பிறந்து 4 நாள்களான குழந்தைக்கு இதய ரத்தக் குழாய் அடைப்பு நீக்கம்

பிறந்து நான்கு நாள்களேயான குழந்தைக்கு இதய ரத்தக் குழாயில் காணப்பட்ட அடைப்பு நீக்கப்பட்டுள்ளது.

பிறந்து நான்கு நாள்களேயான குழந்தைக்கு இதய ரத்தக் குழாயில் காணப்பட்ட அடைப்பு நீக்கப்பட்டுள்ளது.
சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த டாக்டர் காமாட்சி மெமோரியல் மருத்துவமனையில் இந்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதே மருத்துவமனையில், இதயத்தில் துவாரம் உள்ளதால் உடல் நீல நிறமாக மாறிய ஈராக்கைச் சேர்ந்த 6 வயது சிறுமிக்கும் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவமனையின் தலைவர் டாக்டர் டி.ஜி.கோவிந்தராஜன், குழந்தைகள் இதய சிகிச்சை நிபுணர் ஆர்.பிரேம்சேகர், குழந்தைகள் இதய அறுவைச் சிகிச்சை நிபுணர் பிரசாந்ஷா ஆகியோர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:
காரைக்குடியைச் சேர்ந்த தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தை சிவன்யாவுக்கு பிறக்கும்போதே, இதயத்தில் இருந்து ரத்தத்தை பிற உறுப்புகளுக்கு எடுத்துச் செல்லும் வலது புற ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டிருந்தது. குழந்தை கருவில் இருக்கும்போதே இந்தப் பிரச்னை கண்டறியப்பட்டிருந்தது. 
இதனையடுத்து குழந்தை பிறந்த நான்காவது நாளிலேயே, அதன் தொடைப் பகுதியில் சிறுதுளையிட்டு அதன் வழியாக குழாயைச் செருகி, சிறிய பலூன் உதவியுடன் இதயத்தில் அடைப்பு இருந்த பகுதிக்கு எடுத்து வலைக்குழாய் செல்லப்பட்டு பொருத்தப்பட்டது. பச்சிளங்குழந்தை என்பதால் இதயமும் சிறியதாகக் காணப்பட்டது. ரத்தக்குழாயும் மிகச்சிறியதாக இருந்தது. இருப்பினும் வெற்றிகரமாக வலைக்குழாய் பொருத்தப்பட்டு அடைப்பு நீக்கப்பட்டுள்ளது.
நீலநிறக் குழந்தை: ஈராக் நாட்டைச் சேர்ந்த 6 வயது குழந்தை பாத்திமா. இந்தக் குழந்தைக்கு பிறவியிலேயே இதயத்தில் அசுத்த ரத்தத்தைக் கையாளும் அறைகளுக்கும், சுத்த ரத்தத்தைக் கையாளும் அறைகளுக்கும் இடையே துவாரம் காணப்பட்டது. இதனால் அசுத்த ரத்தத்தைக் கையாளும் அறைகளில் சுத்த ரத்தமும், சுத்த ரத்தத்தைக் கையாளும் அறைகளில் அசுத்த ரத்தமும் கலக்க ஆரம்பித்தது. இதன் காரணமாக உடலில் உள்ள பிற உறுப்புகளுக்குச் செல்லும் ரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைந்து, உடல் நீல நிறமாக மாறியிருந்தது.
இந்தப் பிரச்னைக்காக ஏற்கெனவே அந்தக் குழந்தைக்கு துருக்கியில் மூன்று, திறந்த இதய அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதியாக ஓர் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. துருக்கியில் அரசியல் நிலைமை சரியில்லாத காரணத்தினால் குடும்பத்தினர் தில்லிக்கு வந்தனர். ஆனால், தில்லியில் உள்ள பிரபல மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்ய இயலாது என்று மறுத்துவிட்டனர். இதனையடுத்து காமாட்சி மருத்துவமனையில் இறுதியாக திறந்த நிலை அறுவைச் சிகிச்சை செய்து இதயத்தில் காணப்பட்ட துவாரம் அடைக்கப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்து சிறுமி சொந்த நாட்டுக்கு திரும்ப உள்ளார் என்று தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com