'மஞ்சள் காமாலை என்பது நோயல்ல'

மஞ்சள் காமாலை என்பது நோயல்ல; அது கல்லீரல் பாதிப்புக்கான அறிகுறி என்று சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையின் கல்லீரல் சிகிச்சைப் பிரிவு தலைவர்

மஞ்சள் காமாலை என்பது நோயல்ல; அது கல்லீரல் பாதிப்புக்கான அறிகுறி என்று சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையின் கல்லீரல் சிகிச்சைப் பிரிவு தலைவர் டாக்டர் நாராயணசாமி கூறினார்.
மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் இடையேயான கலந்துரையாடல் நிகழ்ச்சி, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒவ்வொரு திங்கள்கிழமையும் நடைபெற்று வருகிறது. இதில், கல்லீரல் மருத்துவத் துறையின் சார்பில் திங்கள்கிழமை கலந்துரையாடல் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கல்லீரல் நோய்கள், அவற்றின் அறிகுறிகள், கல்லீரல் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. கல்லீரல் பாதிப்பை விளக்கும் மாதிரிகளும் நிகழ்ச்சியில் இடம்பெற்றிருந்தன. மேலும், பொதுமக்களின் சந்தேகங்களுக்கும் மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.
நிகழ்ச்சியில் டாக்டர் நாராயணசாமி பேசியது: உடலின் மிகப்பெரிய உறுப்பான கல்லீரலானது நாள்தோறும் பல்வேறு பணிகளைச் செய்கிறது. உணவின் மூலம் கிடைக்கும் ஆற்றலை ரத்தக் குழாய்கள் மூலம் அந்தந்த உறுப்புகளுக்கு அனுப்பி அவற்றுக்கு உயிரூட்டுகிறது. மஞ்சள் காமாலை என்பது நோயல்ல; அது கல்லீரல் பாதிப்பைத் தெரிவிக்கும் ஓர் அறிகுறியாகும்.
மேலும் கல்லீரல் பாதிப்புக்கென்று குறிப்பிட்ட அறிகுறிகள் எதுவும் கிடையாது. பசியின்மை, தூக்கமின்மை உள்ளிட்ட சாதாரண அறிகுறிகளே தோன்றும். இதன் முக்கிய அறிகுறி மஞ்சள் காமாலைதான். 
கல்லீரலைப் பாதுகாக்க சரிவிகித உணவுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்; மதுப் பழக்கத்தைக் கைவிட வேண்டியதும் அவசியம்.
கல்லீரலைப் பரிசோதனை செய்யும் சிறப்பு ஸ்கேன் கருவி தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக 2012 -ஆம் ஆண்டு, ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் நிறுவப்பட்டது. அதன் மூலம் இதுவரை 5,000 நோயாளிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 'ஹெபடைடிஸ் பி' பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான தடுப்பூசி இம்மருத்துவமனையில் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10 மணி முதல் 12 மணி வரை போடப்படுகிறது. பொதுமக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com