எனது நீண்ட ஆயுளின் ரகசியம் இதுதான்! 101 வயதான இந்தியாவின் முதல் இதய மருத்துவரின் பேட்டி!

எனது நீண்ட ஆயுளின் ரகசியம் இதுதான்! 101 வயதான இந்தியாவின் முதல் இதய மருத்துவரின் பேட்டி!

இந்தியாவின் முதல் இதய மருத்துவர். இந்தியாவின் மூத்த இதய மருத்துவர். டாக்டர் சிவராமகிருஷ்ண ஐயர் பத்மாவதி.

இந்தியாவின் முதல் இதய மருத்துவர். இந்தியாவின் மூத்த இதய மருத்துவர். டாக்டர் சிவராமகிருஷ்ண ஐயர் பத்மாவதி. டாக்டர் பத்மாவதிக்கு வயது நூற்றி ஒன்று (101). பத்மாவதி 1917-இல் பர்மாவின் தலைநகரான மியான்மரில் (அன்றைய ரங்கூன்) பிறந்தவர். தற்போது, இந்தியாவில் இருக்கிறார். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகிறார். வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை டில்லியில் இருக்கும் தேசிய இருதய நிலையம் (நேஷனல் ஹார்ட் இன்ஸ்டிடியூட்) என்கிற மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை அளித்து வருகிறார். இந்தியாவின் முதல் இதய மருத்துவமனையை ஆரம்பித்தவரும் இவரே. முதுமையைத் தோற்கடித்திருக்கும் பத்மாவதி இதய நோயாளிகளின் காவல் தெய்வமாக இருக்கிறார்.

'அப்பா சிவராமகிருஷ்ணன் ஐயர் வழக்கறிஞராக ரங்கூனில் பணிபுரிந்து வந்தார். அப்போது பெண்கள் மருத்துவம் அல்லது கலைக் கல்லூரி என ஏதோ ஒன்றில்தான் படிக்க முடியும். பொறியியல் கல்லூரி அங்கே கிடையாது. அப்பா என்னை மருத்துவம் படிக்கச் சொன்னதால் படித்தேன். மருத்துவம் படித்து முடித்த நிலையில், பர்மாவை ஜப்பான் தாக்கியது. வேறு வழியின்றி, நாங்களும் இந்தியா திரும்பினோம். குடும்பம் கோவையில் அமைந்தது. பிறகு மருத்துவத்தில் மேல் படிப்பிற்காக லண்டன் சென்றேன். அங்கே பட்டங்கள் பெற்று, அமெரிக்கா சென்றேன். அங்கே உலகப் புகழ்ப் பெற்ற மருத்துவர்கள் பலரிடம் பணி புரிந்தேன். ஹார்வர்டிலும் மருத்துவம் படித்தேன். ஆராய்ச்சிகள் செய்தேன். எனக்கு அம்மா அப்பாவிடம் ரொம்பப் பிரியம். தம்பி, சகோதரிகள் இந்தியாவில் இருந்ததும் இன்னொரு காரணம். பல அரிய வாய்ப்புகள் அமெரிக்காவில் கிடைத்தாலும், உதறிவிட்டு குடும்ப பாசம் காரணமாக இந்தியா திரும்பினேன்.

இந்தியா திரும்பியதும் அன்றைய சுகாதாரத்துறை அமைச்சர் ராஜகுமாரி அம்ரித்கவுர் டில்லியில் மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேரச் சொன்னார். பிறகு அங்கேயே பேராசிரியர் ஆனேன். 1952 - லிலிருந்து இதயவியல் துறையில் எனது பயிற்சியைத் தொடங்கினேன். இந்தியாவில், முதல் இதயவியல் சோதனை மையத்தை ஏற்படுத்தினேன். டில்லி மருத்துவக் கல்லூரியில் முதல் இதயவியல் துறையையும் ஆரம்பித்தேன். இந்தியா முழுவதும் இதயம், அதற்கு வரும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக முதன் முதலாக இந்தியாவின் முதல் 'ஹார்ட்' ஃபவுண்டேஷனையும் அமைத்தேன். என்னைக் கெளரவப்படுத்த இந்திய அரசு 1967 -இல் பத்மபூஷண் விருதினையும், 1992 -இல் பத்மவிபூஷண் விருதினையும் வழங்கியது. 1981- இல் நான் தொடங்கிய டெல்லி நேஷனல் ஹார்ட் இன்ஸ்டிட்யூட்டின் இயக்குநராகவும், ஆல் இந்தியா ஹார்ட் ஃபவுண்டேஷனின் நிறுவனர் மற்றும் தலைவராகவும் செயல்பட்டு வருகிறேன்.

'டில்லியில் ஆரம்ப காலத்தில் லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் பணி புரிந்தேன். என்னிடம் இதயத்தில் பிரச்னை உள்ள ஆண் நோயாளிகளும் வருவார்கள். அவர்களை ஆய்வு செய்ய, சிகிச்சை தர மருத்துவமனையில் தங்கச் சொல்வேன். 'பெண்களுக்கு மட்டுமான மருத்துவமனையில் ஆண்கள் தங்குவதா' என்று கேட்பார்கள். 'நோயாளிகளில் பால் வேற்றுமை பார்க்கக் கூடாது' என்பேன். என்னிடம் இதயத்தின் பிரச்னைகளுக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியம், பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ண மேனன். இந்திரா காந்தியும் அடிக்கடி என்னிடம் வருவார். ஒருமுறை அமைச்சர் டி.பி. தர் என்பவர் சிம்லா சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டது. சிம்லாவிற்கு என்னை அழைத்துச் சென்றார்கள். சிகிச்சை செய்து தர்ரைக் காப்பாற்றினேன்.

'இப்போது தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்துவிட்டது. அதுவும், இதயம் தொடர்பான துறையில் அதிவேக முன்னேற்றம். மருத்துவம் குறித்த நூல்களை வாசித்து மருத்துவ முன்னேற்றங்கள் குறித்து அறிந்து கொள்கிறேன். அத்துடன், சரித்திரம், பயணம், புவியியல் குறித்துள்ள நூல்களையும் வாசிப்பேன். எனது நீண்ட ஆயுளின் ரகசியம் என்ன என்று பலரும் கேட்பார்கள். எதையும், வாழ்க்கையின் ஓர் அங்கமாக எடுத்துக் கொள்வது. இன்பம், துன்பம் வாழ்க்கையின் இரண்டு துருவங்கள். இவையில்லாமல் வாழ்க்கையில்லை. இந்தப் புரிதலை பர்மாவின் புத்த மதம் என்னுள் ஏற்படுத்தியது. அடுத்தது நீந்துதல். ஆண்டில் முக்கால்வாசி மாதங்களில் நீச்சல் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். குளிர் காலத்தில் நடைபயிற்சி. முன்பு டென்னிஸ் ஆடுவேன். இப்போது வயது அனுமதிப்பதில்லை. ஓய்வு நேரத்தில் கர்நாடக சங்கீதத்தில் லயிப்பேன்.

'கல்யாண பருவத்தில் மருத்துவ படிப்பு ஆய்வு, ஆராய்ச்சி என்று கவனம் திரும்பிவிட்டதால் திருமணம் பற்றி யோசிக்கவே இல்லை. நினைப்பும் எழவில்லை. உடன் பிறந்தவர்கள், அவர்களின் வாரிசுகள்தான் என் குடும்பம். மக்களின் வாழ்க்கை முறை பெரிய அளவில் மாறிவிட்டது. முன்பெல்லாம் இரு வேளை உணவுதான். இப்போது மூன்று வேளை. நடுவே தேநீர், காபி, சிற்றுண்டிகள், நொறுக்குத் தீனிகள்...

கொழுப்பும் உப்பும் அதிகமுள்ள உணவு வகைகள்தான் இதயத்தில் பிரச்னைகளை உருவாக்குகின்றன. பெரும்பாலும் யாரும் நடப்பதில்லை. நடக்க விரும்புவதில்லை. பஸ்ஸில் போகிறார்கள், இரண்டு, மூன்று, நான்கு சக்கர வாகனங்களில் சிறிய தூரத்திற்கும் பயணிக்கிறார்கள். உடல் பருமன் அடைவது, தவறான உணவு வகைகளை சாப்பிடுவது, புகை பிடித்தல் மது அருந்துதல், உடற்பயிற்சி இல்லாமல் இருத்தல்... இவைதான் இதயத்தின் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. மருந்திடம் நம்மை ஒப்படைத்து விடக் கூடாது. அப்படி செய்தால் நாம் மருந்துக்கு அடிமையாகிவிடுவோம். மருந்துகளை உங்கள் முதலாளியாக மாறிவிட அனுமதிக்காதீர்கள். சென்ற தலைமுறைக்கு ஸ்டென்ட், பை பாஸ் அறுவை சிகிச்சை , மாரடைப்பு என்னவென்றே தெரியாது. இது குறித்து யாரும் சிந்திப்பதில்லை. இப்போது நாற்பது வயதுக்கும் குறைவானவர்களுக்கும் மாரடைப்பு வருகிறது. எனது ஆயுளின் ரகசியம் என்னவென்று கேட்பவர்கள் அதன்படி நடந்தால் இதய பிரச்னைகள் இல்லாமல் வாழலாம்’ என்கிறார் டாக்டர் பத்மாவதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com