உங்கள் சருமத்தில் தடிப்பு, சிவப்பு நிறம், அரிப்பு ஏற்பட்டுள்ளதா? உடனடி நிவாரணம் இதோ!

'கழுதைக்குத்  தெரியுமா கற்பூர வாசனை' என்கிற சொல் வழக்கில் உண்டு. கற்பூரத்தின் மகிமை கழுதைக்குத் தெரிய வேண்டாம்.
உங்கள் சருமத்தில் தடிப்பு, சிவப்பு நிறம், அரிப்பு ஏற்பட்டுள்ளதா? உடனடி நிவாரணம் இதோ!

'கழுதைக்குத்  தெரியுமா கற்பூர வாசனை' என்கிற சொல் வழக்கில் உண்டு. கற்பூரத்தின் மகிமை கழுதைக்குத் தெரிய வேண்டாம். அட நமக்குத் தெரியணுமா இல்லையா? பல பேருக்கு அதனுடைய உபயோகங்கள் தெரிவதில்லை என்பது வருத்தப் படவேண்டிய விஷயம்தான். வீட்டிற்கு கற்பூரம் வாங்கினால் பூஜைக்கு மட்டும் தான் என்று நிறைய பேர் பயன்படுத்துகிறார்கள். அதற்கு பலவிதமான ரோகங்களை குணப்படுத்தும் மருத்துவக் குணங்கள் உண்டு என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இருமல் வந்தாலோ, தும்மல் வந்தாலோ, ' இப்பொழுது வெதர் கண்டிஷன் சரியில்லை.மூக்கில் தண்ணியா வருது. வாய் ஓயாமல் தும்மல் வருது. தலை கனக்குது, நாக்கு கசக்குது, உடம்பு கணகணன்னு இருக்கு சாப்பாடு பிடிக்கல' இப்படி சொல்லிக் கொண்டு மருத்துவரைத் தேடி ஓடுகிறோம். உடனே அவரும் முழ நீளத்திற்கு மாத்திரை, மருந்து  லிஸ்ட், மார்பு எக்ஸ்ரே என்று பர்சை விளக்கெண்ணெய் குடிக்க வைத்து விடுகிறார்.

ஏங்க பணத்தையும் செலவழித்து மருந்து மாத்திரை சாப்பிட்டு உடம்பையும் கெடுத்துக் கொள்வானேன்? இருக்கவே இருக்கிறது, வீட்டிலேயே  உடலுக்குக் கேடு விளைவிக்காத மலிவு விலை நிவாரணி. அதை மறந்து விடுகிறோம்.  உடலுக்கு அப்படி என்ன நன்மை பயக்கின்றது என்று அறிந்து கொள்வோம்.

இடைவிடாத இருமலா? ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணையுடன், நான்கு சொட்டுக்கள் கற்பூர எண்ணையைக் கலந்து, நன்கு தொண்டைப் பகுதியிலும்,  மார்புப் பகுதியிலும் தடவுங்கள். பிறகு சில துளி கற்பூர எண்ணெய்யை சுடு நீரில் கலந்து ஆவி பிடியுங்கள். இருமல் கப்சிப் என்று அடங்கி விடும்.

சருமத்தில் தடிப்பு, சிவப்பு நிறம், அரிப்பு அறியப்பட்டால், ஒரு கப் ஆலிவ் எண்ணெய்யுடன் ஒரு ஸ்பூன் கற்பூர எண்ணெய்யை சேருங்கள். தேவைப்படும் இடங்களில் தடவிக் கொள்வதற்கு முன்னால் அவ்விடத்தை  நன்கு சுத்தம் செய்து கொண்டு, ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்வது போல் அப்ளை செய்யுங்கள். இரவு முழுவதும் அப்படியே விட்டு  விடுங்கள். மறுநாள் காலை வெதுவெதுப்பான தண்ணீரால் கழுவுங்கள். இந்த சிகிச்சை முறையை தாராளமாக முகத்திற்கும் செய்து கொள்ளலாம். எந்தவித பாதிப்பும் வராது என்பது உறுதி.

மூக்கில் நீர் கொட்டுகிறதா? மூச்சு விடும் பொழுது மூக்கு அடைக்கிறதா? கவலை வேண்டாம். சில துளிகள் கற்பூர எண்ணெய்யுடன் ஒரு ஸ்பூன் கடுகு எண்ணையை மிக்ஸ் பண்ணுங்கள். அதை மார்பு, முதுகு, தொண்டை பகுதியில் நன்கு தடவுங்கள். உடனடி நிவாரணம் கிடைக்கும்.

சிலருக்கு அடிக்கடி உதடுகளில் வெடிப்பு உண்டாகும். அந்த வெடிப்பு பேசும்பொழுது சிரிக்கும் பொழுது வலியை ஏற்படுத்தும். மூன்று ஸ்பூன் கற்பூர எண்ணெய்யுடன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து, வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் பொழுது சிறிது பஞ்சினை உருட்டி எண்ணையில் தோய்த்து தடவுங்கள். ஒரு நாளைக்கு மூன்று தடவை செய்ய வேண்டும்.வெடிப்பும் அதனால் ஏற்படும் வலியும் போய்விடும்.

சிறுமியர்களுக்கு தலையில் பேன் வந்து விட்டால், சீக்கிரத்தில் போகாது. தலைக்கும் கைக்கும் இருபத்து நான்கு மணி நேரமும் காண்டாக்ட் இருக்கும். பேனை ஒழிக்க சிறந்த வழி இருக்கிறது. ஒரு டேபிள் ஸ்பூன் கற்பூரத்தை நன்கு பொடி செய்யுங்கள். அதை உறைந்து போகாத திரவ நிலையில் இருக்கும் இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யுடன் கலக்குங்கள். அதை தலையில் சருமத்தில் வேர்க்கால்களில் படும் படி நன்கு தடவவும். இரவு படுக்க போவதற்கு முன்பாக ஷவர் காப் அல்லது மெல்லிய துணி கொண்டு தலையில் கட்டிக் கொண்டு இரவு முழுவதும் அப்படியே விட்டு விடவும். அடுத்த நாள் காலை தலையை அலசவும். வாரத்திற்கு மூன்று முறைகள் செய்தால், ஒரு மாதத்தில் பேன் தொல்லை அறவே ஒழிந்துவிடும்.

சிலருக்கு குனிந்து நிமிர்ந்தாலே அடிக்கடி தசை பிடிப்பு ஏற்பட்டுவிடும் ஒரு வேலையுமே செய்ய முடியாது. கை கால் கழுத்து இடுப்பு எங்கு வேண்டுமானாலும் பிடிப்பு உண்டாகும். அப்பொழுது ஐந்து துளிகள் கற்பூர எண்ணெய் ஒரு ஸ்பூன் சுட வைத்த ஆலிவ் எண்ணெய்  கலந்து பிடிப்பு உள்ள இடங்களில் தடவவும் .உருவி விட  வேண்டாம். ஒரு நாளைக்கு இரண்டு  முறை செய்து வர நல்ல பலன் உண்டாகும்.

நிறைய பெண்களுக்கு காலில் பித்த வெடிப்பு காணப்படும். அந்த வெடிப்பு வலியைக் கொடுப்பதோடு, புடவை கட்டிக் கொள்ளும் சமயத்தில், புடவை கரைகளில் மாட்டிக் கொண்டு அவஸ்தைப் படுத்தும். சில பெண்கள் கால் வெடிப்பை மறைக்க மிகவும் போராடுவார்கள். இந்த ப்ராப்ளம் உள்ளவர்களுக்காக இந்த செய்முறை. சூடான தண்ணீரை ஒரு டப்பில் எடுத்துக் கொண்டு, அதில் ஒரு கற்பூரக் கட்டியை போடுங்கள். பத்து நிமிடங்கள் காலை வெந்நீரில் அமிழ்த்தி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ப்யூமிங் ஸ்டோன் கொண்டு வெடிப்புப் பகுதியை தேய்த்து வீட்டுக் கொள்ளுங்கள். பிறகு நல்ல நீரில் காலைக் கழுவிக் கொண்டு, மெல்லிய டவலினால் துடைத்துக் கொள்ளுங்கள்.

ஆண் பெண் இருபாலாரிலும் பலருக்கு கால்களில் கருப்பு நிற பாலுண்ணிகள் காணப்படுகின்றன. முன்னாட்களில், இதை எடுக்க குதிரை முடியை அதில் சுற்றி முடி போடுவது போல் அறுத்து எடுப்பார்கள். இப்பொழுது எல்லாமே டாக்டர் கைவண்ணம் தான். அவ்வுண்ணியை அகற்ற சுலபமான வழி இருக்கிறது. கால் கப் இளகிய தேங்காய் எண்ணெய், ஒரு ஸ்பூன் பைன் எண்ணெய், இரண்டு ஸ்பூன் கற்பூர எண்ணெய் மூன்றையும் ஒன்றாக்கவும். ஒரு அகன்ற டப்பில் சூடு நீருடன் சேர்க்கவும். கால்களை அதில் அமிழ்த்தி, ஐந்து நிமிடங்கள் ஊற விடவும்.பிறகு சுத்தமான நீரால் கால்களை கழுவவும். கால்களை துடைத்துக் கொண்டு, நீரில் சேர்ப்பதற்கு முன்னாள் கலந்த எண்ணெய் கலவையை, பாலுண்ணிகள் மேல் ஒரு நாளைக்கு மூன்று முறைகள் தடவி வரவும். பாலுண்ணிகள் உதிர்ந்து விடும்.

சில ஏரியாக்களில் கொசு மாற்று பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். அவை கடித்தால், அந்த இடம் புண்ணாவதுடன், தொற்று உண்டாகவும் வாய்ப்பு ஏற்படுகிறது. அதைத் தவிர்க்க அரை கப் வெந்நீரில், இருபது சொட்டுக்கள் கற்பூர எண்ணெய்யை சேர்க்கவும்.அந்த திரவத்தினை, ஒரு ஸ்பிரே அடிக்கும் அடைப்பானில் ஊற்றி ரூம்களில் அடித்தால், கொசு மற்றும் பூச்சித் தொல்லை கட்டுப்படும்.

எவ்வளவு எளிமையான குறிப்புக்கள் பாருங்கள். கையில் வெண்ணெய்யை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்? சுகாதாரமான, வீட்டிலேயே செய்துக்க கொள்ளக் கூடிய சிகிச்சையை விட்டு விட்டு டாக்டரைத் தேடி ஓடுவானேன்? பணத்தையும் விரயம் ஆக்குவானேன்? படிச்சீங்க இல்லையா? கப்புனு பிடித்துக் கொண்டீர்கள்தானே?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com