போலி மருத்துவர்களாக சித்திரிக்கப்படும் இந்திய முறை மருத்துவர்கள்: யுனானி மருத்துவர்கள் போராட்டம்

இந்திய முறை மருத்துவர்கள் போலி மருத்துவர்கள் போன்று சித்திரிக்கப்பட்டு காவல் துறையினரால் கைது செய்யப்படுவதை எதிர்த்து யுனானி மருத்துவர்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய முறை மருத்துவர்கள் போலி மருத்துவர்கள் போன்று சித்திரிக்கப்பட்டு காவல் துறையினரால் கைது செய்யப்படுவதை எதிர்த்து யுனானி மருத்துவர்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆங்கில மருத்துவ முறையைப் பயன்படுத்திய யுனானி மற்றும் சித்த மருத்துவர்கள் மீது
ஊரக நலப்பணிகள் இயக்கக அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில், காவல் துறையினர் அவர்களை அண்மையில் கைது செய்தனர்.
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், யுனானி மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவ இயக்கக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக தென்னிந்திய யுனானி மருத்துவச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஹிமுல்லா கூறியது:
இந்திய முறை மருத்துவர்கள் மீது ஏதேனும் புகார் இருந்தால், அதனை மாநில ஆயுஷ் துறையின் இணை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்ககத்தின் பதிவாளர் அறிவுறுத்தலின் பேரில், அந்தந்த மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விதிமுறை. ஆனால் இந்த விதிமுறையைப் பின்பற்றுவதில்லை.
இந்திய முறை மருத்துவர்களும் ஆங்கில மருத்துவர்கள் போன்று ஐந்தரை ஆண்டுகள் படிப்பை முடித்துவிட்டுதான் மருத்துவச் சேவையில் ஈடுபடுகிறோம். அந்தந்த மருத்துவத் துறையின் கவுன்சிலில் பதிவு செய்துவிட்டுதான் பணியாற்றுகிறோம். ஆனால், இந்தியமுறை மருத்துவர்களை, போலி மருத்துவர்களை போன்று தொடர்ந்து சித்திரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும். ஏற்கெனவே, இந்திய முறை மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுத்த காவல் துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
இதையடுத்து, இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையர் மோகன் பியாரேவைச் சந்தித்து அவர்கள் மனு அளித்தனர். சுகாதாரத் துறை செயலருக்கும் மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com