இப்படி ஒரு மருத்துவரா?

இப்படி ஒரு மருத்துவரா?

'என் இளைய மகன் சரவணன் தொடர்ந்து காய்ச்சலால் அவதிப்பட்டான். தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

'என் இளைய மகன் சரவணன் தொடர்ந்து காய்ச்சலால் அவதிப்பட்டான். தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. மறுநாள் ரத்தப் பரிசோதனை நிலையத்திலிருந்து போன் செய்து உங்கள் மகனுக்கு டெங்கு காய்ச்சல் பிளேட்லெட் எண்ணிக்கை 50,000 உள்ளது. இன்னும் குறைந்தால் உயிருக்கே ஆபத்து என்றனர். நேற்று ஒரு சிறுவன் 40,000 இருந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்குள் இறந்து விட்டான். அதனால் உங்கள் மகனை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்றனர்.

உடனே நாங்கள் மருத்துவர் ரேணுகா அவர்களிடம் கேட்டதும், 'நீங்கள் குழந்தைகள் மருத்துவமனைக்கு (Child Trust HospitaI) அழைத்துச் செல்லுங்கள்; நானும் உடனே வருகிறேன்’ என்றார். நாங்கள் அடித்துப் பிடித்து அந்த மருத்துவமனையை அடைவதற்கு முன்பே அவர் அங்கு வந்து எங்களது குழந்தையை சேர்ப்பதற்கான எல்லா ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தார். அன்று அவர் எனக்கு கடவுளாகவே காட்சி தந்தார். சரியான நேரத்தில் குழந்தையைச் சேர்த்ததால் அவனைக் காப்பாற்ற முடிந்தது. அது மட்டுமல்லாமல் எனக்கு ரத்த பாதிப்பு (SLE) நோய் வந்து என்ன வியாதி என்று தெரியாமல் தவித்தோம்; அப்போதும், மருத்துவர் ரேணுகாவின் வழிகாட்டுதலின் பேரில் பரிசோதனைகள் செய்து சரியான நேரத்தில் கண்டுபிடித்து அதற்கு முறையாக மருத்துவம் பார்த்ததால் இன்று உயிர் பிழைத்து மன தைரியத்துடன் போராடி அந்த கொடுமையான வியாதியிலிருந்து தப்பித்து வந்து இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றால் மருத்துவர் ரேணுகாவே அதற்கு முக்கிய காரணம். 

அன்புதான் உன் பலவீனம் என்றால் இந்த உலகின் மிகச் சிறந்த பலசாலி நீதான்' என்ற அன்னை தெரசாவின் கூற்றினை ஒற்றி மக்களின் சேவையே தனது வாழ்க்கையாகக் கொண்டிருக்கிறார் ரேணுகா இராமகிருஷ்ணன், தோல் நோய் மருத்துவர். 

ரேணுகா சிறுவயதில் கும்பகோணத்தில் படிக்கும்போதே ஏழைகளுக்கு உதவ வேண்டும், தொழுநோயாளிகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்துடனேயே வளர்ந்தாராம். பள்ளியில் மாறுவேடப் போட்டி நடந்தபோது தொழுநோயாளி வேடமிட்டிருக்கிறார். இந்திய ராணுவத்தில் பணியாற்றி நாட்டுக்குச் சேவை செய்த இவரது தந்தை, தன் மகள் மருத்துவம் படித்து மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டாராம். அதுபோலவே ரேணுகா மருத்துவம் படித்தார். முதுகலைப் படிப்பில் தோல்நோய் தொடர்பாகப் படித்தார். 

ஒரு பெண்ணின் முன்னேற்றத்திற்குப் பின்னால் ஓர் ஆண் இருப்பார். மருத்துவர் ரேணுகாவின் கணவர் இராமகிருஷ்ணன் திருவண்ணாமலை அருகிலுள்ள மாதி மங்கலம் என்ற ஊரில் பிறந்தவர் . குக்கிராமத்தில் பிறந்த இவர் தனது கடின முயற்சியால் பிரிசியா மோலன் (PRECIA MOLAN) என்ற பெரிய நிறுவனத்தை உருவாக்கி பல நூற்றுக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதுடன், தன் தாய் தந்தையர் பெயரில் மங்கலம் ராஜம் நடேசன் அறக்கட்டளை ஏற்படுத்தித் தான் பிறந்த ஊருக்குப் பல முன்னேற்றப் பணிகளைச் செய்துள்ளார். ரேணுகா தனது கணவர் துணையோடு சமூக சேவையைத் தொடர்ந்து ஆற்றி வருகிறார். 

இடைவிடாத சேவைக்காகப் பல விருதுகளை பெற்றுள்ள ரேணுகா சுழற்சங்கம் அளித்த விருதினை பெறும்போது ஆற்றிய உரையில், 'நான் கருவுற்றிருந்த போது கூட தொழுநோயாளிகளுக்கு அமைக்கப்பட்டிருந்த முகாமில் தங்கியிருந்து சேவை செய்துள்ளேன். அப்படிச் செய்ய தைரியமாக என்னை அனுப்பி வைத்த என் குடும்பத்தாருக்கு நன்றி கூற இத்தருணத்தில் கடமைப் பட்டுள்ளேன்' என்று கூறியிருந்தார். இவரைத் தொடர்ந்து இவரது மகள் பிரதீபாவும் மருத்துவப் படிப்பை முடித்து மருத்துவச் சேவை புரியத் தொடங்கியுள்ளார்.

புயல் மழையால் 2015-ல் சென்னையே நீரினால் சூழப்பட்டு மக்கள் உணவு, உடை, குடிநீர் இன்றித் துன்பப்பட்ட போது மகளிர் சுழற்சங்கம் உதவியுடன் எல்லா இடங்களுக்கும் சென்று மருத்துவ முகாம்கள் அமைத்து இலவச மருந்துகள், உணவு, உடை, வீட்டுப் பொருள்கள் வழங்கியிருக்கிறார். கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வலி எடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாமல் தவித்தபோது அந்தப் புயல் மழையையும் பொருட்படுத்தாமல் பிரசவத்திற்கு ஏற்பாடு செய்து கொடுத்தார். எல்லோரிடமும் அன்பாகப் பழகக் கூடியவர்; சிரித்த முகத்துடன் ஓடோடி வந்து உதவிகள் செய்வார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com