உங்கள் முழங்கையிலும், முழங்காலிலும் கருப்புத் திட்டுக்களா? இப்படி செஞ்சு பாருங்களேன்!

பொதுவாக, பெண்கள் தான் தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் அக்கறை காட்டுவார்கள் என்பதுதான் பரவலான கருத்து.
உங்கள் முழங்கையிலும், முழங்காலிலும் கருப்புத் திட்டுக்களா? இப்படி செஞ்சு பாருங்களேன்!

பொதுவாக, பெண்கள் தான் தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் அக்கறை காட்டுவார்கள் என்பதுதான் பரவலான கருத்து. ஆனால் உண்மை அதுவல்ல. பெண்களுக்குச் சமமாக ஆண்களும் தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை.

அழகுபடுத்திக் கொள்வது என்பது முகத்தில் க்ரீம்கள் தடவிக்கொண்டு சுருக்கம் தெரியாமல் இளமையாக வைத்துக் கொள்வதோ, தலைக்குச் சாயம் பூசிக்கொண்டு இளமையாகக் காட்டிக்கொள்வதோ மட்டும் இல்லை. இவற்றையெல்லாம் தாண்டி எத்தனையோ விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை மறந்து விடுகிறோம். எல்லாமே சின்ன விஷயங்கள்தான். ஆனால் சிலது  கண்ணுக்குப் புலப்படுவது இல்லை. சிலதை  துணிதான் மறைத்துக் கொள்கிறதே என்று அசிரத்தையான விட்டு விடுகிறோம். 

அவைகளில் ஒன்றுதான் முழங்கையிலும், முழங்காலிலும் உண்டாகும் கருந்திட்டுக்கள். பாலின வேறுபாடின்றி இருபாலாருக்குமே இந்தக் கருமை வருகிறது. காரணம் என்ன? 

முழங்கையிலோ, முழங்காலிலோ எண்ணெய்ச் சுரப்பிகள் கிடையாது சருமத்தில் ஏற்படும் உயிரற்ற செல்கள், அவ்விடங்களில் தேங்கி விடலாம். அடிக்கடி ஏற்படும் உராய்வினால் இருக்கலாம். அல்லது அப்பாகங்கள் வெயிலினால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கலாம். முழங்கையை கண்ணாடியில் தான் காண முடிகிறது. முழங்காலைப் பொறுத்தவரை பொதுவாக ஆடை மறைத்தாலும், பெண்கள் குட்டைப் பாவாடை அணியும் பொழுதும், ஆண்கள் ஷார்ட்ஸ் அணியும் பொழுதும் கருந்திட்டு அசிங்கமாகத் தெரியும் வாய்ப்பு உண்டாகிறது. 

இந்தக் கருப்பைப் போக்க, காஸ்ட்லி க்ரீமை வாங்கி உபயோகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் சில க்ரீம்களால் ஒவ்வாமை ஏற்பட்டு, பக்க விளைவுகளால் பாதிப்பு உண்டாகும். அனைவரும் பயன் அடையும் வகையில் எளிதான நிவாரணம் நம் வீட்டிலேயே பெறலாம். சருமத்திற்கும் எந்தவித பக்கவிளைவோ பாதிப்பையோ உண்டாக்காது. 

காய்ந்து போகாத, நீருள்ள வெள்ளரிக்காயை வில்லையாக  நறுக்கிக் கொள்ளவும். அவ்வில்லையை முழங்கை, முழங்காலில் நன்கு தேய்த்து, பதினைந்து நிமிடங்கள் ஊற விடவும். பிறகு குளிர்ந்த நீரால் கழுவவும். 

வெள்ளரிச்  சாறு, எலுமிச்சை சாறு இரண்டையும் சம பங்கு எடுத்துக்கொண்டு, அந்தச் சாறினை தேவைப்படும் இடங்களில் தடவி இருபது நிமிடங்கள் ஊறிய பின்பு கழுவவும்.  

வெள்ளரிக்காயில் வைட்டமின் A, வைட்டமின் C இரண்டும் உள்ளது. வெள்ளரிக்கு, தோலினை வெளுக்க வைக்கும் ஆற்றல் உண்டு. எலுமிச்சம் பழத்தில் ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் வைட்டமின் C நிறைந்துள்ளது. இவை இரண்டிற்குமே செல்களைப் புதுப்பிக்கும் சக்தி உண்டு. 

பேக்கிங் சோடாவிற்கு கருமை நிறத்தை மாற்றி, தோலினை செம்மைப்படுத்தும் ஆற்றல் உண்டு. ஆகையால், இரண்டாக நறுக்கிய எலுமிச்சம்பழத்தின் ஒரு பாதியில், ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடைவைத் தூவி, தேவைப்படும் இடங்களில் ஒரு நிமிடத்திற்குக் குறைவில்லாமல் தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். 

ஆலோவெரா என்று கூறப்படும் சோற்றுக் கற்றாழையில் இருக்கும் விழுதுடன் சிறிது பால் சேர்த்து குழைக்கவும். அந்தக் குழைவை படுக்கப்போகும் சமயத்தில் இரவில் தடவிக் கொள்ள வேண்டும். மறுநாள் காலை, தண்ணீரில் கழுவ வேண்டும். சோற்றுக் கற்றாழைக்கு பாக்டீரியாக்களை எதிர்க்கும் சக்தி உண்டு. பாலுடன் சேர்ந்து நல்ல நிறமியாகச் செயல்படுகிறது. 

உருளைக்கிழங்கு ஒரு நிறமி என்றே சொல்லலாம். உருளைக்கிழங்கினைத் துருவி, நன்கு பிழிந்துவிடவும். அந்தச் சாறினை மட்டும் தடவி, பதினைந்து நிமிடங்கள் ஊற விடவும். பிறகு குளிர்ந்த நீரால் கழுவவும். இந்தக்கிழங்கிற்கு, சொர சொரப்பான தோலை மென்மையாகி, தோலினை மெருகூட்டும் தன்மை உண்டு. 

மெலனின் என்னும் காரணியால்தான் தோல் கருமையாகி விடுகிறது. மஞ்சள், மெலனினை கட்டுப்படுத்துவதோடு, செல்களை புதுப்பிக்கும் பணியையும் மேற்கொள்கிறது. நல்ல சுத்தமான மஞ்சள் தூளுடன், பாலினை சேர்த்துக் குழைத்து, கருந்திட்டுக்களில் தடவி, நன்கு காயவிடவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும். 

தேங்காய் எண்ணெய்யில், ஃபேட்டி அமிலமும், வைட்டமின் E யும் நிறைந்துள்ளது. இவற்றிற்கு சருமத்தை சீர்படுத்தும் சக்தி உள்ளது. சிறிது தேங்காய் எண்ணெய்யுடன், அரை ஸ்பூன் எலுமிச்சம்பழ சாறினைக் கலந்து தோலில் தடவவும். தேவைப்படும் சமயத்தில் கழுவினால் போதும். 

தேன், ஒரு அருமையான இயற்கை நிவாரணி. இதற்கு சருமத்தை ஈரப்பசையுடன் வைக்கும் தன்மை உண்டு. இரண்டு டீஸ்பூன் தேனில், ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா, அரை ஸ்பூன் எலுமிச்சம்பழ சாறு சேர்க்கவும். இந்தக் கலவையை கருந்திட்டுக்களில் தடவி முப்பது நிமிடங்கள் ஊறிய பின்பு, வெதுவெதுப்பான நீரால் கழுவவும். 

சிலருக்கு அக்குள் பகுதி கூட மிகவும் கருப்பாகக் காணப்படும் வெளியில் சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு மனதிற்குள் புழுங்குவார்கள். அவர்களும் மேற்படி முறைகளைக் கையாளலாம். அவர்களுக்குக் கருமை குறைவதுடன் அப்பகுதிகளில் துர்நாற்றமும் விலகும். 

பார்லருக்குப் போகாமல், பணத்தை தண்டம் அழாமல் எவ்வளவு எளிமையான முறையில் உங்களை மெருகேற்றிக் முடிகிறது பாருங்கள். பிறகு என்ன? 'ஜிலு ஜிலு ஜிலு வென்று நானே ஜகத்தை மயக்கிடுவேனே’ என்று ஜாலியாகப் பாடலாமே! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com