உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் இருக்க வேண்டுமா?

இன்று (மே 17) உலக உயர் ரத்த அழுத்த தினமாக (Hyper Tension Day) அனுசரிக்கப்படுகிறது.
உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் இருக்க வேண்டுமா?

இன்று (மே 17) உலக உயர் ரத்த அழுத்த தினம் (Hyper Tension Day) அனுசரிக்கப்படுகிறது.

அறியாமை வரம் என்று ஒரு பழமொழி உண்டு. ஆங்கிலத்தில் இதனை Ignorance is bliss என்பார்கள். ஆனால் உயர் ரத்த அழுத்தத்தைப் பொருத்தவரையில் இந்தப் பழமொழி சுத்தமாகப் பொருந்தாது. காரணம் கவனிக்கப்படாத உயர் ரத்த அழுத்தம், மூளையில் உள்ள ரத்தக் குழாய்களில் பாதிப்புக்கள் ஏற்படுத்தி ஸ்ட்ரோக்கை (பக்கவாதம்) வரவழைத்துவிடும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

தமக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பதே பலருக்குத் தெரியாது. அந்தளவுக்கு சத்தமே இல்லாமல் ஆளை அடித்துவிடும். இந்தியாவைப் பொருத்தவரையில் உயர் ரத்த அழுத்தப் பிரச்னைகள் மிகப் பரவலாக உள்ளது. மூன்றில் ஒரு பகுதி நகர்ப்புற மக்களுக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளதென்றும், கிராமப்புறங்களில் இதுவே நான்கில் ஒரு பகுதியினருக்கு இப்பிரச்னை உள்ளது என்று சமீபத்தில் வெளியான ஜர்னல் ஆஃப் ஹைபர் டென்ஷன் என்ற பத்திரிக்கைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர் ரத்த அழுத்தம் அதிகரிப்பதால், ரத்த உறைவு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து ஏற்படும். இது இதயத்தை பாதிக்கும்போது இதயம் வீங்கிவிடும். மாரடைப்பு வரும். மூளை பாதிக்கப் படும்போது பக்கவாதம் வரும் என்கிறார் புது தில்லியிலுள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையின் இயக்குனர்  தபன் கோஸ்.

உயர் ரத்த அழுத்தப் பிரச்னையால் இதயத்தில் தமணி சுருங்கிவிடுகிறது. ரத்த ஓட்டம் பாதிப்படைந்து, ரத்த உறைவும் ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து மூளை பாதிப்படைந்து பக்கவாதம் ஏற்படும் ஆபத்துக்கள் அதிகம் உள்ளன என்கிறது அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்.

இரண்டு வகையான பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. முதலாவதாக ஐஸ்கிமிக் ஸ்ட்ரோக் (ischemic stroke), இது மூளையில் ரத்த ஓட்டப் பற்றாக்குறையினால் ஏற்படுவது, இரண்டாவதாக ஹெமராகிக் ஸ்ட்ரோக் (hemorrhagic stroke), இது மூளையில் ரத்தகசிவால் ஏற்படும் பக்கவாதம்.

முதலாக கூறப்பட்ட ஐஸ்கிமிக் ஸ்ட்ரோக் அல்லது ப்ரெயின் அட்டாக்கிற்கான மூல காரணம் உயர் ரத்த அழுத்தம்தான். இது இதயத்தையும் செயலிழக்கச் செய்துவிடும். முதலில் ஐஸ்கிமிக் ஸ்ட்ரோக் வந்தபின் அது ஹெமராகிக் ஸ்ட்ரோக்காக மாறும் ஆபத்து உள்ளது என்று கூறினார் நொய்டாவிலுள்ள ஜெய்பி மருத்துவமனையின் கார்டியாலஜி பிரிவு இயக்குனர் குன்ஜன் கபூர். 

50 சதவிகித அடைப்புக்கள் மற்றும் மூளையில் ரத்த கசிவுகளுக்கான காரணியான உயர் ரத்த அழுத்தம் ஐஸ்கிமிக் ஸ்ட்ரோக் ஏற்படச் செய்கிறது என்று கூறுகிறார் விபுல் குப்தா. இவர் குர்கானிலுள்ள அர்டெமிஸ் மருத்துவமனையின் இயக்குனராவார்.

உயர் ரத்த அழுத்தம் இருப்பதை விரைவில் கண்டுபிடித்தால் அதற்கான சிகிச்சையைத் தொடங்கி, பல சிக்கல்களையும் உயிர் இழப்புக்களையும் தடுத்துவிடலாம். சராசரி மனிதனின் ரத்த அழுத்தம் 120/80 மி.மீ மெர்க்குரி. நடுத்தர வயதில் உள்ள ஆரோக்கியமான மனிதர்களுக்கு இந்த அளவானது சிறிது மாறுபடும். 139/89 மி.மீ மெர்க்குரி என்னும் அளவைக் கூட நார்மல் என்றே கூறலாம். 140/90 முதல் 160/110 மி.மீ மெர்க்குரி வரை உள்ள அளவுகள் சற்று உயர்ந்த ரத்த அழுத்தத்தைக் குறிக்கும். இதற்கு மேல் உள்ள அளவுகள் மிகவும் அதிகப்படியான உயர் ரத்த அழுத்தத்தினைக் குறிக்கும். அதுவே ஸ்ட்ரோக் போன்ற பிரச்னைகளுக்கான முக்கிய காரணம் என்கிறார் புது தில்லி வெங்கடேஸ்வர் மருத்துவமனையின் கார்டியாலஜி துறை இயக்குநர் டாக்டர் பி.கே.துபே

உயர் ரத்த அழுத்தத்திற்கான சரியான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில், சிலவற்றை குறிப்பிடலாம். உடல் உழைப்பு இல்லாமை, புகை பிடிக்கும் பழக்கம், மது அருந்துவது, உணவில் அதிக உப்பு சேர்த்துக் கொள்வது, மன அழுத்தம், ஹார்மோன்களின் அளவு மாறுதல், சிறுநீரகக் கோளாறுகள், மரபு வழியாக ஏற்படும் பிரச்னைகள் போன்றவற்றால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

உடல் எடை அதிகம் இருப்பதால் உயர் ரத்த பிரச்னைகள், இதய நோய்கள் மற்றும் டைப் 2 டயபடீஸ் பிரச்னைகள் ஏற்படுத்தி ஸ்ட்ரோக் ஏற்படும் ஆபத்துக்கள் அதிகம் உள்ளது என்கிறார் புது தில்லி, மாக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையைச் சேர்ந்த நியூராலஜி துறை சீனியர் இயக்குநர் ஜெ.டி.முகர்ஜி.

தலைவலி, நெஞ்சு வலி, படபடப்பு, மூச்சிரைப்பு, தாறு மாறான இதயத்துடிப்பு, மயக்கம், வாந்தி, மூக்கில் ரத்தக்கசிவு, ஆகியவை உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகள். பெரும்பாலோருக்கு இந்த அறிகுறிகள் எதுவும் வெளியில் தெரியாது.

திடீரென்று மயக்கம், பக்கவாதம், மாரடைப்பு என்று ஏதாவது ஒன்று வந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இந்த உயர் ரத்த அழுத்தம் பெரும்பாலும் உடலில் அமைதியாக இருந்து ஆளைக் கொல்லும் தன்மை இருப்பதால் விரைவில் இதைக் கண்டுபிடித்து சிகிச்சையை தொடங்கிவிடுவது தான் இதன் விளைவுகளிலிருந்து தப்புவதற்கான ஒரே வழி. தவிர வாழ்க்கைமுறைகளில் ஒழுங்கை கடைப்பிடிப்பதும் முக்கியம். ஆரம்பக் கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டால் மருத்துவர் பரிந்துரைக்கும் வாழ்க்கைமுறை, உணவுக் கட்டுபாடு, உடற்பயிற்சி மற்றும் மருந்துக்களை தொடர்ந்து கடைபிடிப்பதன் மூலம் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். புகை மற்றும் மதுப்பழக்கத்தை விடுவதும் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படும் என்றார் புது தில்லி பி எல் கே சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நியூரோ சர்ஜன் அனில் கன்சல். 

நிறைய பழங்கள், காய்கறிகள் தினமும் சாப்பிட வேண்டும். பால் பொருட்கள், ஐஸ் க்ரீம், சீஸ், இறைச்சி போன்ற கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிர்த்துவிடுவதும், குப்பை உணவுகளை சாப்பிடாமல் இருப்பதும் உயர் ரத்த அழுத்தத்தை தடுக்கும் சில வழிமுறைகள்.

உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால் ரத்த அழுத்தம் ஏற்படாது. எப்படியோ அது வந்துவிட்டால் சோர்ந்து விடாமல் விடா முயற்சியுடன் மருத்துவம் செய்துகொள்ள வேண்டும். தினமும் உடலுக்கும், மனத்துக்கும் நல்ல பயிற்சிகள் தர வேண்டும்.  அதிகாலை நடைப்பயிற்சி, எளிமையான சில உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்துவர வேண்டும். யோகா செய்வது புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். இதயத்துக்கு நல்லது, மன அழுத்தத்தைக் குறைக்கும் என்று தெரிவித்தார் தில்லியைச் சேர்ந்த ஃபிட்னெஸ் மற்றும் நியூட்ரிஷனிஸ்ட் ரட்சித் துவா.

- விவேக் சிங் செளவான், (தமிழில் உமா ஷக்தி)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com