இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்த பெண்ணுக்கு மீண்டும் இதயம் மாற்றம்

ஒருமுறை இதயமாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட பெண்ணுக்கு மீண்டும் இதயத்தை மாற்றும் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒருமுறை இதயமாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட பெண்ணுக்கு மீண்டும் இதயத்தை மாற்றும் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதன்முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மறு இதயமாற்று அறுவைச் சிகிச்சை ஃப்ராண்டியர் லைஃப்லைன் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்தவர் ரீனா ராஜூ (36). தடகள வீராங்கனையான இவர் 2009-ஆம் ஆண்டு வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அந்தக் காய்ச்சலால் ரீனாவின் உடல் நலம் தீவிரமாக பாதிக்கப்பட்டது. இதில் ரீனாவின் இதயமும் பாதிக்கப்பட்டு, செயலிழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு ஃப்ராண்டியர் லைஃப்லைன் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்து தானம் பெற்ற இதயம் பொருத்தப்பட்டு இதயமாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்த அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் இவர் ஈடுபட்டிருந்தார். மேலும், ஸ்பெயின் நாட்டில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற உடலுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டவர்கள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்றார். அந்த ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டம், பேட்மிண்டன் போன்ற விளையாட்டுகளில் பங்கேற்றார்.
இந்த நிலையில், திடீரென ரத்த அழுத்தம் குறைந்து, சுயநினைவை இழக்கும் நிகழ்வுகள் அடிக்கடி ஏற்பட்டன. பரிசோதனையில் அவருக்கு ஏற்கெனவே மாற்றப்பட்ட இதயத்தில் உள்ள ரத்தக்குழாய்கள் சுருங்கிக் காணப்பட்டன.
இதனையடுத்து அவர் செப்டம்பர் 20-ஆம் தேதி மீண்டும் ஃப்ராண்டியர் லைஃப்லைன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக, மருத்துவமனையின் தலைவர் டாக்டர் கே.எம்.செரியன், இதயஅறுவைச் சிகிச்சை நிபுணர் அனந்தராமன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது:
ரீனாவுக்கு மீண்டும் இதய மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்வது ஒன்றே தீர்வாக இருந்தது. இதனையடுத்து பல்வேறு சிரமங்களுக்குப் பிறகு மூளைச்சாவு அடைந்தவரிடம் தானம் பெற்ற இதயம் கிடைத்தது. எனவே, ரீனாவுக்கு மீண்டும் இதயமாற்று அறுவைச் சிகிச்சை செப்டம்பர் 23-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. மறு இதயமாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்வது இந்தியாவில் இதுவே முதன்முறையாகும் என்று தெரிவித்தனர்.
இதய மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட ரீனா ராஜூ கூறுகையில், இரண்டாவது முறையாக என்னுடைய வாழ்க்கை எனக்கு திரும்பக் கிடைத்துள்ளது. தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் சிகிச்சைக்காக அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு பலர் செல்கின்றனர். ஆனால் நமது நாட்டிலேயே எனக்கு சிறப்பான சிகிச்சை கிடைத்துள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com