உங்களுக்கு எஸ்கலேட்டர்ல ஏறப் பயமா? அப்போ இது உங்களுக்காகத்தான்!

ஷாப்பிங் செல்கையில் எஸ்கலேட்டர்களைக் கண்டு பயந்து பீதியாகி படிக்கட்டுகளையோ, லிஃப்டையோ தேடுகிறீர்களா? அப்போ உங்களுக்கு எஸ்கலோஃபோபியா இருக்குன்னு அர்த்தம்...
உங்களுக்கு எஸ்கலேட்டர்ல ஏறப் பயமா? அப்போ இது உங்களுக்காகத்தான்!

சென்னையில் 15 வருடங்களுக்கு முன்பு ஸ்பென்சர் பிளாஸா மாதிரி சில இடங்களில் மாத்திரமே எஸ்கலேட்டர் இருந்தது. ஒருமுறை நாங்கள் அங்கே சென்றிருந்த போது எனக்கு எஸ்கலேட்டர் குறித்த பயம் இருந்தாலும் அப்போது எப்படியோ அந்தப் பயத்தைப் பற்றி பொருட்படுத்தாது என் 70 வயதுப் பாட்டியுடன் அதில் ஏறிச் சென்றேன். எஸ்கலேட்டரில் ஏற எனக்குத்தான் பயமே தவிர பாட்டி ரொம்ப ஜாலியாக அதில் ஏறி வந்தார். இறங்கியதும் இதென்னடா? அவ்வளவு தானா? நாம கீழ இறங்கும் போதும் இதிலேயே இறங்கலாம் என்றவாறு அப்புசாமியின் மாடர்ன் சீதாப்பாட்டி ஸ்டைலில் புன்னகை பூத்தார். ஒரே ஒரு முறை... அது தான் முதல் முறையும் கூட...  அப்படி ஒரே ஒரு எஸ்கலேட்டர் பயணத்திலேயே எனக்கு நெஞ்சுக்குள் ஐஸ் கத்தியை இறக்கியதைப் போல மனமெல்லாம் எப்போதடா பத்திரமாக அதிலிருந்து கீழே இறங்குவோ என்று பரபரப்பாக இருந்தது. அதாகப் பட்டது அப்போது நான் நன்கு உணர்ந்து கொண்டேன், எனக்கு எஸ்கலேட்டரில் பயணிப்பது என்றால் ரொம்பப் பயம் என்று! அதற்குப் பின் இப்போதெல்லாம் சென்னையில் பல இடங்களில் எஸ்கலேட்டர் வந்து விட்டது. இன்னும் சில வருடங்களில் தடுக்கி விழுந்தால் ஏதாவதொரு எஸ்கலேட்டரில் தான் விழுந்து எழுவோமோ என்னவோ! அப்படியான நாட்கள் வந்து விட்டன. ஆனால், எனக்கு எஸ்கலேட்டர் பீதி மட்டும் இன்னும் தீரவே இல்லை. எங்கு சென்றாலும் எஸ்கலேட்டர் இருந்தால் உடனே அங்கே மாடிப்படிகளோ அல்லது மின் தூக்கியோ( லிஃப்டோ) இருக்கிறதா? எனத் தேடத்துவங்கி விடுகிறேன். அவை இரண்டும் இல்லாமல் வெறும் எஸ்கலேட்டரில் தான் மாடிகளைக் கடக்கவேண்டுமெனில் அங்கே ஷாப்பிங் செய்யவே தேவையில்லை எனப் புறக்கணிக்கக் கூட தயாராக இருக்கிறேன் நான். காரணம் எனக்கிருக்கும் எஸ்கலேட்டர் பயம் தான்.

உலகில் நான் மட்டும் அல்ல. இன்னும் பலருக்கும் கூட இந்த பயம் இருக்கிறதெனச் சொல்கின்றன கூகுளும், யூ டியூபும் இன்னபிற அறிவியல் சஞ்சிகைகளும். இதை மருத்துவப் பெயரில் சொல்வதென்றால் ‘எஸ்கலோஃபோபியா’ என்கிறார்கள். எஸ்கலோஃபோபியா இருப்பவர்களுக்கு எஸ்கலேட்டரில் பயணிக்க பயம் இருக்கும். அந்தப் பயம் சாதாரணமானது தான் எனில் உரிய துணை இருப்பின் அதாவது எஸ்கலேட்டர் பயன்படுத்த உங்களை ஊக்குவிக்கக் கூடிய அளவில் கணவரோ / மனைவியோ, நெருங்கிய நண்பர்களோ, உறவினர்களோ, உங்களது குழந்தைகளோ இருந்து அவர்களது துணையுடன் நீங்கள் எஸ்கலேட்டர் பயத்தைக் கடந்து விட்டீர்கள் எனில் உங்களது எஸ்கலோஃபோபியா குறித்து நீங்கள் அஞ்ச வேண்டியதே இல்லை. உங்களால் அந்த பயத்தை எளிதில் கடக்க முடியும்.

மாறாக எந்தவிதத்திலும் உங்களது எஸ்கலேட்டர் பயம் மறையவே இல்லை... நாளுக்கு நாள் கூடிக் கொண்டே தான் போகிறது. எஸ்கலேட்டரைக் கண்ட மாத்திரத்தில் தலைசுற்றி மயக்கம் வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், அப்படியான சமயங்களில் நீங்கள் நிச்சயம் உங்களது பயத்தை எதிர்கொண்டு போராடி வெல்லத்தான் வேண்டும். ஏனெனில், இனி வரும் உலகில் எஸ்கலேட்டர்கள் எனும் நகரும் படிக்கட்டுகளின்றி உங்களால் சில இடங்களுக்குச் செல்லவே முடியாமல் ஆகலாம். ஒவ்வொருமுறையும் படிகளையும், லிஃப்டையும் தேடி அலைந்து கொண்டிருக்க முடியாது.

எஸ்கலோஃபோபியா சாயலில் இன்னும் சில ஃபோபியாக்கள் இருக்கின்றன அவற்றைப் பற்றியும் கொஞ்சம் அலசலாமா?

  • பாத்மோஃபோபியா - இந்த வகை ஃபோபியா இருப்பவர்களுக்கு உயரமான படிகள் மற்றும் பள்ளத்தாக்குகளைக் கண்டாலே பயத்தில் கை, கால்கள் உதறலெடுக்கும். அந்தப் பயத்திலிருந்து அவர்களை மீட்பது கடினம்.
  • கிளைமோஃபோபியா - இவர்களுக்கு உயரமான இடங்களுக்கு படிகளிலோ அல்லது லிஃப்டிலோ அல்லது எஸ்கலேட்டரிலோ அல்லது நடந்தோ ஏறிச் செல்வதென்றாலே அதீத பயமிருக்கும், அத்தகைய சமயங்களில் பயத்தில் தங்களது கட்டுப்பாட்டை இழந்து இவர்கள் தவறிப் போய் உயரத்திலிருந்து விழ்ந்து விபத்து நேரிடக்கூடிய சந்தர்பங்கள் அதிகம்.
  • அக்ரோஃபோபியா - கிளைமோஃபோபியாக்காரர்களுக்கு கீழிருந்து மேலாக உயரத்தில் ஏறிச் செல்லச் செல்ல பயம் என்றால் அக்ரோஃபோபியாக்காரர்களுக்கு தாங்கள் வெகு உயரத்தில் மலை உச்சியில் இருக்கும் என்கிற நினைப்பே அதீத பய உணர்வைத் தரக்கூடியதாக இருக்குமாம். உயரத்தில் இருப்பதை இவர்கள் உணராதவரை அனைத்தும் நார்மலாக இருக்கக் கூடும். தாங்கள் எவ்வளவு உயரத்தில் இருக்கிறோம் என உணர்ந்த அடுத்த நொடியே அவர்கள் பீதியடையத் தொடங்கி விடுவார்கள்.
  • இலிங்கோஃபோபியா -  செங்குத்தான படிகள், மலைகள், பாறைகள் போன்ற இடங்களைக் கடப்பதில் இவர்களுக்கு அதீத பயம் இருக்கும்.

கிட்டத்தட்ட இந்த நான்கு வகை ஃபோபியாக்களிலும் பயத்துக்கான காரணங்கள் ஒன்றே போலத் தோன்றினாலும் பயம் தோன்றும் அல்லது நிகழும் இடங்களைப் பொறுத்து இவை ஒன்றுக்கொன்று மாறுபடுகின்றன. இந்த பயங்களை முற்றிலுமாக விரட்டியடிப்பது சற்றுச் சிரமமான காரியமே என்றாலும் ஒருமுறை நீங்கள் உங்களது ஃபோபியாவை எதிர்த்து வென்று விட்டீர்கள் எனில் காலத்துக்கும் அந்தப் பயம் மீண்டும் உங்களை அச்சுறுத்தவே முடியாது என்பதை உணர்ந்தீர்களானால் நீங்கள் அதற்காகப் போராடத் துவங்கி விடுவீர்கள். தகுந்த நிபுணர்களைக் கொண்டு ஃபோபியாக்களை விரட்டும் பயிற்சிகளை சிறிது சிறிதாக துவக்கலாம். சிலருக்கு இந்த விஷயத்தில் மருத்துவ ஆலோசனை தேவைப்பட்டால் அதற்கான தகுந்த மருத்துவர்களையும் நீங்கள் நாடலாம்.

மருத்துவர்களை நாட வேண்டிய அவசியம் எப்போது வருகிறது ?

நாம் இதுவரை நம்பிக் கொண்டிருப்பதைப் போல ஃபோபியாக்கள் பல நேரங்களில் மனதோடும், உள்ளுணர்வுகளோடும் மட்டுமே சம்மந்தப்பட்டவை இல்லை. சில சந்தர்பங்களில் அவை மனிதர்களின் உடல் ஆரோக்யத்துடனும் நெருங்கிய தொடர்பு கொண்டவையாகவே இருக்கின்றன. அப்படியான சமயங்களில் நாம் அவற்றைத் தவறாக அனுமானித்துக் கொண்டு சாதாரண போஃபியா தானே என சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் இருந்து விடக்கூடிய தவறுகளைச் செய்து விடக்கூடாது. 

எஸ்கலோஃபோபியா இருக்கும் சிலருக்கு கண் பார்வை நரம்பியல் கோளாறுகள் இருக்கலாம், தன்னம்பிக்கை உணர்வு குறைவாக இருக்கலாம், நரம்புத்தளர்ச்சியினால் கை, கால் நடுக்கம் இருக்கலாம். இந்தக் காரணங்களினால் கூட அவர்களுக்கு எஸ்கலோஃபோபியா வந்திருக்கக் கூடும்.

எனவே உங்களுக்கு இம்மாதிரியான ஃபோபியாக்கள் ஏதேனும் இருந்தால் உடனடியாக அந்த ஃபோபியாக்களில் இருந்து விடுபட முடியுமா? என முயன்று பாருங்கள். அப்போது தான் அதற்கான உண்மைக் காரணம் மனமா? உடல் ஆரோக்யக் குறைபாடா? எனத் தெரியவரும். பிறகு அதற்கான சிகிச்சையோ அல்லது பயத்தை விரட்டப் பயிற்சியோ எடுத்துக் கொள்வது சுலபமாக இருக்கும்.

ஆனால் எக்காரணம் கொண்டும் ஃபோபியாக்களை இவற்றால் என்ன ஆகி விடப்போகிறது. அந்தந்த ஃபோபியாக்களை உண்டாக்கக் கூடிய காரணிகளைத் தவிர்த்து விட்டால் போதும் என அப்படியே கண்டும், காணாமல் மட்டும் விட்டுவிடக் கூடாது. பின்னாளில் வாழ்க்கையில் இவற்றால் பேராபத்துகள் ஏதேனும் நேர்ந்து விடக்கூடிய சாதக அம்சங்களை நாமே உருவாக்கி விடக் கூடிய சாத்தியங்கள் அதில் அதிகம்.

ஆகவே ஃபோபியாக்களை விரட்டுங்கள் வாழ்நாள் முழுதும் மனதளவிலும், உடலளவிலும் போஷாக்காக இருங்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com