இளைஞர் விழுங்கிய இரும்பு கம்பித் துண்டுகள்: நுண்துளை சிகிச்சை மூலம் அகற்றம்

இளைஞர் ஒருவர் விழுங்கிய 5 இரும்புக் கம்பித் துண்டுகள் நுண்துளை அறுவை சிகிச்சை மூலம், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளன.

இளைஞர் ஒருவர் விழுங்கிய 5 இரும்புக் கம்பித் துண்டுகள் நுண்துளை அறுவை சிகிச்சை மூலம், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த இளைஞர் திலீப் (19). மனநலப் பிரச்னை உள்ள இவர், அந்தப் பகுதியில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில், அதிக வயிற்று வலி காரணமாக, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் செப்டம்பர் 4 -ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். இவருக்கு எக்ஸ் ரே, சிடி ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்து பார்த்ததில், வயிற்றில் 10 செ.மீ., அளவில் கூர்மையான 5 மெல்லிய இரும்புக் கம்பிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த கம்பிகள் நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.
இதுதொடர்பாக மருத்துவமனையின் கல்லீரல் மற்றும் இரைப்பை குடல் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் ஆனந்த், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஆர்.கண்ணன் உள்ளிட்டோர் சென்னையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
சுமார் 6 ஆறு மாதங்களுக்கு முன்பு இந்த இளைஞர் விழுங்கியதில் மூன்று கம்பிகள் இரைப்பைக்குள் கிடந்தன. ஒரு கம்பி பித்தப் பையைத் துளைத்து கல்லீரலுக்குள் சென்றிருந்தது. 
வயிற்றின் சுவரைக் குத்திக் கிழித்து அந்தக் கம்பி கல்லீரலுக்குள் இடம் பெயர்ந்துள்ளது. மற்றொரு கம்பி வயிற்றின் சுவருக்கும், உள்உறுப்புகளைச் சுற்றியுள்ள சுவர்ப் பகுதிக்கும் இடையில் இருக்கும் குழிப் பகுதியில் இருந்தது. இதனையடுத்து நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் இளைஞரின் வயிற்றுப் பகுதியில் துளையிட்டு, பித்தப்பையை அகற்றி கல்லீரலில் இருந்த கம்பி அகற்றப்பட்டது. மேலும் வயிற்றுப் பகுதியில் உள்ள குழியில் காணப்பட்ட கம்பியும் அகற்றப்பட்டது. இரைப்பையில் தேங்கியிருந்த 3 கம்பிகள், அதே பகுதியில் துளையிட்டு வெளியே எடுக்கப்பட்டன. 
சுமார் 3 மணி நேர தொடர் முயற்சியில் ஒரே முறையில் ஐந்து கம்பிகளும் அகற்றப்பட்டன என்று அவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவமனையின் பொது அறுவைச் சிகிச்சைத் துறை பேராசிரியர் சாந்தி கூறுகையில், 'இதே இளைஞர் ஓராண்டுக்கு முன்பு இரண்டு கம்பிகளை விழுங்கிய நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விழுங்கியது உடனடியாக தெரிய வந்ததால், பொது அறுவை சிகிச்சைத் துறையிலேயே எண்டோஸ்கோப்பி மூலம் அவை உடனடியாக அகற்றப்பட்டன' என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com