ஸ்ரீ இராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் பயிலரங்கம்
Published on : 10th November 2017 02:34 AM | அ+அ அ- |
பிற நோய்களுக்கான மருந்துகளை புற்றுநோய்க்கு பயன்படுத்துவது தொடர்பாக இந்திய அமெரிக்க நிபுணர்களின் பயிலரங்கம் ஸ்ரீ இராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் வரும் திங்கள்கிழமை (நவ.13) நடைபெறுகிறது. இது தொடர்பாக பல்கலைக்கழகம் சார்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
புற்று நோய் சிகிச்சையிலுள்ள சிக்கல்கள், நிவாரணம் அளிக்கக்கூடிய சில மருந்துகளே உள்ள நிலைமை, புதிய மருந்து கண்டுபிடிப்பதற்கான அபரிமிதமான செலவு மற்றும் கடந்த சில ஆண்டுகளில் சிகிச்சைகளுக்குப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட மருந்துகளின் எண்ணிக்கை குறைவு ஆகியவற்றினால் மற்ற நோய்களுக்குப் பயன்படும் மருந்துகளை புற்று நோய்க்கு பயன்படுத்தலாமா என்று உலகெங்கும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
மற்ற நோய்க்கான பிக்ஸான்ட்ரோன் (pixantrone) என்ற மருந்து புற்றுநோய் சிகிச்சைக்கு நல்ல பயன் அளித்துள்ளது இந்த அனுகுமுறையை வலுப்படுத்தியுள்ளது.
இந்திய அமெரிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பின் ஆதரவில் நடைபெறும் இந்தப் பயிலரங்கை சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை (நவ.13) தொடங்கி வைக்கிறார். இரண்டு நாடுகளைச் சார்ந்த பிரபல புற்றுநோய் மருத்துவர்களும் ஆய்வாளர்களும் கலந்து கொண்டு தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.