நரம்பு, தசை மண்டலங்களைத் தாக்கும் வாத நோய்!

நரம்பு மற்றும் தசை மண்டலங்களைத் தாக்கும் ஒரு வகையான வாதநோயாக இதைக் கருதலாம்.
 நரம்பு, தசை மண்டலங்களைத் தாக்கும் வாத நோய்!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

என் வயது 73. 2015 ஆம் ஆண்டு சிறிது சிறிதாக செயல் இழந்தேன். தண்ணீர் விழுங்கும் சக்தியும் போய்விட்டது. Gullian Barre Syndrome என முடிவு செய்து என் Motor nervous system தாக்கப்பட்டுள்ளது என்று கூறி சிகிச்சை செய்தனர். 4 மாதம் சிகிச்சையளிக்கப்பட்டு, physio theraphy மூலம் மேம்பட்டு வீட்டிற்கு வந்தேன். என் நரம்பு மற்றும் தசை மண்டலம் வலுப்பெற்று, சிறு உதவியுடன் என் வேலைகளை நானே செய்து கொள்ளும் நிலைக்கு வர ஆயுர்வேத மருந்துகள் உள்ளனவா? சிகிச்சை முறைகள் எவை?

எம்.பார்த்தசாரதி, சென்னை-5.

நரம்பு மற்றும் தசை மண்டலங்களைத் தாக்கும் ஒரு வகையான வாதநோயாக இதைக் கருதலாம். கபம் மற்றும் பித்த தோஷங்களால் சூழப்படாத தனித்த வாயுதோஷமுள்ள இது போன்ற நோய் நிலைகளில் மூலிகை நெய், மாமிச எண்ணெய், எலும்புச்சத்து (மஜ்ஜை) மூலிகை எண்ணெய் போன்றவை பருகச் செய்து குணப்படுத்த வேண்டும் என்று ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. இதற்கு நெய்ப்புச் சிகிச்சை என்று பெயர். இந்த சிகிச்சையால் எற்படும் களைப்பைப் போக்க பால் பருகச் செய்ய வேண்டும். பிறகு நெய்ப்பு பொருள் கலந்தவையான பருப்புக் கஞ்சியாலும், கிராமிய பிராணி, நீர்வாழ்வன, சதுப்புநிலத்தில் வசிப்பன இவற்றின் மாமிச சூப்பாலும், நன்கு நெய்ப்புக் கலந்தவையான பால் பொருட்கள், எள்ளும் அரிசியும் கலந்து தயாரித்த கஞ்சிகள், புளிப்பும், உப்புச்சுவை உள்ளவையும், உடலை பருக்கச் செய்பவையுமான உணவுவகை, ஆஸனவாய் வழியே செலுத்தப்படும் மூலிகை எண்ணெய்கள், மூக்கினுள் செலுத்தப்படும் மருந்துகள் மூலமாகவும் மீண்டும் நெய்ப்பை உண்டாக்க வேண்டும். பிறகு உடலெங்கும் மூலிகை எண்ணெய்களை துணியில் கட்டி, உருண்டையாக்கி ஒத்தடம் கொடுத்து அடிக்கடி வியர்வை வரச் செய்ய வேண்டும். உடல் உறுப்புகள் கோணலாகவும், விரைத்தும், வேதனையுடனும் இருந்தாலும் நெய்ப்புப் பொருள் பூசப்பட்டு வியர்வை சிகிச்சை செய்யப்பட்டால் சுலபமாக விருப்பம் போல் வளைக்கத் தக்கதாகிறது. வியர்வை சிகிச்சை செய்யப்பட்டவருக்கு மயிர்க்கூச்சம், குத்துவலி, வளைதல், வீக்கம், விரைப்பு, பிடிப்பு முதலியவை உடனடியாக நீங்குகின்றன. மிருதுவான தன்மையும் உடலில் உண்டாகிறது.

நெய்ப்பு சிகிச்சைக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்? அது உலர்ந்த உடல் தாதுப்பகுதிகளை விரைவில் வளரச் செய்யும். உடல்பலம், பசித்தீயின் பலம், பிராணசக்தி ஆகியவற்றையும் அதிகரிக்கச் செய்யும். இந்த இரு சிகிச்சை முறைகளான நெய்ப்பு மற்றும் வியர்வை சிகிச்சைகளை அடிக்கடி வாத நோயாளிகளுக்குச் செய்வதால், குடல் மென்மையான தன்மையடைந்த நிலையில் வாத நோய்கள் நிலைபெறாது. இவ்வாறு சிகிச்சை செய்தும் தோஷ சேர்க்கையின் காரணமாக நோய் நீங்காவிடில், நெய்ப்புப் பொருள் கலந்ததும், மிருது குணமுள்ளதுமான பேதி மருந்துப் பொருட்களால் குடலைச் சுத்தப்படுத்த வேண்டும். அதற்கு சூடான பாலுடன் விளக்கெண்ணெய் கலந்து குடிக்கச் செய்து பேதியின் மூலமாக தோஷத்தின் கழிவுகளை நீக்கலாம். நெய்ப்பு, புளிப்பு, உப்பு, சூடு முதலிய குணங்களுள்ள உணவு வகைகளால் குடலில் மலச்சேர்க்கை பெருமளவு சேமிக்கப்படுவதால் வழியை அடைத்து வாயுவைத் தடைசெய்யும். ஆகையால் வாயுவை கீழ்நோக்கிச் செல்ல செய்யும் இது போன்ற மிருதுவான பேதி சிகிச்சை முறை மிகவும் நல்லதாகும்.

வீட்டிலிருந்து செய்து கொள்ளக் கூடியவை தலைக்கு க்ஷீரபலா தைலம் தேய்த்துக் குளித்தல், விதார்யாதி எனும் நெய் மருந்தை உருக்கி 15 மி.லி. அளவில் எடுத்து, 200 மி.லி. சூடாக சர்க்கரை கலந்த பாலுடன் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடுதல், மஹாமாஷ தைலத்தை இளஞ்சூடாக உடலெங்கும் தேய்த்து அரை-முக்கால் மணிநேரம் ஊறிய பிறகு, வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்தல், 30 மி.லி. தசமுலாரிஷ்டம், காலை இரவு உணவிற்கு பிறகு சாப்பிடுதல், அப்ரகம் எனும் கேப்ஸ்யூல் மருந்தை மதியம் 3 மணிக்கு, இளஞ்சூடான பாலுடன் சாப்பிடுதல், இரண்டு க்ஷீரபலா101 எனும் கேப்ஸ்யூல் மருந்து இரவு படுக்கும் முன் சிறிது சூடான பால் அல்லது வெந்நீருடன் சாப்பிடுதல் இவை மூலம் தசை மற்றும் நரம்பு மண்டலங்களை வலுப்பெறச் செய்யலாம். உணவில் இனிப்பு, புளிப்புச்சுவை சற்றுத் தூக்கலாகவும், கசப்பு, துவர்ப்புச்சுவை குறைவாகவும் பயன்படுத்தவும். உப்பு மற்றும் காரம் மிதமாகப் பயன்படுத்தலாம்.

 (தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com