உலர் கருந்திராட்சையின் மருத்துவ குணங்கள்!

ஆயுர்வேத கூற்றுப்படி, பழங்களில் உத்தமமானது உலர்ந்த கருந்திராட்சைதான் என்கிறது.
உலர் கருந்திராட்சையின் மருத்துவ குணங்கள்!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
என் வயது 37. மாதவிடாய் நாட்களில் அதிக உதிரப்போக்கினால் அவதியுறுகிறேன். இரத்தத்தில் சிவப்பணு குறைவதை சரிசெய்ய, பேரீச்சம்பழம் சாப்பிட்டால் நல்லது என உறவினர்கள் கூறுகின்றனர். உடல்சூடு, சிறுநீர் துவார எரிச்சல், மலச்சிக்கல், மயக்கம், தண்ணீர் தாகம் போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன. இவற்றைச் சரி செய்ய நான் பேரீச்சம்பழம் சாப்பிடலாமா? 
-வசந்தி, வேலூர்.

ஆயுர்வேத கூற்றுப்படி, பழங்களில் உத்தமமானது உலர்ந்த கருந்திராட்சைதான் என்கிறது. அஷ்டாங்க ஹிருதயம் எனும் ஆயுர்வேத நூலில் பழங்களைப் பற்றிய வர்ணனையில் "த்ராக்க்ஷு பலோத்தமா' என்று காணப்படுகிறது. அதற்கு அர்த்தம் பழங்களில் மிகவும் உயர்ந்தது உலர் கருந்திராட்சைதான் என்று கூறலாம்.

அதைப்பற்றிய விவரங்களை மேலும் கூறுகையில், ஆண்களின் விந்தணுப்பெருக்கம் செய்வதில் சிறந்தது. கண்பார்வையைக் கூராக்கக் கூடியது. மலம், சிறுநீர் ஆகியவற்றைத் தங்கு தடையில்லாமல் வெளியேற்றக் கூடியது. சுவையிலும், சீரண இறுதியிலும் இனிப்பான சுவையுடையது. உடலுக்கு நெய்ப்பு ஏற்படுத்தித் தருவது. சிறிது துவர்ப்புச் சுவை கொண்டது. உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக் கூடியது. கனமான தன்மையைக் கொண்டதால், எளிதில் செரிக்கக்காதது. குடலில் ஏற்பட்டுள்ள வாயு அழுத்தத்தைக் குறைக்கக் கூடியது. உடலின் சிறுசிறு ஓட்டைகளின் வழியே கசியக் கூடிய இரத்தத்தை உறையச் செய்து நிறுத்தக் கூடியது. வாயில் பித்த தோஷத்தின் சீற்றத்தால் ஏற்படும் கசப்புச் சுவையினை நீக்கக் கூடியது. மதுபானத்தால் ஏற்படும் மயக்கம், தண்ணீர்தாகம், வறட்டு இருமல், பித்தக்காய்ச்சல், மூச்சிரைப்பு, குரல்வளையில் ஏற்படும் வலி, காசநோயினால் ஏற்படும் மார்புவலி ஆகியவற்றைக் குணப்படுத்தக் கூடியது என்றெல்லாம் புகழ்ந்து விவரிக்கப்பட்டுள்ளது.

உலர்கருந்திராட்சையை முக்கியமான மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் திராக்ஷôதி லேஹ்யம் எனும் ஆயுர்வேத மருந்து, உங்களுடைய சிவப்பு அணுக்கள் நன்றாக வளரக் கூடிய வகையில் பயன்படலாம். ஒரு கிலோ உலர் கருந்திராட்சை, திப்பிலி ஒரு கிலோ, சர்க்கரை 300 கிராம், அதிமதுரம், சுக்கு, மூங்கிலுப்பு ஆகியவை வகைக்கு 120 கிராம், இவை அனைத்தையும் நன்றாகப் பொடித்து, துணியால் சலித்து அதில் 960 மி.லி., நெல்லிச்சாறு சேர்த்து லேகியம் காய்ச்சுவார்கள். ஆறிய பின், தேன் ஒரு லிட்டர் சேர்த்து ஒன்றாகக் கலந்து பாட்டிலில் பத்திரப்படுத்தி, அதிலிருந்து பதினைந்து கிராம் காலை மாலை வெறும் வயிற்றில் சுமார் நாற்பத்தி எட்டு நாட்கள் சாப்பிட்டு வர, சோகை நோயின் முற்றிய நிலை, மஞ்சள் காமாலை, இதயநோய், காய்ச்சல், குன்மம், உதரம் எனும் வயிறு பெருக்கம், கை கால் வீக்கம் போன்றவை குணமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த லேஹ்ய மருந்தை சாப்பிடுவதற்கான தகுதியை குடல் பெற்றிருக்க வேண்டும்.  செரிமானத்திற்கு எளிதில் வசப்படாத இம்மருந்தை எடுத்த நிலையிலேயே சாப்பிட முடியாது என்பதால், தாடிமாதி க்ருதம் எனும் நெய்மருந்தை முதலில் சில நாட்கள் நீங்கள் சாப்பிடுவதால் பசியினுடைய தன்மை நன்கு அதிகரிக்கும். அதிகமான உதிரப்போக்கையும் அது கட்டுப்படுத்தும். அதன் பிறகு உலர் கருந்திராட்சையை இரவு முழுவதும் சுமார் 15 கிராம் அளவில் வெந்நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் கசக்கிப் பிழிந்து அதை வடிகட்டிக் குடிப்பதால் நன்றாக நீர் பேதியாகும். அதற்குப் பிறகு வாசாகுடூச்சியாதி கஷாயத்தை சுமார் 15 முதல் 21 நாட்கள் வரை சாப்பிட்டு, புனர்னவா மண்டூரம் எனும் மாத்திரையை மோர் சாதத்துடன் 7 முதல் 14 நாட்கள் வரை சாப்பிட வேண்டும். இவற்றின் மூலம் நன்றாக கொழுந்துவிட்டு எரியக் கூடிய அளவிற்கு பசித்தீ வளர்ந்துவிடுவதால் நீங்கள் மேற்குறிப்பிட்ட லேஹ்ய மருந்தைச் சாப்பிடுவதற்கான முழுத்தகுதியையும் அடைந்துவிடுகிறீர்கள். சுமார் 10 கிராம் வீதம் காலை, மாலை இம்மருந்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவதால் நன்மைகள் பல உங்களுக்குக் கிடைக்கலாம். உணவினுடைய சத்தான பகுதியை உடல் உட்புற தாதுக்களுக்கு எடுத்துச் சென்று அணுவினுடைய சீரான செயல்பாட்டினால் அவை முழுவதும் சத்தாக மாற்றப்பட்டு உடல் ஊட்டத்திற்கான வழியையும் இம்மருந்து தங்களுக்கு ஏற்படுத்தித் தரும்.   
(தொடரும்)

பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com