சுட்டெரிக்கும் கோடை வெயிலிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாப்பது எப்படி?

பொதுவாக ஒரு பெண்ணுக்கு தன்னுடைய சருமமும், கூந்தலும் அழகாக இருக்க வேண்டும்
சுட்டெரிக்கும் கோடை வெயிலிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாப்பது எப்படி?


                       
பொதுவாக ஒரு பெண்ணுக்கு தன்னுடைய சருமமும், கூந்தலும் அழகாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் எப்பொழுதுமே ஓங்கி இருக்கும். எல்லா காலங்களையும் விட கோடை காலங்களில், சருமம் அதிக பாதிப்புக்கு உள்ளாகும். மேலும் சருமம் பொலிவிழந்தும் போகும். அதனால், கோடை காலம் வந்துவிட்டால், சருமத்தை எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்வது என்கிற கவலை பெண்களுக்கு  வந்து விடும். அதுவும் இளம் வயது பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாம். விளம்பரங்களில் வரும் க்ரீம்கள் வீட்டில் அடைக்கலம் புகுந்து விடும்.

எல்லாவற்றையும் விட இயற்கை வைத்தியமாக இருந்தால், பின் விளைவுகளைப்  பற்றி கவலைப்படாமல் இருக்கலாம். ஏனென்றால் ரசாயனம் கலந்த செயற்கை க்ரீம்கள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி விடும். அதனால் சருமம் மேலும் பாதிக்கப் படலாம்.

வெய்யில் அதிகமாக இருக்கும் பொழுது தோலில் வறட்சித் தன்மை,  சுருக்கம், அழற்சி, கருமை போன்றவை  ஏற்படும். இவற்றை நீக்குவதற்கு, வீட்டிலேயே, சருமத்தில் தடவிக் கொள்ளும்படியான  சில உபாயங்களைக் கையாளலாம். 

வெளியில் சென்று விட்டு வந்தால், தோலின் நிறம் கருத்துக் காணப்படும். அந்தக் கருமையைப் போக்க, பார்லியை நன்கு பவுடர் பதத்திற்கு பொடித்துக் கொள்ளவும். சிறிது எலுமிச்சம் பழச் சாற்றினை  எடுத்து, க்ரீம் பதத்திற்குக் குழைத்துக் கொள்ளவும். கருமை மற்றும் தேவையான இடங்களில் தடவி பதினைந்து நிமிடங்கள் ஊறிய பிறகு, பயிற்றம் மாவு அல்லது கடலை மாவு கொண்டு நீரில் முகத்தினைக் கழுவவும்.

முகத்தில் கரும் புள்ளிகள் அல்லது பருக்கள் உண்டானால், வெள்ளரிச் சாறு, எலுமிச்சம் பழச் சாறு இரண்டையும்  சம அளவு எடுத்துக் கொண்டு சிறிது கஸ்தூரி மஞ்சளுடன் குழைத்துக் கொள்ளவும். இந்தக் குழைவை முகத்தில் தடவி, இருப்பது நிமிடங்கள் ஊறவும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். கழுவும் பொழுது, இரண்டு கைகளாலும், தண்ணீரை முகத்தில் அடித்துக் கழுவவும். பின்பு மெல்லிய துணியால், ஈரத்தைத் தேய்க்காமல் ஒற்றி எடுக்கவும். 

சருமத்தில் சுருக்கங்கள் உண்டானால், சந்தனப் பொடியை பன்னீருடன் கலக்கவும். இந்தக் கலவையை, முகத்தில் மற்றும் சுருக்கம் இருக்கும் இடங்களில் தடவவும். சந்தனம் காய்ந்த பிறகு தோல், வர வரவென்று இழுக்கும். நன்கு காய்ந்தபின் முகத்தைக் கோணல் செய்து கொள்ளவோ பேசி சிரிக்கவோ கூடாது. ஏனென்றால், தோலின் அசைவுகளுக்கேற்ப சருமத்தில் சுருக்கங்கள் விழ வாய்ப்புண்டு.

வெய்யிலில் அலைந்து விட்டு வந்தாலோ வியர்வை அதிகமாக  இருந்தாலோ, உடலை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இல்லாவிடில், உப்பு, பிசுபிசுப்பு சேர்ந்து தேமல் நோய்க்கு அடிகோலும். அதிகமான வியர்வை வெளியேறி தோற்று ஏற்படாமல் இருக்க, பெரியதாக இருக்கும் வெட்டி வேரை நறுக்கிக், காய வைத்து, பொடித்துக் கொள்ளவும். ஒரு பங்கு வெட்டி வேர் என்றால், ஒரு பங்கு தண்ணீர் என்னும் விகிதத்தில் குழைத்துப்  பூசி வரவும். சந்தனக்  கல்லில் கடுக்காயுடன், கசகசாவைச் சேர்த்து உரசி, அந்தக் குழைவை பாலோடு சேர்த்து, பேக் [pack] போல்  தடவி, அரை மணி நேரம் ஊறிய பிறகு  குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும் .

சருமப் பராமரிப்பிற்கு வெளிப்புற பராமரிப்புப் பற்றி பார்த்தோம். சரும ப் பராமரிப்பிற்கு நாம் இந்தக் கோடை நாட்களில் எந்த விதமான உணவினை உண்ண  வேண்டும் என்பது பற்றி Dr . வர்ஷா [Chair Person , Indian Institute of Nutritional Sciences], என்ன கூறுகிறார் பார்ப்போம்.

உடலில் ஏற்படும் மாற்றங்களை உடனுக்குடன்  தெரிவிக்கும் ஒரு அற்புத அங்கம் நம் சருமம். தான் என்றால் மிகையே இல்லை. கோடை நாட்களில் சரும பராமரிப்பு என்பது மிகவும் இன்றியமையாதது. உண்ணும் உணவின் மூலம் சருமத்திற்கு  பல உன்னதமான சத்துக்களை நாம் பெற முடியும். அவற்றில் சிலவற்றினை நாம் பார்ப்போம். 

வைட்டமின் C : ஆரோக்கியமான சருமத்திற்கு வைட்டமின் C மிகவும் முக்கியமானதொன்று. இது ஒரு எதிர் ஆக்ஸிகரணியாகச் ஆகச் செயல் படுகிறது. சருமத்தினை மிருதுவாகவும், அங்கத்தினை வளைப்பதற்கு ஏற்றாற்போல் வளைந்து கொடுக்கவும் உதவுகிறது. மேலும், ஆரோக்கியமான தோல் போல் பார்வைக்குத் தெரிய இந்த வைட்டமின் மிகவும் உதவுகிறது. பச்சைக் காய்கள், கரும் பச்சையான கீரை வகைகள், குடை மிளகாய், புளிப்பான பழங்கள் மற்றும் கொட்டையில்லாப் பழங்களில் வைட்டமின் C நிறைந்து இருக்கிறது.

வைட்டமின் A : சிலருக்கு இளம் வயதிலேயே வயதானவர்களின் சருமம் போல் காணப்படும். சருமத்தின்  செல்களை புதுப்பிக்கவும், லேசான மஞ்சள் கலந்த நிறத்தினை தருவதும் இந்த வைட்டமின்தான். இந்த வைட்டமின்,  எதிர் ஆக்சிகரணியாகவும், கொலாஜென் என்னும் ஜவ்வு போன்ற பசை நம் தோலுக்கு பாதுகாப்பு அளிக்கும் சேவகனுமாகச் செயல்படுகிறது. பூசணிக்காய், கேரட், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கரும்பச்சை நிறக்  கீரை வகைகள், முட்டையின் மஞ்சள் கரு, வெண்ணெய் ஆகியவற்றில் நிறைந்து காணப்படுகிறது.

துத்த நாகச் சத்து : இந்தச் சத்து அருமையான செயல்பாட்டினைச் செய்கிறது. ஹார்மோன்களை சரியான விகிதத்தில் வைப்பதோடு, சருமம் [சுரப்பிகள்] தயாரிக்கும் எண்ணெய் சத்தினை அளவுக்கு மீறாமல் பாதுகாக்கிறது. அதுவுமில்லாமல் சருமத்தில் உண்டாகும் தழும்புகள் மறைவதற்கும் உதவி புரிகிறது. பூசணி விதைகள், தர்பூசணி விதைகள், அவரைக்காய்,  பூண்டு, எள்ளு, கொண்டைக் கடலை, காளான், பன்றிக் கறி, மாட்டுக் கறி, ஆட்டுக் கறி இவைகளில் காணப் படுகிறது.

கொழுப்பு அமிலங்கள் [fatty acids]  :  நமக்குத்  தேவையான கொழுப்பு அமிலங்கள் எதையுமே நம் உடல் உற்பத்தி செய்வதில்லை இவை அனைத்துமே நாம் உண்ணும் உணவின் மூலம் தான் உடலுக்குக் கிடைக்க வேண்டும். முக்கியமான இரண்டு கொழுப்பு அமிலங்கள் Omega 3 மற்றும் Omega 6 ஆகும்.  தோலில் ஈரப் பசையை சரியான பக்குவத்தில் வைப்பதும், பரு, சோரியாசிஸ் போன்றவைகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. ஆளி விதை, மீன் எண்ணெய் மட்டி எனக் கூறப்படும் கிளிஞ்சல் பூச்சி ஆகியவற்றில் இந்த கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன.

ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பராமரிப்பிற்காக நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம். போஷாக்கான ஆகாரம், தேவையான அளவு தண்ணீர், போதுமான அளவு தூக்கம் இவைகளை அலட்சியப்படுத்தாமல் பின்பற்ற வேண்டும். எந்த செய்கையும் ஒரு நாள் இரண்டு நாட்களில் பலன் காண்பிக்காது. ஆகையால் பிணிக்கு மருந்து என்று ஒன்றைச் சாப்பிட்டால், பலன் தெரிய பொறுமையைக் கையாளும் பக்குவமும் இருக்க வேண்டும்’

என்ன வாசர்களே புரிந்ததா? கோடையில் சருமத்தைச்  சமாளிக்கும் வித்தையைத்  தெரிந்து கொண்டீர்களா? குழந்தை பாக்கியம் வேண்டி அரச மரத்தினைச் சுற்றி வந்து விட்டு உடனே அடி  வயிற்றைத் தொட்டுப் பார்ப்பது என்று ஒரு  வழக்குச் சொல் உண்டல்லவா? . அது போல் அல்லாமல், பொறுமையுடன் செயல் பட்டால் பலன் நிச்சயம் உண்டு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com