இளைய தலைமுறைக்கு இன்றைய தேவை ஊட்டச்சத்து உள்ள உணவே!

1982 முதல் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் முதல் வாரம், தேசிய ஊட்டச்சத்து வாரமாகக் கொண்டாடப்பட்டுகிறது. பல துறைகளில் வானளவு சாதித்திருந்தாலும் இன்னும் ஊட்டச்சத்து குறைபாடு என்பது தீராத பிரச்னையாகவே உள்ளது
இளைய தலைமுறைக்கு இன்றைய தேவை ஊட்டச்சத்து உள்ள உணவே!


1982 முதல் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் முதல் வாரம், தேசிய ஊட்டச்சத்து வாரமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சமூகம், பொருளாதாரம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் வானளவு சாதித்திருந்தாலும் இன்னும் ஊட்டச்சத்து குறைபாடு என்பது தீர்க்க இயலாத பிரச்னையாகவே உள்ளது. 

முன்னாள் பிரதமர் திரு மன்மோகன் சிங் அவர்கள் குறிப்பிட்டதுபோல, ஊட்டச்சத்து குறைபாடு ஒரு தேசிய அவமானம். உலகளாவிய பசிக்கான குறியீடு. 2016-ன் புள்ளி விவரப்படி, 118 வளரும் நாடுகளில் இந்தியா 97-ஆவது இடத்தில் உள்ளது. அதாவது, இந்திய மக்கள் தொகையில் 15 சதவிகிதத்தினர் உணவு அல்லது ஊட்டச்சத்து பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

வங்கத்தின் மிகப்பெரிய பஞ்சம் உள்ளிட்ட மிகப்பெரிய பஞ்சங்களைக் கடந்து பசுமை, வெண்மை, நீலப் புரட்சிகளை சாதித்த வரலாறு நம்முடையது. உணவுப் பாதுகாப்பினால் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க முடியாது. நல்ல ஊட்டச்சத்து நிலையை ஒருவர் அடைய மூன்று காரணிகள் முக்கியமாகத் தேவைப்படுகின்றன. உணவு இருப்பு, உணவை வாங்கும் திறன், உண்ணும் உணவை உட்கிரகிக்கும் திறன். எனவே விளைபொருட்கள், பொருளாதார காரணிகள், தூய்மையான சுற்றுப்புறம் போன்றவையும் ஊட்டச்சத்து மேம்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. 

இந்திய ஊட்டச்சத்தியல் துறையின் தந்தை எனப் போற்றப்படுபவர் மருத்துவர் சி.கோபாலன் அவர்கள். இவர் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் முன்னாள் இயக்குநர். ஊட்டச்சத்தியல் துறையினரால் வேதப் புத்தகமாக கருதப்படும் இந்தியர்களுக்கான பரிந்துரைக்கப்பட்ட உணவு விகிதங்கள் வெளிவர முக்கியக் காரணியாக இருந்தவர். அவரின் முக்கிய நோக்கம் மருந்தகங்களில் இருந்து மக்கள் வேளாண் பண்ணைகளுக்குத் திரும்ப வேண்டும் என்பதே. 

திரு. கோபாலன் அவர்களைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது, திருமதி. இந்திரா காந்தி அவர்களுடனான அவரது சுவராசியமான அனுபவம் குறித்து தெரிவித்திருந்தது ஞாபகத்துக்கு வருகிறது. திரு. சி. கோபாலன் அவர்கள், ஜவகர்லால் நேரு நினைவுச் சொற்பொழிவு ஆற்ற, 1980-ன் துவக்கத்தில் சென்றிருந்தபோது குழந்தைகளிடையே காணப்படும் ஊட்டச்சத்துக் குறைபாடு நிலை குறித்துப் பேசியுள்ளார். அதற்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள், நான் எங்குச் சென்றாலும் நல்ல ஆரோக்கியமான மகிழ்ச்சியான குழந்தைகளையே காண்கிறேன். ஏன் உங்களைப் போன்றவர்கள் இம்மாதிரியான தகவல்களைத் தருகிறீர்கள் என்று வருத்தப்பட்டுள்ளார். 

பிரதமர் போன்ற முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களை, தேர்ந்தெடுக்கப்பட்ட, தகுந்த முன்னேற்பாடுகள் கொண்டு தயார்படுத்தப்பட்ட இடங்களுக்கு அழைத்துச்செல்வதால், அவர்களுக்கு இவை குறித்து உண்மையான நிலவரம் தெரிய வருவதில்லை. ஆனால் அதன்பின், திருமதி. இந்திரா காந்தி அவர்கள் பல்வேறு திட்டங்களுக்கு உறுதுணையாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது என்று திரு. கோபாலன் அவர்கள் தெரிவித்திருக்கிறார். 

நல்ல ஊட்டச்சத்து உள்ள உணவுகளைத் தேடி நாம் எங்கும் அலைய வேண்டியதில்லை .அந்தந்த பருவங்களில் எளிதாகக் கிடைக்கும் உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளிலிருந்து மிக எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம். நாம் மலிவாகக் கருதும் முருங்கைக் கீரையின் மகத்துவத்தை மறைந்த கியூபாவின் அதிபர் பிடல் காஸ்ட்ரோ அவர்கள் உணர்ந்து, தமது நாட்டில் பயிரிட்டது நாம் அறிந்ததே. மருத்துவம் உச்சத்தில் வளர்ந்துவிட்ட இச்சூழலிலும் பப்பாளி இலையையும், நிலவேம்புக் குடிநீரையும் நாம் தேடிச் சென்றுகொண்டிருக்கிறோம் இல்லையா? உணவு ரீதியான அணுகுமுறையின் முக்கியத்துவத்தையே இது உணர்த்துகிறது. 

வணிக ரீதியாக விற்கப்படும் ஊட்டச்சத்து பானங்கள், குழந்தைகளுக்குத் தேவையான அனைத்துச் சத்துகளையும் கொடுக்கவல்லவை அல்ல. உள்ளிருக்கும் ஊட்டச்சத்துகளின் பட்டியலை வெளியிட்டிருந்தாலும், நாம் தினமும் கொடுக்கும் 10 கிராம் அளவிலான அவர்களது தயாரிப்பிலிருந்து நாம் பெறுவது மிகச் சொற்பம். அதற்குப் பதிலாக, நாம் பாரம்பரியமாகப் பயன்படுத்தும் சத்துமாவு, முளைக்கட்டிய பயறுகள், கேழ்வரகு, நிலக்கடலை மற்றும் பொட்டுக்கடலையிலிருந்து இன்னும் அதிகமான சத்துகளையும், சக்தியையும் நாம் எளிதாகப் பெறலாம். 

அண்மையில், ஜார்க்கண்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் 52 குழந்தைகள் இறந்ததாகத் தெரிவித்துள்ளனர். ரத்தசோகையானது குழந்தைகளுக்கும், வளர்இளம் பெண்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இதனால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுடன், மனவளர்ச்சிக் குறைபாடு ஏற்படுகிறது. பள்ளிப் படிப்பிலும், செயல்பாடுகளிலும் குறைவான பங்கேற்பு, தொடர்ச்சியான அசதி என இவர்களின் ஆற்றலை முடக்குகிறது. 

முளைக்கீரை, சிறுகீரை, சுண்டைக்காய், சீதாப்பழம், அன்னாசிப் பழம், கம்பு, கொள்ளு, சோயாபீன்ஸ், பட்டாணி, ஆட்டுக்கறி, ஈரல், முட்டை, மீன் போன்றவற்றில் இருந்து இரும்புச் சத்து அதிகம் கிடைக்கிறது. இவற்றோடு வைட்டமின் சி அதிகம் உள்ள நெல்லிக்காய் மற்றும் பழங்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இரும்புப் பாத்திரங்களில் சமைத்த உணவினை உண்பதால் உடலுக்கு இரும்புச் சத்து சேருகிறது. அங்கன்வாடி மையங்களில் இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ள மருந்துகள் வாரம் ஒருமுறை இலவசமாக வழங்கப்படுகின்றன. 

வளர்இளம் பெண்களின் இந்த ரத்தசோகையானது கவனிக்கப்படாமல் கர்ப்ப காலம் வரை நீடித்து, பிறக்கும் குழந்தைகளின் வளர்ச்சியையும் பாதிக்கிறது. சரிவிகித உணவு, சுத்தமான குடிநீர், தூய்மையான சுற்றுப்புறம், உடற்பயிற்சி, மன அழுத்தமற்ற வாழ்க்கை முறை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பே இன்றைய அத்தியாவசியமாகும். 

தாய்ப்பாலில் துவங்கி, தொடர்ச்சியாக செயற்கையாகப் பதப்படுத்தப்படாத ஊட்டம் உள்ள உணவுகளை நம் குழந்தைகளுக்கு அளிப்போம். இல்லாவிட்டால், அளப்பரிய செயல்களைச் சாதிக்கும் மனித ஆற்றல், மருந்தகங்களிலும், மருத்துவமனைகளிலும் முடங்கிவிடும்.

P. உமா மகேஸ்வரி,
உதவி பேராசிரியர்,
SDNB வைஷ்ணவ் கல்லூரி,
சென்னை.
(செல்போன் - 9443460886)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com