களைப்பு நீங்க நல்ல உணவு.. மன நிம்மதி!

களைப்பு என்பது ஒரு காரியத்தில் மனது ஈடுபடாமலிருப்பதும், அப்படி மனது அக்காரியத்தைச் செய்ய நினைத்தாலும்,
களைப்பு நீங்க நல்ல உணவு.. மன நிம்மதி!

என் வயது 52. நான் நன்றாகத்தான் சாப்பிடுகிறேன். ஆனாலும் எனக்கு எப்பவும் களைப்பாகவே இருக்கிறது.  வேலை ஒவ்வொன்றும் செய்வதற்கே மலைப்பாக இருக்கிறது. இந்த களைப்பு எதனால் ஏற்படுகிறது? எப்படி குணப்படுத்தலாம்?  
-விசாலாட்சி, தஞ்சாவூர். 

களைப்பு என்பது ஒரு காரியத்தில் மனது ஈடுபடாமலிருப்பதும், அப்படி மனது அக்காரியத்தைச் செய்ய நினைத்தாலும், உடல் அதற்கு சம்மதிக்காமலிருப்பதாகும். ஆக, மனது நினைப்பதை உடல் பல காரணங்களால்  செய்ய மறுப்பதும், வேலைகள் செய்ய வேண்டியிருந்தாலும் மனம் ஈடுபட மறுப்பதும் களைப்பு என்று சொல்லாம்.

களைப்பு மூன்று வித காரணங்களால் உண்டாகலாம். அதாவது 1) நோயினால் 2) உணவினுடைய அளவு குறைவதாலும், அதன் சத்து உடலில் சேராதிருப்பதால் 3) மனப்போராட்டத்தால்.

உடலில் ரத்தக் குறைவு ஏற்படுத்தக் கூடிய சோகை உபாதை, சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவது, காசநோய் இவற்றில் உடல் சக்தி குறைந்து களைப்பு ஏற்படுவது உண்டு. அந்தந்த நோய்களைக் குணப்படுத்துவதால் களைப்பு நீங்கும். நாம் உண்ணும் சாதம், காய்கறி, மாமிசம், கோதுமை என்று எதுவாக இருந்தாலும் அவை  ஜீரண உறுப்புகள் என்ற ரசாயன சாலையில் உடலுக்கு வேண்டிய சத்துப் பொருட்களாகப் பிரிக்கப்பட்டு, கல்லீரலில் ரசாயன மாற்றங்களையடைந்து அந்தந்த அவயவங்களுக்குத் தகுந்த மாதிரி மாற்றப்பட்டு ரத்தத்தின் மூலமாகச் செலுத்தப்படுகிறது.

உணவினுடைய பரிமாண மாற்றத்திற்கு தேகமே ஒரு ரசாயன சாலையாக வேலை செய்கிறது. உணவு ஜாடராக்கினியால் பக்குவம் செய்யப்பட்ட பிறகு, ஜாடராக்கினி (பசித்தீ)யிலிருந்து பலம்பெற்ற தாத்வாக்கினிகளும், உணவுப் பொருட்களில் அடங்கியுள்ள பஞ்ச பூதாக்கினிகளும் சேர்ந்து தான் உடலை நிலைநிறுத்தவும் வளர்க்கவும் செய்கின்றன. ஆக பதின்மூன்று அக்னிகள் நெருப்பு நமது உடலில் வேலை செய்கின்றன. 1 ஜாடராக்னி, 7 தாத்வக்னி, 5 பூதாக்னி. இவற்றில் ஏதாவதொன்று வேலை செய்ய முடியாவிட்டால் தேகத்திற்கு வேண்டிய தாதுப்பொருள்களோ ஜீவசத்துப் பொருள்களோ குறைவடைகின்றன அதனால் களைப்பு ஏற்படுகின்றது.

நமது மூளை உடலின் எடையில் 2 சதவிகிதம் தானிருக்கின்றது. ஆனால் அதற்கு 14 சதவிகிதம் ரத்தம் தேவைப்படுகிறது. 23 சதவிகிதம் பிராண வாயுவை உபயோகப்படுத்துகிறது. மற்ற அவயவங்களை விட சர்க்கரைச் சத்தையும் அதிகமாக உபயோகிக்கிறது. ஆக மூளைக்குப் போதுமான ரத்தமோ, பிராண வாயுவோ, சர்க்கரைச் சத்தோ இல்லாவிட்டால், மூளையிலுள்ள நரம்புகளினால் இயக்கப்படுகிற  பல சுரப்பி கிரந்திகளும் வேலை செய்யாமற் போவதால், அப்போதும் களைப்பு ஏற்படுகிறது.

பயம், சோகம் போன்ற மனப் போராட்டத்தினால், உடலிலுள்ள கிரந்திகள் அதிகமாக இயங்கி சாரமற்றதாகவோ அல்லது இயங்காமலேயே போவதால், சத்துகள் ரத்தத்தில் குறைந்து களைப்பு ஏற்படுத்தும். உடல் உழைப்பினால் ஏற்படும் களைப்பும் மனப் போராட்டத்தினால் ஏற்படும் களைப்பும் ஒன்றல்ல. நல்ல உணவின் மூலமாக முதல் களைப்பை நீக்க முடியும். மற்றதை பயம், சோகம் போன்றவை நீங்கும் அளவிற்கு மனநலம்தரும் அன்பும், இனிமையான பேச்சும், மருந்து ஆகியவை மட்டுமே உதவும். 

ஏழு தாதுக்களாகிய ரஸம் - ரத்தம் - மாமிசம் - மேதஸ் - எலும்பு - மஜ்ஜை - விந்து ஆகியவற்றின் சாரம் பொருளான "ஓஜஸ்' இதயத்தை இருப்பிடமாகக் கொண்டு உடலெங்கும் பரவி நாம் ஜீவனுடன் வாழ உதவுகிறது. பசி, கோபம், அதிக சிந்தனை, துயரம், சாகசமான காரியங்கள் இவைகளால் இந்த ஓஜஸ் எனும் சத்து குறைகிறது. அதனால் வேலைகளில் உற்சாகம் உண்டாகாது, எப்போதும் களைப்பு ஏற்படும். அதனால் களைப்பு ஏற்படாமலிருக்க நல்ல உணவும் மன நிம்மதியும் இருக்க வேண்டும்.

களைப்பைப் போக்கும் சியவனப்பிராசம் எனும் லேஹ்யம், உணவின் சத்து உடலில் முழுமையாகச் சேர்க்கும் ஹிங்குவசாதி சூரணம், தசமூலாரிஷ்டம், மனப்போராட்டத்தைக் குறைக்க உதவும் கல்யாணகிருதம் எனும் நெய் மருந்து, அந்தந்த நோய்களுக்குத் தகுந்தவாறு கொடுக்கப்படும் எண்ணற்ற ஆயுர்வேத மருந்துகள் என பல மருந்துகள் இருந்தாலும், நீங்கள் ஆயுர்வேத மருந்துவரின் நேரடி ஆலோசனை மூலம் மருந்துகளைச் சாப்பிட்டு, களைப்பைப் போக்கிக் கொள்ளலாம். 
(தொடரும்)

பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com