பெண்கள், குழந்தைகளை அதிகம் தாக்கும் ரத்தசோகை! - தப்பிப்பது எப்படி?

தேசிய குடும்பநல ஆய்வு (2015-2016) அறிக்கையின்படி தமிழகத்தில் 15-49 வயதிற்குட்பட்ட பெண்கள் 55% பேருக்கும், பிறந்து ஆறு மாதம் முதல் ஐந்து வயது வரை உள்ள இரண்டில் ஒரு குழந்தைக்கும்  ரத்தசோகை இருப்பது கண்ட
பெண்கள், குழந்தைகளை அதிகம் தாக்கும் ரத்தசோகை! - தப்பிப்பது எப்படி?

தேசிய குடும்பநல ஆய்வு (2015-2016) அறிக்கையின்படி தமிழகத்தில் 15-49 வயதிற்குட்பட்ட பெண்கள் 55% பேருக்கும், பிறந்து ஆறு மாதம் முதல் ஐந்து வயது வரை உள்ள இரண்டில் ஒரு குழந்தைக்கும்  ரத்தசோகை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

ஆண்களைவிடப் பெண்களுக்கே ரத்தசோகை வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது, ஐந்தில் ஒரு பகுதி ஆண்களே ரத்தசோகையால் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது மற்றொரு ஆய்வு. பெண்களுக்குப் பலவிதமான உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும் இந்த ரத்தசோகை, மூச்சிறைத்தல், படபடப்பு, உடல் சோர்வுடன் மாதவிலக்குப் பிரச்னைகளையும் உண்டாக்குகிறது. பிரசவத்தின் போது சிக்கல் ஏற்பட்டு தாய் இறந்து போவதற்கும் சில சமயங்களில் இந்த ரத்தசோகைதான் காரணமாக இருக்கிறது. முதலில் இந்த ரத்தசோகை என்பது என்ன? அது ஏற்படுவதற்கான காரணம் என்ன? என்று தெரிந்து கொள்வோம். 

ரத்தத்தில் இருக்க வேண்டிய சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதாவது அவ்வணுக்களினுள் இருக்கும் ஹீமோகுளோபின் அளவு குறையும்போது ரத்தசோகை ஏற்படுகிறது. இதை ஆங்கிலத்தில் அனிமியா (Anemia)  என்பார்கள். நோய்க்கிருமிகள் இடமிருந்து நம்மைப் பாதுகாப்பதே வெள்ளை ரத்த அணுக்களின் வேலை, அதேபோல் சிவப்பு ரத்த அணுக்களினுள் இருக்கும் ஹீமோகுலோபினின் வேலை உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் பிராணவாயுவை (Oxygen) கொண்டு சேர்ப்பதே. ரத்த சோகை ஏற்பட்டால் சரியாக பிராணவாயு கிடைக்காமல் செல்கள் சோர்வடைகின்றன அதனால் நாமும் விரைவாகச் சோர்வடைய நேரிடும்.

மஜ்ஜை எனப்படும் எலும்பின் மத்தியிலிருந்தே சிவப்பணுக்கள் உருவாகுகின்றன. இந்த அணுக்கள் சுமார் 100 முதல் 120 நாட்கள் வரையே உயிருடனிருக்கும், ஆகையால் இவை தொடர்ச்சியாக உற்பத்தியாகிக் கொண்டே இருக்க வேண்டும். இந்த ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச்சத்து, போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 ஆகிய ஊட்டச்சத்துக்கள் இன்றியமையாதவை ஆகும்.

100 மிலி ரத்தத்தில் எவ்வளவு கிராம் ஹீமோகுளோபின் இருக்க வேண்டும்?

நிலை

குழந்தை (6 மாதம் முதல் 5 வயது வரை)

கர்ப்பினிகள்

பெண்கள்

ஆண்கள்

ரத்த
சோகையற்ற நிலை

12-14 கிராம்

11-12 கிராம்

12-14 கிராம்

13-15 கிராம்

மிதமான ரத்தசோகை

10-12 கிராம்

10-11 கிராம்

10-12 கிராம்

12-13 கிராம்

மிகையான ரத்தசோகை

7-10 கிராம்

7-10 கிராம்

7-10 கிராம்

9-12 கிராம்

கடுமையான ரத்தசோகை

7 கிராமிற்கும் கீழ்

7 கிராமிற்கும் கீழ்

7 கிராமிற்கும் கீழ்

9 கிராமிற்கும் கீழ்

ரத்தசோகைக்கான அறிகுறிகள்:

  1. எப்போதும் சோர்வாக உணர்வது, அடிக்கடி மயக்கம் வருவது.
  2. கை, கால் மற்றும் முகத்தில் லேசான வீக்கம்.
  3. உட்கார்ந்திருக்கும் நிலையில் இருந்து திடீரென்று எழுந்தால் தலைச்சுற்றல் ஏற்படுவது.
  4. தோல், கண், நாக்கு மற்றும் நகங்கள் வெளிறிப் போனால் போல் காணப்படுவது.
  5. நகங்களில் குழி விழுவது.
  6. பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சியில் பிரச்னைகள் ஏற்படுவது.

ரத்தசோகை யாரை அதிகம் தாக்குகிறது?

  1. வளரும் பருவத்தில் இருக்கும் குழந்தைகள் மற்றும் 15-49 வயதிற்கு உட்பட்டவர்களே ரத்தசோகையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
  2. இளம் வயதில் கர்ப்பமடையும் பெண்கள்.
  3. பிரசவத்தின்போது அதிகமான உதிரப்போக்கு ஏற்பட்ட தாய்மார்கள்.
  4. கர்ப்பகாலத்தில் இரும்புச்சத்து மாத்திரைகளைச் சரியாக உட்கொள்ளாதவர்கள்.
  5. சரியான இடைவெளி இல்லாமல் கருத்தரிக்கும் பெண்கள்.
  6. கருக்கலைப்பு செய்துகொண்டவர்கள்.
  7. ரத்தசோகையுள்ள தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள்.
  8. மாதவிலக்கு பிரச்னைகள் உள்ள பெண்கள்.
  9. இரும்புச்சத்து குறைபாடு உடையவர்கள்.
  10. பதப்படுத்தப்பட்ட அல்லது பாட்டில்களில் அடைக்கப்பட்ட உணவுகளைத் தொடர்ச்சியாக உண்பவர்கள்.

 
பெண்களை ரத்தசோகை அதிகம் தாக்குவதற்கான காரணங்கள்:

  • மாதவிலக்கின்போது ஏற்படும் உதிரப்போக்கின் காரணமாக பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் சிறிது ரத்த இழப்பு ஏற்படுகிறது இதனால் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையையும் இவர்கள் இழக்கிறார்கள்.
  • கருச்சிதைவு, கருக்கலைப்பு மற்றும் பிரசவம் போன்ற நிகழ்வின்போது அதிகமான அளவில் உதிரப்போக்கு ஏற்படுவது.

ரத்தசோகையைத் தடுப்பது எப்படி?

  1. பிறந்த குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது.
  2. கேழ்வரகு, கம்பு, திணை, சாமை, பட்டைத் தீட்டப்படாத புழுங்கல் அரிசி மற்றும் வரகு ஆகிய தானிய வகைகளை அதிகம் உட்கொள்வது.
  3. கர்ப்பிணிப் பெண்கள் ஊட்டச்சத்துக்காகக் கொடுக்கப்படும் குறிப்பாக இரும்புச்சத்து மாத்திரைகளைச் சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
  4. அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள், இளம் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மாவை உட்கொள்வது ரத்தசோகையிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.

இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொண்டு, பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் குளிர்பானங்களை சாப்பிடுவதை நிறுத்தி ரத்தசோகையில் இருந்து நம்மை நாமே பாதுகாத்து கொள்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com