுவதும் மைசூர்ப்பா சாப்பிட விரும்பினால் மட்டுமே அது பிரச்சனையாகும்! இல்லாவிட்டால் எந்தவொரு செயலையும் தளர்வாக, ஓய்வாக செய்வதால் எந்தப் பிரச்சனையுமில்லை.

2 யோகப்பயிற்சிகள் – ஷாம்பவி மஹாமுத்ரா 

ஷாம்பவி மஹாமுத்ரா போன்ற யோகப் பயிற்சிகளை உங்கள் வாழ்க்கைக்குள் கொண்டுவந்தால், சீக்கிரமே உங்கள் நாடித்துடிப்பில் மாற்றம் ஏற்படுவதை கவனிப்பீர்கள். உதாரணத்திற்கு, சமீபத்தில் ஈஷா யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சி செய்யத் துவங்கியிருக்கும் ஒருவர், சாப்பிடும் முன்னும் சாப்பிட்ட பிறகும் நாடித்துடிப்பை பரிசோதித்துவிட்டு, ஆறு வாரங்களுக்கு தினமும் இரண்டுமுறை ஷாம்பவி செய்தபிறகு நாடித்துடிப்பைப் பார்த்தால், அது 8 முதல் 15 எண்கள் குறைந்திருக்கும். ஷாம்பவி மஹாமுத்ரா மூலம் ஒருவர் உண்மையிலேயே ஆழமான ஓய்வுநிலைக்குச் சென்றால் நாடித்துடிப்பு மேலும் குறையும். 12 முதல் 18 மாத பயிற்சியிலேயே, ஓய்வுநிலையில் நாடித்துடிப்பை 50 அல்லது 60ஆகக் குறைத்துவிட முடியும். நீங்கள் தூங்கத்தேவையான நேரமும் குறைந்துவிடும், ஏனென்றால் அப்போது நாள் முழுதும் உடல் ஓய்வுநிலையில் இருக்கும். நீங்கள் என்ன செயல் செய்துகொண்டு இருந்தாலும் உடல் ஓய்வுநிலையில் இருக்கும், அதனால் அதற்கு அதிக தூக்கம் தேவைப்படாது. 

#3 யோகப்பயிற்சிகள் – சூன்ய தியானம் 

சூன்ய தியானம் என்று ஒரு தியானத்தை நாங்கள் கற்றுத்தருகிறோம். இதை தென்னிந்தியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள மையங்களில் நடத்தப்படும் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியில் மட்டுமே கற்றுத்தருகிறோம். இதை வேறெங்கும் கற்றுத்தருவதில்லை, ஏனென்றால் இதைக் கற்றுக்கொடுக்க ஒருவிதமான சூழ்நிலையும் பயிற்சியும் வேறுசில செயல்முறைகளும் தேவைப்படுகின்றன. தூங்கத்தேவையான நேரத்தை சூன்ய தியானம் பெரிய அளவில் குறைத்திட முடியும். இது வெறும் 15 நிமிட தியானம், ஆனால் இந்த தியானத்தில் நீங்கள் முறையாக ஈடுபட்டால், உடலின் வளர்சிதை மாற்றம் இருபத்திநான்கு சதவிகிதம் வரை குறையமுடியும். விழிப்புணர்வான தியான நிலைகளில் அதிகபட்சமாக இருபத்திநான்கு சதவிகிதமே குறைத்திட முடியும். அதற்குமேல் குறைத்தால், சாதாரணமாக விழிப்புணர்வு என கருதப்படும் நிலையில் நீங்கள் இருக்கமாட்டீர்கள். ஒரு குறிப்பிட்ட நிலை வரை உடலைத் தளர்த்தி, விழிப்புணர்வாக அந்த நிலையிலிருந்து வெளியே வரவேண்டும் என்றால், இருபத்திநான்கு சதவிகிதத்திற்கு மேல் வளர்சிதை மாற்றத்தைக் குறைக்கமுடியாது. இந்த பதினைந்து நிமிட தியானம் தரும் ஓய்வு, இரண்டு முதல் மூன்று மணி நேர தூக்கத்திற்கு சமமானது. உடலியக்க அளவில் அவ்வளவு பெரிய மாற்றங்கள் நிகழ்கின்றன, குறிப்பாக ரத்தத்தின் ரசாயன அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழும். அதனால் இது மிகுந்த கட்டுப்பாட்டுடன், கவனமாக பரிமாறக்கூடிய சூழ்நிலைகளில் மட்டுமே கற்றுத்தரப்பட வேண்டும். 

#4 தினசரி உணவில் இயற்கை உணவுவகைகள் 

நீங்கள் தினமும் எட்டு அல்லது ஒன்பது மணி நேரம் தூங்குகிறீர்கள் என்றால், நீங்கள் சாப்பிடும் உணவையும் கவனிக்கவேண்டும். சமைக்காமல் அவை இயற்கையாக இருக்கும் நிலையிலேயே உண்ணக்கூடிய காய்கறிகளையும் பழங்களையும் கணிசமான அளவு சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு அவசியமானது. உணவை சமைக்கும்போது, அதிலுள்ள பிராணா அல்லது உயிர்சக்தி பெருமளவு அழிந்துவிடுகிறது. உடலிற்குள் சோம்பல் அல்லது மந்தத்தன்மை புகுவதற்கு இதுவும் ஒரு காரணம். போதுமான அளவு பழங்களையும் காய்கறிகளையும் உட்கொள்வது பல பலன்களைத் தருகிறது, ஆனால் நீங்கள் தூங்கத்தேவையான நேரம் சட்டென குறைவதை கவனிப்பீர்கள். 

#5 அடுப்பிலிருந்து சீக்கிரமாக தட்டிற்கு வரவேண்டும்

இந்திய கலாச்சாரத்தில், சமைத்த உணவு எதையும், சமைத்து ஒன்றரை முதல் இரண்டு மணி நேரத்திற்குள் புசித்துவிட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. சமைத்த உணவை குளிர்சாதனப் பெட்டியில் நீண்டகாலம் வைத்து உண்பது அதிகமான தூக்கத்தைத் தருவதோடு, உடலில் வேறு பல பிரச்சனைகளையும் உருவாக்கும். பதப்படுத்தப்பட்ட உணவும் அப்படித்தான். “தமஸ்” என்ற சொல் மந்தத்தன்மையைக் குறிக்கிறது. சமைத்தபின் நீண்டகாலம் வைத்திருக்கும் உணவில் “தமஸ்” அதிகமாக இருக்கும், இது மனதின் சுறுசுறுப்பையும் விழிப்பையும் குறைத்துவிடும். 

#6 எவ்வளவு சாப்பிடுவது? 

உங்கள் சக்திகளை எவ்வளவு நுட்பமாக நிர்வகிக்கிறீர்கள் என்பதே நீங்கள் எவ்வளவு விழிப்பாக இருக்கிறீர்கள் என்பதை நிர்ணயிக்கிறது. தியானம் செய்வதற்கு மனம் மட்டும் விழிப்பாக இருந்தால் போதாது, உங்கள் சக்தியே அப்படி இருக்கவேண்டும். இதற்கு உதவியாக, யோகப் பாதையில் இருப்பவர்கள், இருபத்திநான்கு கவள உணவே சாப்பிடவேண்டும் என்றும், ஒவ்வொரு கவள உணவையும் இருபத்திநான்கு முறை மென்ற பிறகே விழுங்கவேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. உணவு உள்ளே போகும் முன்பே அது ஜீரணமாவதற்கு இது வழிசெய்யும், அதனால் இது மந்தத்தன்மையை ஏற்படுத்தாது. மாலை உணவு உண்ணும்போது இப்படிச்செய்தால், காலை மூன்றரை மணிக்கெல்லாம் சுலபமாக விழித்திடுவீர்கள். யோகமரபில் இந்த நேரத்தை பிரம்மமுகூர்த்தம் என்பார்கள். இது யோகப்பயிற்சிகள் செய்ய உகந்த நேரம், ஏனென்றால் இயற்கையிடமிருந்து இந்த நேரத்தில் கூடுதல் உதவி கிடைக்கிறது. 

#7 உடலை வற்புறுத்தி தூக்கத்தைப் புறக்கணிக்காதீர்கள் 

உடலுக்கு எவ்வளவு ஓய்வு தேவை என்பது நீங்கள் எந்த அளவு செயல் செய்கிறீர்கள் என்பதைப் பொருத்தது. தூக்கமும் உணவும் எப்போதும் ஒரே அளவாக இருக்கவேண்டும் என்று உறுதியாக வகுக்கத்தேவையில்லை. உங்கள் செயல் குறைவாக இருக்கும்போது குறைவாக உண்கிறீர்கள், அதிகமாக செயல் செய்யும்போது சற்று அதிகமாக உண்பீர்கள். இது தூக்கத்திற்கும் பொருந்தும். உடல் போதுமான அளவு ஓய்வெடுத்த பிறகு அது தன்னால் எழுந்துவிடும், அது 3 மணியானாலும் சரி, 8 மணியானாலும் சரி. உங்கள் உடல் அலாரம் சப்தத்தினால் எழக்கூடாது. போதுமான அளவு ஓய்வெடுத்ததும் அது தன்னால் விழித்தெழ வேண்டும். உடலை வற்புறுத்தி தூக்கத்தைப் புறக்கணித்தால், உடலும் மனதும் திறம்பட செயல்படும் ஆற்றல் குறைந்துவிடும். அதனால் உடலை ஒருபோதும் வற்புறுத்தி விழித்திருக்கச் செய்யக்கூடாது. தேவைப்படும் ஓய்வை நீங்கள் உடலிற்குக் கொடுக்க வேண்டும். ஆனால் படுக்கையை கல்லறையைப் போல பயன்படுத்தினால், உடல் வெளியே வர விரும்பாது. யாராவது உங்களை கல்லறையிலிருந்து எழுப்பவேண்டும்! உங்கள் வாழ்க்கையை நீங்கள் எப்படிக் கையாளுகிறீர்கள் என்பதைப் பொருத்தது இது. வாழ்க்கையைத் தப்பித்துக்கொள்ளும் மனநிலையில் நீங்கள் இருந்தால், இயல்பாகவே அதிகம் சாப்பிட்டு அதிகம் தூங்குவீர்கள். 

#8 சாப்பிட்ட உடனே தூங்காதீர்கள் 

இப்படி சிலர் இருக்கிறார்கள், வயிறுநிறைய உணவு சாப்பிட்டு உடலை மந்தமாக்காவிட்டால் அவர்களால் தூங்கமுடியாது, அவர்களுடைய மனநிலையால் அவர்கள் இப்படி இருப்பார்கள். தூங்குவதற்கு முன் ஜீரணம் நடப்பதற்கு போதுமான நேரம் கொடுக்க வேண்டும். சாப்பிட்டு இரண்டு மணி நேரத்திற்குள் தூங்கிவிட்டால் நீங்கள் சாப்பிட்ட உணவில் 80% வீணாகும் என்றே நான் சொல்வேன். வயிறு நிறையாமல் உங்களால் தூங்கமுடியாத நிலையில் நீங்கள் இருந்தால், இந்தப் பிரச்சனையை நீங்கள் சரிசெய்ய வேண்டும். இது தூக்கத்தைப் பற்றியதல்ல, இது ஒருவித மனநிலையைக் குறிக்கிறது.

#9 சரியான திசையில் தலைவைத்துத் தூங்குவது 

உங்கள் உடல் கிடைநிலைக்கு வரும்போது, உடனே உங்கள் நாடித்துடிப்பு குறைவதை கவனிக்கமுடியும். உடலில் இந்த மாற்றம் நிகழ்வதற்குக் காரணம், கிடைநிலையிலும் அதே வேகத்தில் இரத்தத்தை நாளங்களுக்குள் செலுத்தினால், தலைக்கு அதிக இரத்தம் செலுத்தப்பட்டு சேதம் ஏற்படலாம். இதயத்திற்குக் கீழே போகும் இரத்தநாளங்களோடு ஒப்பிடும்போது, மேலே போகும் நாளங்கள் மிகவும் மெல்லியதாய் இருக்கின்றன. மூளைக்கு வரும்போது, மயிரிழை போல மெல்லியதாய் இருக்கின்றன. அந்த இரத்தநாளங்களால் அதிக இரத்தத்தை ஒருதுளிகூட எடுத்துக்கொள்ள இயலாது. நீங்கள் தூங்கும்போது, உங்கள் தலையை வடக்கு நோக்கி வைத்தபடி 5 முதல் 6 மணி நேரத்திற்கு இருந்தால், பூமியின் காந்தசக்தி மூளையில் அழுத்தத்தை ஏற்படுத்தும், ஏனென்றால் உங்கள் இரத்தத்தில் இரும்புச்சத்து முக்கிய அங்கம் வகிக்கிறது. இப்படி வடக்கில் தலைவைத்துப் படுத்தால் இறந்துவிடுவீர்கள் என்று கிடையாது. ஆனால் இப்படி தினமும் செய்தால், நீங்கள் பிரச்சனையை கேட்டு வாங்கிக்கொள்கிறீர்கள். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேற்பட்டவராய் நீங்கள் இருந்து, உங்கள் இரத்தநாளங்கள் வலுவிழந்து இருந்தால், இதனால் அடைப்புகள் ஏற்பட்டு வாதம் வந்துவிடலாம். உடல் வலுவாக இருந்தால் உங்களுக்கு தூக்கம் கெட்டுப்போகலாம், ஏனென்றால் மூளையில் சாதாரணமாக இருப்பதைவிட அதிக இரத்த ஓட்டம் இருக்கும். நீங்கள் வடதுருவத்தில் இருந்தால், தூங்கும்போது தலைவைக்க சிறந்த திசை கிழக்குதான். வடகிழக்கு, பரவாயில்லை. அடுத்தது மேற்கு. வேறு வழியில்லை என்றால், தெற்கு. வடக்கில், கூடாது. தென்துருவத்தில், உங்கள் தலையை தெற்கு நோக்கி வைக்கக்கூடாது. 

#10 உங்களை தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள் 

மனிதனின் தன்மை எத்தகையது என்றால், மற்ற உயிரினங்கள் அனைத்தும் தாம் இருக்கும் சூழலுக்கேற்ப தம்மை மாற்றிக்கொள்கின்றன. ஆனால் மனிதனோ தான் விரும்பும்விதமாக சூழ்நிலைகளை மாற்றக்கூடியவனாக இருக்கின்றான். அதுதான் நம்மை தனித்துவம் வாய்ந்தவர்களாக்குகிறது. உங்கள்மீது சிறிதேனும் உங்களுக்கு அக்கறை இருந்தால், உங்களுக்குள் என்ன உள்ளீடு போகிறது என்பது குறித்த கவனத்துடன் இருக்கவேண்டும். நீங்கள் எவ்வளவு காலம் வாழ்கிறீர்கள் என்பதல்ல, நீங்கள் எவ்வளவு அற்புதமாக வாழ்கிறீர்கள் என்பதே கேள்வி. என்ன கேட்கிறீர்கள், என்ன பேசுகிறீர்கள், என்ன சாப்பிடுகிறீர்கள் என்று அனைத்திற்கும் யோகமுறையில் பயிற்சியளிக்கப்படுகிறது. வாழும் சூழல், நாக்கு, மனது மற்றும் உடலை தூய்மையாக வைப்பதன் மூலம், உங்கள் இருப்பில் ஒரு சுதந்திரத்தையும் புத்திசாலித்தனத்தையும் பரவசத்தையும் உணரமுடியும்.

உங்களுக்கு நான் ஒரு ஜோக் சொல்கிறேன். இரண்டு பிரிஸ்பிட்டேரியன் கன்னியாஸ்திரிகள் மொன்டானா கிராமப்பகுதியில் காரில் சென்றுகொண்டு இருந்தார்கள். அப்போது பெட்ரோல் தீர்ந்துவிட்டது. அதனால் அவர்கள் ஐந்து மைல் தூரத்திலிருந்த ஒரு வயலுக்கு நடந்து சென்றார்கள். அங்கே சேறும் சகதியுமாக வேலை செய்துகொண்டிருந்த விவசாயியிடம் “எங்களுக்கு கொஞ்சம் பெட்ரோல் வேண்டும்” என்று கேட்டார்கள். அவர், “என் டிராக்டரில் இருக்கிறது, எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார். அவர்கள் டிராக்டர் நிற்கும் இடத்திற்கு சென்றார்கள், ஆனால் அவர்களிடம் பெட்ரோல் எடுத்துச்செல்ல பாட்டில் எதுவுமில்லை. வீட்டிலிருந்தபடியே சிறுநீர் கழிக்கப் பயன்படுத்தப்படும் பழைய பாத்திரம் ஒன்றைக் கண்டார்கள். டிராக்டரிலிருந்து பெட்ரோலை அந்த பாத்திரத்தில் நிரப்பிக்கொண்டு, மீண்டும் கார் இருக்கும் இடத்திற்கு ஐந்து மைல் தூரம் நடந்துசென்றார்கள். மெதுவாக அந்தப் பாத்திரத்திலிருந்து பெட்ரோலை காரில் ஊற்றினார்கள். அப்போது அந்தப்பக்கமாக வந்த பாப்டிஸ்ட் பாதிரியார் ஒருவர் இதைப் பார்த்தார். உடனே அவர்களைப் பார்த்து, “சிஸ்டர்ஸ், உங்க விசுவாசத்தை நான் பாராட்டுகிறேன், ஆனால் இது இப்படி வேலைசெய்யாது!” என்று கூறிச்சென்றார். அதையும் இதையும் ஆங்காங்கே எடுத்துக்கொண்டு உங்கள் உடலுக்குள் போட்டால், அது வெகுதூரம் போகாது.

நன்றி - ஈஷா மையம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com