அடிக்கடி விக்கல் வருதா? தண்ணீர் அருந்தியும் நிற்கவில்லையா? அப்போ இதைப் படிங்க!

சிலருக்கு விக்கல் வந்ததும் ஒரு ஸ்பூன் நிறைய சர்க்கரையை அள்ளி வாயில் திணித்துக் கொண்டு அப்படியே சுவைத்து விழுங்கி நீரருந்தினால் விக்கல் நிற்கும்.
அடிக்கடி விக்கல் வருதா? தண்ணீர் அருந்தியும் நிற்கவில்லையா? அப்போ இதைப் படிங்க!

ஜீரண மண்டலத்தில் ஏதாவது பிரச்னை இருந்தால் அதற்கான எளிய அறிகுறி தான் விக்கல். இந்த விக்கல் எப்போதெல்லாம் வருகிறது என்று யோசித்துப் பாருங்கள்.

வயிற்றுக்கும், மார்புப் பகுதிக்கும் இடையில் உதரவிதானம் என்றொரு தடுப்புச் சுவர் போன்ற பகுதி உண்டு. இது தான் வயிற்றையும், நுரையீரலையும் தனித்தனியே பிரிக்கிறது. நாம் மூச்சை இழுக்கும் போது நுரையீரலுக்குள் ஆக்ஸிஜன் சரளமாகச் செல்வதற்கு வசதியாக இந்த உதரவிதானம் மேலும், கீழுமாக இயங்கக் கூடியது. இது நமது உடலுக்குள் சாதாரணமாக நடக்கும் ஒரு செயல்பாடு. சிற்சில சமயங்களில் மூச்சு விடும் போது உதரவிதானம் மேலும் கீழுமாக இயங்கும் சமயத்தில் நமது குரல்வளை மூடியிருந்தால் உடனே விக்கல் வந்து விடுகிறது.

விக்கல் வரக் காரணங்கள்...

  • நெடுநேரமாகப் பசியுடன் இருந்து விட்டு திடீரென உணவு கிடைத்ததும். அது காரமான உணவாக இருந்தபோதும் அள்ளியள்ளி வாயில் திணித்துக் கொண்டோமெனில் அப்போது திடீரென விக்கல் வரும்.
  • சிலருக்கு வயிறு முட்டச் சாப்பிட்டால் விக்கல் வரும்.
  • சிலருக்கு வயிறு முட்டத் தண்ணீர் குடித்தால் கூட விக்கல் வரும்.
  • சிலருக்கோ கண்களில் நீர் வரும் அளவுக்கு விழுந்து, விழுந்து சிரித்தால் கூட விக்கல் வரும்.
  • சிலருக்கு உளவியல் ரீதியிலான பிரச்னைகளோ அல்லது மன அழுத்தமோ இருந்தாலும் கூட விக்கல் வரும்.

பொதுவாக சாதாரண விக்கல் என்றால் தொடர்ச்சியாக சிறிது தண்ணீரை மொண்டு விழுங்கினாலே விக்கல் நின்று விடும். ஆனால், என்ன முயன்றும் விக்கல் நின்றபாடில்லை என்றால் நாம் நிச்சயம் மருத்துவரை அணுகித்தான் ஆகவேண்டும்.

தண்ணீர் அருந்தியும் விக்கல் நிற்கவில்லை என்றால்....

விக்கல் வந்த சில நிமிடங்களில் அது நின்று விட்டால் பிரச்னையில்லை. அது சாதாரண விக்கலாகத்தான் இருக்கும். ஆனால், ஒருமுறை விக்கல் வந்து அது 2 மூன்று நாட்கள் வரை நீடித்தால் நிச்சயம் உடலுக்குள் பிரச்னை இருக்கிறது என்று தான் அர்த்தம்.
அது காசநோய், கேன்சர், நுரையீரலில் நெறி கட்டுதல், உதரவிதானம் செல்லும் பெரினிக் நரம்பு பாதிப்பு என ஏதாவது தீவிரமான ஆரோக்யக் கோளாறின் அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே விக்கல் ஓரிரு முறைகளுக்கு மேல் நீடித்தால் உடனே மருத்துவரைக் கலந்தாலோசித்து விடுவதே நல்லது.

விக்கலுக்கு ஒரு எளிய பாட்டி வைத்திய முறை...

  • சாதாரண விக்கல் என்றால் இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்தினாலே நின்று விடும். இதை கிராமப் புறங்களில் 7 மடக்கு தண்ணீர், 9 மடக்குத் தண்ணீர் என்பார்கள். விக்கல் வந்ததும் ஒரு பெரிய டம்ளரில் தண்ணீரை எடுத்துக் கொண்டு மூச்சு விடாது 7 மடக்கோ 9 மடக்கோ விழுங்கினீர்கள் என்றால் விக்கல் நின்று விடும்.
  • சிலருக்கு விக்கல் வந்ததும் ஒரு ஸ்பூன் நிறைய சர்க்கரையை அள்ளி வாயில் திணித்துக் கொண்டு அப்படியே சுவைத்து விழுங்கி நீரருந்தினால் விக்கல் நிற்கும்.
  • கைக்குழந்தைகளுக்கு விக்கல் வந்தால் உச்சந்தலையில் சிறு துரும்பைக் கிள்ளி வைக்கச் சொல்வார்கள். பச்சிளம் சிசுக்களின் உச்சந்தலை மிக மிக மென்மையானது அந்தப்பகுதியில் துரும்பு வைத்தால் விக்கல் நிற்கும் என்பது ஐதீகம். இது பரம்பரையாகப் பாட்டி வைத்திய முறையில் கையாளப் படுகிறதேயன்றி காரணம் சரிவர விளக்கப்படுவதே இல்லை. வாசிக்கும் வாசகர்களுக்குத் தெரிந்தால் எங்களிடம் கமெண்டுகள் வாயிலாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
  • அக்கரகாரம், திப்பிலி இரண்டையும் சம அளவு எடுத்து பொடி செய்து கொள்ளவும். அதில் இரண்டு கிராம் எடுத்து தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் நுரையீரல் சம்பந்தமான நோய்களில் இருந்து தீர்வு கிடைக்கும். 
  • அகத்திக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் குடல் புண் ஏற்படுவதைத் தடுக்கலாம்.  
  • அகில் கட்டை, திப்பிலி, சுக்கு, சித்தரத்தை அனைத்தையும் சம அளவில் எடுத்து கஷாயம் வைத்துக் குடித்தால் நுரையீரல் நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
  • அம்மான் பச்சரிசிக் கீரையுடன் மஞ்சள், ஓமம் இரண்டையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் குடல் புண் குணமாகும். 
  • அருகம்புல் சாறு தினமும் குடித்து வருவதன் மூலம் வயிற்றில் புண் ஏற்படாமல் தடுக்கலாம். 
  • அல்லிக் கிழங்கை பொடி செய்து பாலில் கலந்து குடித்தால் தாகம் விலகும். 
  • அன்னாசிப் பழ இலையை இடித்து, சாறு எடுத்து, 15 மில்லி அளவுக்கு குடித்தால் தீராத விக்கல் தீரும். அன்னாசி பூவை பொடி செய்து இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் அஜீரணம், வயிறு மந்தம் புளித்த ஏப்பம் உள்ளிட்ட வயிறு சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com