வழக்கத்தைவிட அதீத சோர்வாக உள்ளதா? லிவர் பிரச்னைக்கான அறிகுறிகள் இவை!

மனிதனின் உள் உறுப்புக்களில், பெரிய உறுப்பாக அமைந்திருப்பது, கல்லீரல்தான் (லிவர்).
வழக்கத்தைவிட அதீத சோர்வாக உள்ளதா? லிவர் பிரச்னைக்கான அறிகுறிகள் இவை!

மனிதனின் உள் உறுப்புக்களில், பெரிய உறுப்பாக அமைந்திருப்பது, கல்லீரல்தான் (லிவர்). மிகப் பெரிய நீர்மம் சுரக்கும் சுரப்பியாக செயல்படும், இந்த உறுப்பின் பங்களிப்பு அளவிடமுடியாதது. அப்படி என்ன தான் அதீதமான வேலைகளைச் செய்கிறது இந்தக் கல்லீரல் என நினைக்கத் தோன்றுகிறதல்லவா? 

நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆவதற்கு பித்த நீர் சுரக்க வேண்டும். அந்த பித்த நீரை தயாரிப்பது கல்லீரல்தான். ரத்தத்தில் உள்ள 80 சதவிகித கொழுப்பை, பித்த நீராக மாற்றி, பித்தப்பையில் சேமித்து வைக்கிறது. நாம் உட்கொள்ளும் உணவிலிருந்து சத்துக்களை, நம் உடலுக்கு ஏற்ற முறையில் மாற்றித் தருகிறது. உணவிலிருந்து பெறப்படும் ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கல்லீரல் வழியாகத்தான் உடலின் பல பாகங்களையும் சென்றடைகிறது. 

பிளாஸ்மாவை ரத்தமாக மாற்றும் வேலையைச் செய்கிறது. ஆற்றலை சேமித்து வைக்கும் கிளைக்கோஜன் என்னும் வேதிப்பொருளை இந்த உறுப்புதான் சேமித்து வைக்கிறது. வேண்டாத நுண்ணுயிர்களை அழித்து, ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களைச் சீர் செய்து, ரத்தத்தை தூய்மைப்படுத்துகிறது. கார்போஹைடிரேட், புரதச்சத்து, கொழுப்புச்சத்து, வைட்டமின்கள், மினரல்களை சேமித்து வைக்கிறது. 

ஒரு மனிதனின் கல்லீரல், சராசரி 1.3 கிலோ கிராம் முதல் 1.6 கிலோ கிராம் எடை இருக்கும். இது அதிக எடை கொண்ட உள்ளுறுப்பு என்றே சொல்லலாம். இந்த உறுப்பு சரியாகத் தன் வேலைகளைச் செய்து  வந்தால், உடலில்  நமக்கும் எந்த உபாதையும் ஏற்படாது. ஆனால் சற்றே தவறிவிட்டால் போதும். தொடர்கதையாக உறுப்புக்களில் பாதகங்கள் ஒவ்வொன்றாகத் தலை தூக்கத் தொடங்கும். 

இத்தனையொரு உன்னதமான உறுப்பினை நாம் எவ்வளவு ஜாக்கிரதையாகப் பராமரிக்க வேண்டும்? கல்லீரல் சரியாகப் பராமரிக்கப்படாமல் இருந்தால், கல்லீரல் நோய்கள் அறிகுறிகள் என்னென்ன? 

1. தோலில் மஞ்சள் நிறம். 
2. மஞ்சள் காமாலை. 
3. பசியின்மை. 
4. வழக்கத்தைவிட அதிகமான சோர்வு. 
5. உடல் எடை  கூடுதல் . 
6. வாயில், நாக்கில் வரட்சித்தன்மை. 
7. அடர்ந்த நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது. 
8. வயிற்றுப்போக்கு. 
9. மூட்டுகளில் வலி.
10. அடி வயிற்றுப்  பகுதிகளில் ஒரு இம்சை. 
11. ஆண்களுக்கு மார்பக வளர்ச்சி. 
12. ரத்தம் உறைவதில் பிரச்சனை. 
13. காலில் நீர் தேங்குதல். 
14. நிறம் மாறி மலம் கழித்தல். 

இவைகளைப் போன்ற அறிகுறிகள் தோன்றினால், நீங்கள் உடல் நலத்தில், அதுவும் முக்கியமாக கல்லீரலைப் பேணுவதில், அக்கறை காட்டவில்லை என்று தெரிந்து கொள்ளுங்கள்.  நம்மால் என்ன செய்ய முடியும் என்பதுதானே உங்கள் எண்ணம்? கவலை வேண்டாம். நாம் உண்ணும் உணவின் மூலம் அவ்வுறுப்பிற்கு பராமரிப்பைத் தர முடியும்.

கேரட்

இதில் மூன்று வகையான அமினோ அமிலங்கள் (amino acids) இருப்பதால், எதிர் ஆக் சிகரணியாகச் ( anti oxidant) செயல்படுகிறது. அதனால் நச்சுக்கள் சேர்வது தவிர்க்கப்படுவதுடன், வைட்டமின் ஏ சக்தியும் உடலுக்குக் கிடைக்கிறது. 

தக்காளி

இதில் இருக்கும் எதிர் ஆக்சிகரணி, கல்லீரலில் நச்சுப்பொருட்கள் இருந்தால் வெளியேற்றுவதோடு, புற்று நோயை எதிர்த்து போராடுகிறது. 

சிகப்பு திராட்சை

இப்பழத்தில், பதினெட்டு வகையான எதிர் ஆக்சிகரணிகள் இருப்பதால் கல்லீரலில் நச்சுத்தன்மையை  நீக்கும்  தன்மை அதிக அளவில் காணப்படுகிறது. உடலுக்கு   வைட்டமின் சி யும்  நிறைய கிடைக்கிறது.

பசலைக்கீரை

பொதுவாக கீரை வகைகள் உடலுக்கு நல்லது என்றாலும், இந்த வகைக் கீரை நச்சுக்கழிவுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது. இதில் இரும்புச் சத்தும் நிறைந்திருக்கிறது. 

முட்டைக்கோஸ்

இக்காய்க்கு கல்லீரலை சுத்தப்படுத்தும் தன்மை உண்டு. அதைத்தவிர, அழற்சியை எதிர்க்கும் தன்மையும் இருப்பதால், பல விதமான நோய்களிலிலிருந்தும்  நமக்கு பாதுகாப்பு கொடுக்கிறது. 

ஆப்பிள்

இப்பழம் குடலை சுத்தகரிப்பதால், கல்லீரல், சிரமப்படாமல் தன் வேலையைச் செய்ய முடிகிறது. 

பூண்டு

இதில் சல்ஃபர் நிறைந்திருப்பதால் கல்லீரலை சுத்தப்படுத்தும் வேலையைச் செய்கிறது. இதில் அல்லிசென், செலினியம் ஆகிய மினரல்கள் இருப்பதால், கல்லீரலை நச்சுகள் அணுகாமல் பாதுகாக்கிறது. 

சாப்பிடும் பொழுது வயிறு நிறைய சாப்பிட வேண்டும் என்பதில்லை. உடலுக்குத் தேவையான போஷாக்கான உணவினை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும் என்பதுதான் முக்கியம். நம்முடைய ஆரோக்கியம் நம் கையில்தான் உள்ளது என்பதை புரிந்து கொண்டீர்களா? உடல் நலம் பேணுவோம். ஆரோக்கியமான வாழ்வுக்கு அடிகோலுவோம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com