குமட்டல், வாய்க் கசப்புக்கு எளிய வைத்தியம்!

செரிமான குறைவோ தூக்க குறைவோ கிடையாது.
குமட்டல், வாய்க் கசப்புக்கு எளிய வைத்தியம்!

எனக்கு காலையில் எழுந்ததும் வாயில் அதிக உமிழ் நீர் ஊறுகிறது. குமட்டிக் கொண்டு வாந்தியாகிறது. வாய் கசக்கிறது. ஆனால் செரிமான குறைவோ தூக்க குறைவோ கிடையாது. இது எதனால்? இதை எப்படிக் குணப்படுத்துவது?

 -ராஜேந்திரன், சென்னை.

இரவில் தேங்காய், கொத்தவரங்காய், காராமணி, மொச்சைக் கொட்டை, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய்யில் தயாரித்த நேந்திரங்காய் வறுவல் போன்ற உணவுப் பொருட்களைச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இவை அனைத்தும் வயிற்றில் பித்த ஊறலை அதிகப்படுத்துபவை. உணவைச் செரிமானம் செய்யும் வயிற்றுப்பகுதியில் ஊறும் பித்தம், தன்குணங்களாகிய சிறு நெய்ப்பு, ஊடுருவும் தன்மை, சூடு, லேசு, துர்நாற்றம், கழிச்சல், நீர்த்தன்மை ஆகியவை அதிகமாகும் நிலையில், பித்தத்தை வெளியே வாய் வழியாகத் தள்ளுகிறது. புளிப்புத் தன்மை வாயில் அதிகம் தென்பட்டால் அது கட்டாயமாக ஜீரணக் குறைவுதான் என்று சொல்லிவிடலாம். கசப்புத்தன்மை தோன்றினால் பித்தம் - ரத்தத்துடன் கலந்து சுற்றிவருவதால் ஏற்படும் நிலை என்று அறியலாம்.

 சுமார் 150 கிராம் இஞ்சியை தோல் சீவி, அரைத்து, 600 மில்லி லிட்டர் தண்ணீரில் கலந்து சுமார் பத்து நிமிடங்களுக்குப் பிறகு வடிகட்டிக் கொள்ளவும். வடிக்கட்டியதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சிறிது நேரம் வைத்திருக்கவும். பாத்திரத்தின் அடியில் சுண்ணாம்பு போன்று தங்கும் பகுதியை நீக்குவதற்கு மேலேயுள்ள தெளிவான நீரை வடிகட்டி (சுமார் 400 மி.லி. இருந்தால் போதும்) அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு 800 மி.லி. கலந்து, 600 கிராம் சர்க்கரை சேர்த்துக் கரைத்து வடிகட்டவும். அதை அடுப்பிலேற்றி சிறுதீயில் காய்ச்சினால் அது சுண்டி ஒரு சிரப் போல ஆகிவிடும். காலையில் எழுந்தவுடன் ஏற்படும் பித்தக் குமட்டல், வாய்க் கசப்பு உள்ள போது, ஒன்றிரண்டு டீ ஸ்பூன் (சுமார் 10 மி.லி. அளவு) நாக்கில் விட்டுக் கொண்டு மெதுவாகச் சுவைத்து விழுங்கினால், பித்தத்தைக் குறைத்து வாந்தியை நிறுத்தும். வாய் கொப்பளித்து அழுக்கை அகற்றிய பிறகு, இதைச் சாப்பிடுவது நல்லது. ஐந்து மில்லி லிட்டர் சிரப்பை (1ஸ்பூன்), 30 மி.லி. தண்ணீரில் கரைத்துச் சாப்பிட்டால் , உணவின் குணக் கெடுதியால் ஏற்படும் பித்த சீற்றம் நன்றாகக் குறைந்துவிடும். அஜீரணமோ வாந்தியோ வரவே வராது.

கிராமங்களில் அந்தக் காலங்களில் செய்யும் எளிய  வேறு ஒருவகை கை வைத்திய முறை: 

 60 கிராம் சீரகத்தை ஒரு பீங்கான் கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். சீரகம் நன்றாக மூழ்குமளவு எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு வெய்யிலில் காய வைக்கவும். ஒன்றிரண்டு நாட்களில் சாறு நன்றாகச் சுண்டிவிடும். வேண்டுமானால் மறுபடியும் சாறு பிழிந்து வெய்யிலில் காய வைத்து நன்றாக காய்ந்து போன சீரகத்தை, கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தவும். பலமான கல்யாணச் சாப்பாட்டிற்குப் பிறகும் சாப்பிட்டது செரிக்காமல்  நெடுநேரம் வரையில் நெஞ்சைக்குத்தியும்- எதுக்களித்துக் கொண்டும் இருக்கும் நிலையிலும், நீங்கள் குறிப்பிடும் குமட்டல், வாந்தியிலும் இந்த சீரகத்தை ஒன்றிரண்டு சிட்டிகை வாயிலிட்டுக் கொண்டு சிறிது சிறிதாக நெடுநேரம் சுவைத்தபடி கடித்து விழுங்கினால் நல்ல பலனை அளிக்கும். 

ஆயுர்வேத மருந்துகளாகிய தாளீசபத்ராதி சூரணம் அல்லது கற்பூராதி சூரணத்தையோ பத்து கிராம் எடுத்து 20 மில்லி லிட்டர் தேன் குழைத்து சிறிது சிறிதாக விரலால் தொட்டு நாக்கில் தடவிக் கொண்டு இருந்தால், மருந்தின் சுவையும் மணமும் தொடர்ந்து நாக்கிலும், தொண்டையிலும் இருக்கும். வாந்தி நின்றுவிடும். செரிமானக் கோளாறு உள்ளவர்களுக்கு, செரிமானமும் விரைவில் நன்றாக ஏற்படும்.

நெல்பொரியைத் துணியில் கட்டி, தண்ணீருடன் கொதிக்கவிட்டு, துணியை நடு நடுவே தண்ணீரில் ஆட்டிக் கொண்டே வர, பொரியின் பெரும் பகுதி கரைந்து கஞ்சி போல ஆகிவிடும். துணி மூட்டையை எடுத்துவிட்டு, கஞ்சியுடன் ருசிக்க நெல்லிமுள்ளி அல்லது புளிப்பு மாதுளைச் சாறு சிறிது கலந்து, தேவையான அளவு உப்பும் சேர்த்து சிறிதாக காலையில் சாப்பிட்டால், வாந்தியுள்ளவருக்கு மருந்துமாகவும், சிறந்த உணவுமாகவும் பயன்படும்.  
 
(தொடரும்)
பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com