கோடைகால சரும பிரச்னைகளுக்கு இதோ தீர்வு!

இன்றைய தினங்களில், ஒருவர், எதிர்படும் போதெல்லாம் முதல் விசாரிப்பே, 'உஷ்,
கோடைகால சரும பிரச்னைகளுக்கு இதோ தீர்வு!

இன்றைய தினங்களில், ஒருவர், எதிர்படும் போதெல்லாம் முதல் விசாரிப்பே, 'உஷ், அப்பாடி, போதுமா   வெயில்?  என்றுதானே கேட்கிறோம்? 

சென்னை பாஷையில் சொல்லப் போனால், 'உங்க வீட்டு வெயில், எங்க வீட்டு வெயில் இல்ல. சும்மா சாத்து சாத்துனு சாத்துது' என்பதுதான். 

இவ்வளவு பயங்கரமான சூட்டில், வியாதிகளும் பஞ்சமில்லாமல், அழையா விருந்தாளியாக நம்மை வந்து அடைகின்றன. அதுவும் சரும நோய்கள், நான், நீ, என்று போட்டி போட்டுக் கொண்டு அட்டென்டென்ஸ் கொடுத்து விடுகின்றன. 

இந்த உஷ்ணத்திலிருந்து, நம் சருமத்தை,  எப்படி   பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது பற்றி Dr. விஷ்ராந்த் S. P.M. D. Dermatologist, நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். 

'இதைப் போன்ற வெயில் நாட்களில் சருமத்தில், குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும், ஒவ்வொரு விதமான  பாதிப்புகள் ஏற்படுகின்றன. (நான்கு முதல் பதினெட்டு வயது உள்ளவர்கள் வரை குழந்தைகள் என்கிற கணக்கில்தான் நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்.) 

வெயில் நாட்களில், குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவது,  prickly heat என்று கூறப்படும் வியர்க்குருவினால்தான். எண்ணை சுரப்பிகளும், வியர்வை சுரப்பிகளும் அடைத்துக் கொள்வதால், வியர்க்குரு உண்டாகிறது.  இது போன்ற நாட்களில், பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும்.  நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். சின்னக் குழந்தைகளுக்கு உபயோகப்படுத்தும் சோப், மற்றும் பவுடரை உபயோகமாகப் படுத்த வேண்டும். 

அடுத்ததாக முகப்பருக்கள் உண்டாகும். அவை, முகம் மட்டுமல்லாமல், கழுத்து, நெஞ்சு,தோள்பட்டை ஆகிய இடங்களில் தோன்றும்.  அது போன்ற சமயங்களில், ஒரு நாளைக்கு, குறைந்தபட்சம் நான்கு அல்லது ஐந்து முறைகள் முகத்தை கழுவ வேண்டும். மெல்லிய காட்டன் துணியால், அழுத்தித் தேய்க்காமல், ஒற்றியவாறு துடைக்க வேண்டும். உணவில், உப்பு, சர்க்கரை இவற்றின் அளவைக் குறைக்க வேண்டும். 

இன்னொரு முக்கியமான விஷயம். இந்த சம்மர் சீசனில், அநேக பெற்றோர்கள், தங்களின் குழந்தைகளை, ஸ்விம்மிங் க்ளாசில் போடுகிறார்கள். அந்தத் தண்ணீரில், அதிகப்படியான க்ளோரின் கலந்திருக்கும். வெப்பக்கதிர்களும் க்ளோரினும் சேர்ந்து எதிர்மறை விளைவுகளை உண்டாக்குகிறது. , ஏற்கனவே உலர்ந்த சருமத்தை, மேலும் ட்ரை ஆக்கி, தோலில், எரிச்சலை ஏற்படுத்துகிறது. தோலில் வெடிப்புகளும் உண்டாகின்றன. அதனால், நீச்சலுக்குச் செல்பவர்கள், நீந்தப்போவதற்கு முன், லேசாக  சன் க்ரீம் அப்ளை செய்து கொள்ள வேண்டும். நீந்தி முடித்த பின்னர், தலைக்கு மைல்ட் ஷாம்பூ மற்றும் உடலுக்கு மைல்ட் சோப்பு போட்டு குளிக்க வேண்டும். தலைமுடியையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், folliculitis என்று சொல்லப்படும், பாக்டீரியாவினால் அடைப்பு உண்டாகும். 

இந்த சீசனில், குழந்தைகளுக்கு, அம்மை நோய் உண்டாக வாய்ப்புகள் அதிகம் உண்டு . வைரல் இன்ஃபெக்ஷன் அதிகமாக ஏற்படும் ஆகையால், வராமல் தடுக்க, நீர்ச்சத்து அதிகமாக உள்ள காய்கள், மற்றும் பழங்களை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

மேலும் ஃபங்கல் இன்ஃபெக்ஷனால் வரும், தேமல் மற்றும் படர்தாமரை போன்றவைகள். இவைகள் வராமல் தடுக்க, குளித்தபின், ஈரத்தோடு துணியைப் போட்டுக்கொள்ளக் கூடாது. ஃபேன் காற்றில் நன்கு சருமத்தை உலர விட்டு பின்பு தான் அணிந்து கொள்ள வேண்டும். 

வியர்க்குரு, தேமல், படர்தாமரை போன்றவை குழந்தைகள், பெரியவர்கள் இருவருக்குமே பொதுவாகவே வருவதுதான். 

அதிகப்படியான உஷ்ணத்தால், ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, herpes zoster என்று சொல்லப்படும் அக்கி வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. சருமத்தில் எரிச்சல், சிறிய நீர்க்கொப்புளங்கள் ஆகியவைகள் இது வருவதற்கு உண்டான அறிகுறிகள்  எனக்கொள்ளலாம். இந்த பாதிப்பு உள்ளவர்கள், நீர்ச்சத்து அதிகமாக உள்ள காய்கள், நிறைய பழங்கள் சாப்பிட வேண்டும். 

மார்க்கெட்டிங் லைனில் 

மார்க்கெட்டிங் வேலையில் உள்ளவர்களுக்கு, sun burn வரலாம். கண் எரிச்சலுடன், தோலில்  எரிச்சல், வெடிப்புகளும் உண்டாகி, தோல் உரிய ஆரம்பிக்கும். ஆகையால், வெளியே செல்லும் போது, பெண்கள், முழு கையுறை, கூலிங் க்ளாஸ், ஆண்கள், முழுக்கை சட்டையை அணிவதுடன், கருப்பு கண்ணாடி ஆகியவற்றை அணிந்து கொள்ள வேண்டும். 

ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு முதல் ஐந்து லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். 

உடல் dehydrate ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 

உணவில், கேசரி பௌடர் போன்ற அங்கீகரிக்கப்படாத கலர் பொடிகளைத் தவிர்க்க வேண்டும்.

சரும நோய்கள் பாதிக்கப்பட்டவர்களின் துணியை, தனியாகத் துவைத்து, அரைமணிநேரம் சுடுநீரில் ஊறவைத்துக் காயப்போட வேண்டும். 

உங்களின் உடம்பையும் கவனித்துக் கொண்டு, அடுத்தவர்களின் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுங்கள்’ என்று கூறி முடித்தார்.

டாட்காம் வாசகர்களே, வெயிலோடு விளையாடாதீங்க. அங்க இங்கன்னு அலைந்து வம்பை விலை கொடுத்து வாங்காதீங்க. 

நேர்காணல் - மாலதி சந்திரசேகரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com