டெங்கு: மாவட்ட மருத்துவமனைகளில் மருத்துவக் குழுவை அமைக்க உத்தரவு

டெங்கு உள்ளிட்ட அனைத்து காய்ச்சல் பாதிப்புகளிக்கு சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் 5 மருத்துவர்கள் கொண்டக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று சுகாதாரத் துறை

டெங்கு உள்ளிட்ட அனைத்து காய்ச்சல் பாதிப்புகளிக்கு சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் 5 மருத்துவர்கள் கொண்டக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
சுகாதாரத் துறையின் சார்பில், காய்ச்சல் தடுப்பு மற்றும் காய்ச்சல் மேலாண்மை குறித்து அனைத்து மாவட்ட மருத்துவ துணை இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், பொது மருத்துவத் துறை தலைவர்களுடனான காணொலி காட்சி ஆய்வு கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அமைச்சர் பேசியது:
வட்டார மருத்துவர்களால் ஒவ்வொரு வியாழக்கிழமையும் டெங்கு ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட வேண்டும். காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனைகளில் இறப்பு ஏற்பட்டால் அங்கு துணை இயக்குநர், இணை இயக்குநர், மருத்துவக் கல்லூரி பொது மருத்துவத் துறை பேராசிரியர், குழந்தைகள் நலத் துறை பேராசிரியர் ஆகியோர் அடங்கியக் குழு, இறப்பு குறித்து ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்கள் வியாழன், வெள்ளி, சனி ஆகிய 3 நாள்களுக்கு மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும்.
ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனையிலும் ஐந்து மருத்துவர்கள் கொண்டக் குழு ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் தொடர் காய்ச்சல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும். அரசு மருத்துவமனைகளுக்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகள், புறநோயாளி நுழைவுச் சீட்டு பெற காக்க வைக்கப்படாமல் நேரடியாக 24 மணி நேர காய்ச்சல் சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com