ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தோள்மூட்டு, ஸ்டெம்செல் மையங்கள் தொடக்கம்

ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் தோள்மூட்டு சிகிச்சை மற்றும் ஸ்டெம்செல் சிகிச்சை மையங்கள் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டன.
ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் தோள்மூட்டு சிகிச்சை மற்றும் மூட்டு குருத்தணு சிகிச்சை மையத்தைத் தொடங்கி வைத்துப் பார்வையிடுகிறார் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் தோள்மூட்டு சிகிச்சை மற்றும் மூட்டு குருத்தணு சிகிச்சை மையத்தைத் தொடங்கி வைத்துப் பார்வையிடுகிறார் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் தோள்மூட்டு சிகிச்சை மற்றும் ஸ்டெம்செல் சிகிச்சை மையங்கள் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டன. மருத்துவமனையின் மூட்டுநுண்துளை அறுவைச் சிகிச்சை துறை மற்றும் விளையாட்டு காயங்கள் சிகிச்சைத் துறையில் இந்த மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 
தோள்மூட்டு சிகிச்சை: இளம் வயதினருக்கு ஏற்படக்கூடிய தோள்மூட்டு விலகல், சர்க்கரை நோய் பாதிப்பினால் ஏற்படும் தோள்மூட்டு இறுகுதல், தோள்மூட்டு தசைக் கிழிவு, தோள்மூட்டு வலிக்கு அல்ட்ராசவுண்ட் கருவியின் உதவியுடன் ஊசி மருந்து செலுத்துதல் மற்றும் நுண்துளை அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகள் இந்த மையத்தில் அளிக்கப்படும். 
ஸ்டெம்செல் சிகிச்சை: மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை இன்றி, மூட்டு குருத்தெலும்பை வளரச் செய்து மூட்டு தேய்வை தடுக்கும் சிகிச்சை இம்மையத்தில் மேற்கொள்ளப்படும். முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்தச் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. நோயாளியின் இடுப்பு எலும்பு மஜ்ஜை ஊசிமூலம் எடுக்கப்பட்டு சுழற்சி பகுப்பு முறையில் ஸ்டெம்செல் பிரித்து எடுக்கப்படும். அவ்வாறு பிரித்தெடுக்கப்படும் ஸ்டெம்செல், சேதமடைந்த மூட்டு குருத்தெலும்புப் பகுதியில் நிரப்பப்படும். அவ்வாறு நிரப்பப்படும் ஸ்டெம்செல் பல்கிப் பெருகி, புதிய வழுவழுப்பான மூட்டு குருத்தெலும்பை உருவாக்கி, காயத்தினால் ஏற்பட்ட குழிவை நிரப்பும். இதனால் மூட்டு உராய்வின்றி செயல்பட முடியும்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியது:
உலக அளவில் சில ஆண்டுகளுக்கு முன்புவரை குருத்தெலும்பு மூட்டு காயத்துக்கு முறையான சிகிச்சையின்மையால் விளையாட்டு வீரர்கள் அவதிப்பட்டு வந்தனர். நவீன ஸ்டெம்செல் சிகிச்சை மூலம் சேதமடைந்த குருத்தெலும்பு சரிசெய்யப்பட்டு அவர்கள் மீண்டும் விளையாடுவதற்கு வழி வகை செய்கிறது.
முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இதுவரை ரூ.35.24 கோடி செலவில் 5,376 பேருக்கு மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சையும், ரூ.12.39 கோடி செலவில் 1,744 பேருக்கு இடுப்பு எலும்பு மாற்று அறுவைச் சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது என்றார் அவர். 
சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், துறைத் தலைவர் லியோனார்ட் பொன்ராஜ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com