குடற்புழுக்களை வெளியேற்ற...!

வயிற்றில் கிருமிகள் உள்ளவருக்கு முதலில் குடலில் எண்ணெய்ப் பசையை உருவாக்கும் வகையில்
குடற்புழுக்களை வெளியேற்ற...!

என் வயது 73. எனது குடலில் கொக்கிப் புழுக்கள் இருக்குமோ? என்ற சந்தேகம் உள்ளது. குடற்புழுக்களை வெளியேற்ற ஆயுர்வேத மருந்துகள் உள்ளனவா? ஆங்கில மாத்திரைகள் மூலம் வயிற்றில் உள்ள பூச்சிகளையும், புழுக்களையும் வெளியேற்றச் செய்யும் சிகிச்சை காரணமாக, மனித உடலுக்கு நன்மை செய்யும் நுண்ணுயிர்களும் அழிக்கப்படுகின்றன என்று பிரபல இருதய சிகிச்சை நிபுணர் ஈழ்.ஆ.ங. ஹெக்டே  எழுதிய கட்டுரைகளில் படித்துள்ளேன்.      

    
  - எம். ஜே.ஸ்வாமிநாதன், 
விருகம்பாக்கம், சென்னை-92.

வயிற்றில் கிருமிகள் உள்ளவருக்கு முதலில் குடலில் எண்ணெய்ப் பசையை உருவாக்கும் வகையில் 4-5 நாட்கள் நல்லெண்ணெய்யை சுமார் 15-20 மி.லி. காலை, மாலை பருகச் செய்த பின், உடலில் நன்கு வியர்வை வரும்படியான சிகிச்சையை பிரயோகம் செய்வார்கள். பிறகு வெல்லம், பால், மீன் முதலியவற்றை உணவாக அதிக அளவில் ஏற்க, குடலில் கிருமிகளையும் கபத்தையும் கிளர்ச்சியுறச் செய்து அன்று இரவு சுகமாகச் சென்ற பின், மறுநாள் பகலில் துளசி, வெண்துளசி, கருந்துளசி, காட்டுதுளசி, வாய்விடங்கம், நாயுருவி, எலிச்செவி, சிறுகுமிழ், தூதுவளை, பெரியநாயுருவி, தகரை, சிறுதேக்கு, முல்லைவல்லி, மணத்தக்காளி, கொட்டைக்கரந்தை, எட்டிக்கொட்டை, புல், ஜடாமாஞ்சி ஆகியவற்றை பாதி அளவு நீர் கொண்ட பசு மூத்திரத்தில் போட்டு கஷாயம் செய்து அதனுடன் திப்பிலி, மலங்காரக்காய், வாய்விடங்கம் இவற்றின் கல்கமும், எண்ணெய், ஸர்ஜசஷாரம் ஆகியவற்றையும் கலந்து எனிமா எனப்படும் வஸ்தி செய்வார்கள். அன்றைய தினமே சிவதைக் கல்கத்தை, மலங்காரக்காய், திப்பிலி இவற்றின் கஷாயத்தில் கலந்து உள்ளுக்குக் கொடுத்து வாந்தியும், பேதியும் ஏற்படுமாறு குடலை சுத்தம் செய்துவிடுவர். அதன் பிறகு பஞ்சகோலம் எனப்படும்- திப்பிலி, கண்டந்திப்பிலி, செவ்வியம், கொடிவேலி, சுக்கு ஆகியவை சேர்த்த கஞ்சி முதலிய வரிசையில் உணவு உட்கொள்ள வேண்டும். காரம், கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவை உள்ள கஷாயங்களால் உடலை நனைக்க வேண்டும். பசித் தீ நன்றாக உள்ள நிலையில் வாய்விடங்கத் தைலத்தால் வஸ்தி (எனிமா) செய்வது நம் பண்டைய ஆயுர்வேத வைத்ய முறையாகும்.

மோர் சேர்த்து பக்குவம் செய்யப்பட்ட கஞ்சியில் வாய் விடங்கம், திப்பிலி, மிளகு, கண்டந்திப்பிலி, முருங்கை இவற்றின் சூர்ணமும், ஸர்ஜசஷாரமும் கலந்து பருக வேண்டும் அல்லது வாகை, நாயுருவி, மலைவேம்பு, கேமுகப்புல், புரசைவிதை, பொன்னாங்கண்ணி, ஆவில்புங்கு இவற்றுள் ஒன்றின் சாற்றை தேனுடன் கலந்து லேகியமாக உபயோகிக்கலாம். கிருமி நோயாளி, குதிரையின் சாணித்தூளை வாய்விடங்க கஷாயத்திலாவது திரிபலைக் கஷாயத்திலாவது 100 தடவை ஊறவைத்து, தேன் கலந்து லேகியமாக உட்கொள்ள வேண்டும்.

எலிச்செவியனும் செடியின் இலைத் துளிரை நன்கு அரைத்து சிவப்பு அரிசி மாவுடன் கலந்து வடைப் பக்குவம் செய்து உண்டு, முன்குறிப்பிட்ட பஞ்ச கோலம், பஞ்ச லவணம் எனப்படும்- இந்துப்பு, ùஸவர்ச்சல உப்பு, வளையுப்பு, கறியுப்பு, வெடியுப்பு ஆகியவை கலந்த நீர்மோரை உணவிற்குப் பிறகு பருக வேண்டும். கடம்பு, கரிசாலை, நொச்சி இவற்றின் துளிரையும் இவ்வாறே உபயோகிக்கலாம் அல்லது வாய்விடங்கச் சூரணம் கலந்த மாவினால் பணியாரங்கள் தயாரித்து உண்ணலாம்.

குடல்கிருமி நோயாளிகள் பால் வகை, மாமிசவகை, நெய், வெல்லம், தயிர், இலைக்கீரை வகை, புளிப்பு, இனிப்பு ஆகிய சுவையுள்ள பொருட்களை விலக்க வேண்டும்.

தயாரித்து விற்கக்கூடிய மருந்துகளாகிய விழால்வேராதி கஷாயம், திக்தகம் கஷாயம், ஆரக்வதாதி கஷாயம், வில்வாதி குளிகை, மாணிபத்ரம் லேஹ்யம், கிருமிக்னவடி, கிருமிசோதினி மாத்திரை போன்றவை மருந்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட உகந்தவை.

இன்றும் கிராமங்களில் குப்பைமேனி இலைச்சாறு 100 மி.லி. வேப்பெண்ணெய் 5 மி.லி. கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு குடல் கிருமிகளை  அழித்து வெளியேற்றும் சிகிச்சை முறை மிகவும் பிரபலமானது. வேப்பம் இலைக் கொழுந்துடன் ஓமம் அரைத்து காலையில் உணவிற்கு முன் சாப்பிடுவதும் தேவையற்ற கிருமிகளை வெளியேற்றும். 

(தொடரும்)

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com