எச்சரிக்கை! அதைக் குடிக்காதீர்கள்!

நாம் பெரும்பாலும் நல்லது என்று நினைத்து செய்யும் செயல்கள் நமக்கே தீங்காக
எச்சரிக்கை! அதைக் குடிக்காதீர்கள்!

நாம் பெரும்பாலும் நல்லது என்று நினைத்து செய்யும் செயல்கள் நமக்கே தீங்காக விளைந்துவிடும். குடிப்பது தவறு என்ற கொள்கைப் பிடிப்பு உடையவர்கள், அதை விட தவறான சிலவற்றை குடித்து தங்கள் உடல்நலத்துக்கு தீங்கு விளைவித்துக் கொள்கிறார்கள். இது என்ன புதுக் கதை என்று யோசிக்கிறீர்களா? இதை பெரும் செலவு செய்து ஒரு ஆராய்ச்சியின் முடிவில் கண்டு பிடித்துள்ளார்கள். டயட் குளிர்பானங்கள், சோடா போன்றவற்றைக் குடித்தால் உடல் எடை அதிகரிக்கும் என்பது தான் அந்த ஆய்வின் குறிக்கோள்.

டயட் என்று போட்டிருக்கிறதே இது உடல் எடையைக் குறைக்கும் என்று நினைத்து நீங்கள் அவற்றை டின் டின்னாக வாங்கிக் குடித்துக் கொண்டிருக்க, அது உங்களுக்கே தெரியாமல் ஒபிசிடி பிரச்னையை ஏற்படுத்திவிடும் என்று ஆணித்தரமாக சொல்கிறது அந்த ஆய்வு. உண்மையில் நீங்கள் உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருக்கிறீர்கள் என்றால் உடனடியாக சோடா அல்லது டயட் சாஃப்ட் ட்ரிங்ஸ் போன்றவற்றை குடிப்பதை நிறுத்திவிடுங்கள். அப்போதுதான் சில நாட்களிலேயே உடல் எடை குறையும் என்கிறது இந்த ஆய்வு.

ஆல்கஹால் மற்றும் இனிப்பான குளிர்ப்பானங்களுக்கு மாற்றாக சோடா மற்றும் டயட் குளிர்பானங்களை சிலர் குடிக்கிறார்கள். ஆல்கஹால் அல்லது மற்ற குளிர்பானங்களைப் போல் இது கெடுதல் இல்லை, சோடா தானே, இது சாப்பிட்ட உணவை செறிக்க உதவும், அல்லது உடல் எடையைக் குறைக்க உதவும், உடல் நலத்துக்கும் நல்லது என்று பலர் நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறு. உண்மையில் இந்த கார்பனேட்டட் சோடா மற்றும் டயட் குளிர்பானங்கள் உங்கள் வயிற்றை காலியாக இருப்பது போல உணரச் செய்யும். அதனால் நீங்கள் அதிகப்படியான உணவை சாப்பிடத் தொடங்கிவிடுவீர்கள். இது தொடர்கையில் ஒரு கட்டத்தில் உங்கள் உடல் எடை அதிகரித்து விடும் என்கிறார்கள் பாலஸ்தீனியன் பிர்சியட் யூனிவர்சிட்டியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். express.co.uk இணையதளத்தில் இக்கட்டுரையை வெளியிட்டுள்ளார்கள்.

மேலும் அவர்கள் கூறுகையில், இந்த குளிர்பானங்களில் அடைக்கப்பட்டுள்ள கார்பன் டை ஆக்ஸைட் பசியைத் தூண்டும் க்ளெரிலின் (ghrelin) எனும் ஹார்மோனைத் தூண்டிவிடுகிறது என்றார்கள்.

இந்த ஆராய்ச்சிக்காக எலிகளை கிட்டத்தட்ட ஒரு வருடம் பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். சில எலிகளுக்கு தண்ணீரும் வேறு சில எலிகளுக்கு அதிக இனிப்பான குளிர்பானங்களை புகட்டினார்கள். இன்னும் சில எலிகளுக்கு சோடா மற்றும் டயட் குளிர்பானங்களை குடிக்கச் செய்தார்கள். ஆய்வு முடிவில் தண்ணீர் குடித்த எலிகள் அப்படியே இருந்தன. அதிக இனிப்புள்ள குளிர்பானங்களைக் குடித்த எலிகள் சற்று எடை அதிகரித்திருந்தன.

ஆனால் இவற்றை விட அதிக எடை போட்ட எலிகள் யார் தெரியுமா? சாட்சாத் டயட் குளிர்பானங்களும் சோடாக்களையும் குடித்த எலிகள் தான். அவை மிகவும் பருத்து பெருச்சாளிகள் போலத் தோற்றமளித்தன. அவற்றின் முக்கியமான உறுப்புக்களில் எல்லாம் கொழுப்பு அதிகரித்திருந்ததை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்தனர். இது தவிர அவற்றின் க்ளெரிலின் ஹார்மோன் சுரப்பு அளவுகளும் கணிசமாக அதிகரித்திருந்தன. எலிகளுக்கு ஏற்பட்ட கதி தான் சோடா மற்றும் டயட் பானங்களை குடிக்கும் மனிதர்களுக்கும் என்று முத்தாய்ப்பாக கூறுனார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com