தும்மல், மூக்கில் நீர் வடிதல் போன்ற ஒவ்வாமைக்கு ஆயுர்வேதத்தில் மருந்து!

உடலில் எந்த உபாதை உண்டானாலும் அத்துடன் போராடி அந்த உபாதையைப் போக்கிட, இயற்கையாகவே நமது உடல் முனையும்.
தும்மல், மூக்கில் நீர் வடிதல் போன்ற ஒவ்வாமைக்கு ஆயுர்வேதத்தில் மருந்து!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

எனக்கு வயது 24. நான் சில மாதங்களாக அலர்ஜியால் பாதிக்கப்பட்டுள்ளேன். தும்மல் அதிகமாக உள்ளது. மூக்கிலும் நீர் வடிகிறது. இதை எப்படிக் குணப்படுத்துவது?

- ரெஜினா, திருச்சி.

உடலின் சகிப்புத்தன்மை ஒரு வகையில் குறைந்து போவது தான் இந்த உபாதைக்கான அடிப்படைக் காரணம். உடலில் எந்த உபாதை உண்டானாலும் அத்துடன் போராடி அந்த உபாதையைப் போக்கிட, இயற்கையாகவே நமது உடல் முனையும். தும்மல், மூக்கிலிருந்து நீராக ஒழுகுவது போன்ற போராட்டத்தைக் குறைக்க உதவி புரிவது பொதுவாக இரத்தத்திலுள்ள வெண்ணிற ஜீவ அணுக்கள். இவற்றுள் 'ஈஸினோபைல்' என்பது ஒரு வகை. சாதாரணமாக, முதல் 4 அல்லது 5 சதவிகிதம் வரை இருக்கும். இவை, நீங்கள் குறிப்பிடும் அலர்ஜி உபாதையின்போது, படை விஸ்தரிப்பு யுத்த காலத்தில் மேற்கொள்ளப்படுவது போல, தன் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே போய், போராடி வெற்றி பெற முயலும். 

அதனால் இந்த ஈஸினோபைல்களைக் குறைக்கக் கூடிய மருந்துகளைக் கொடுப்பது தவறாகும், வந்துள்ள அலர்ஜி உபாதைக்கான மருந்துகளைக் கொடுத்தால், போராடிக் கொண்டிருக்கும் படைச்செல்வமாகிய ஈஸினோபைல்களுக்கும் உதவியாக இருக்கும். இரு வகையும் சேர்ந்து வியாதியைச் சீக்கிரத்தில் குணப்படுத்த வழி எளிதில் பிறக்கும். அந்த வகையில் - வில்வத்தின் இலை, துளசி இவற்றில் ஒன்றையோ இரண்டையுமோ தனித்தனியாக இடித்துப் பிழிந்த சாறை சம அளவாக எடுத்து. அவற்றிற்குச் சமமான அளவில் நல்லெண்ணெய் சேர்த்து அடுப்பில் ஏற்றி மணல் பாகத்தில் வரும் போது இறக்கி வடிகட்டி, தலைக்குத் தேய்த்துக் குளித்து வர பயன்படுத்தவும்.

இதல் சில துளிகளை காதில் விட, காது குத்தல், சீழ் வடிதல் பிரச்னையும் தீரும். ஒரு தேக்கரண்டி வாயில் விட்டு கொப்பளித்து வர டான்ஸில் உள்ளவருக்கு நல்லது. அஸனவில்வாதி எனும் தைலத்தையும் தலைக்குத் தேய்த்து வர தும்மல், ஜலதோஷம் குறையும். மேலும், எளிதில் ஜலதோஷம் சீழ் இவற்றையும் போக்கும். முன் குறிப்பிட்ட தைல உபயோகத்தைப் போல, இந்த தைலத்தையும் பயன்படுத்தலாம்.

அதிமதுரத்தின் சிறியதொரு துண்டையோ, சித்தரத்தை அல்லது சுட்ட கடுக்காயின் தோல் இவற்றில் ஒன்றையோ வாயிலிட்டு அடக்கிக் கொண்டிருப்பதால், தும்மல், ஜலதோஷம் சீக்கிரம் குணமாகும். அஸ்வகந்தா லேகியம் 5 முதல் 10 கிராம் வரை தினம் இரண்டுவேளை, உணவிற்கு முன் சாப்பிட்டு, சிறிது சூடான வெள்ளாட்டுப் பால் குடித்தால் உங்களுடைய அலர்ஜி பிரச்னை குணமாகும். பால் கிடைக்காவிட்டால் வெந்நீராவது அருந்தவும். அடிக்கடி வரும் ஜலதோஷம், அடுக்குத் தும்மல், சளி, இருமல், ஆஸ்துமா, ஏறிக்கொண்டே போகும். ஈஸினோபைல் இவற்றிற்கு மிகவும் பயனுள்ள அனுபவப்பூர்வமான மருந்து.

ஆயுர்வேத மருந்துக்கடைகளில் விற்கப்படும் கூச்மாண்ட ரசாயனம் எனும் லேகிய மருந்தும் சாப்பிட உகந்ததாகும். தினம் 2 முதல் 4 வேளை வரை , சுமார் 10 கிராம் வரை சாப்பிட்டு வர, தும்மல் முதல் ஆஸ்துமா வரை குணமாகும்.

டல் சகிப்புத் தன்மை வளரும். உடல் பருக்கும். தசமூலாரிஷ்டம் 30 மி.லி. வரை காலை, இரவு உணவிற்குப் பிறகு சாப்பிட்டு வர, நுரையீரல், இதயம் இவற்றைச் சுத்தமாகவும், நல்ல நிலையிலும் வைத்துக் கொள்ள உதவும். பசியெடுக்கும், ருசி பிறக்கும். மலச்சிக்கல் குணமாகும். ஒரு சில வெளி பிரயோகங்களால் நீங்கள் பயன் அடையலாம். ராஸ்னாதி சூரணம் மற்றும் ஏலாதி சூரண மருந்துகளை சம அளவில் கலந்து இஞ்சி சாறுடன் குழைத்து லேசாக சூடாக்கி நெற்றிப் பரப்பு முழுவதும் பற்று இடுவதன் மூலமாக, தும்மல் மற்றும் ஜலதோஷம் குறைய நிறைய வாய்ப்பிருக்கிறது. 

உணவில் இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவை குறைக்கவும். இனிப்பிலுள்ள நிலமும் நீரும், புளிப்பிலுள்ள நிலமும் நெருப்பும், உப்பிலுள்ள நீரும், நெருப்பும் கபதோஷத்தை அதிகப்படுத்தும் தன்மையுடையவை. அதனால் தும்மலும், ஜலதோஷமும் அதிகரிக்கும். அதற்கு மாற்றாக காரம், கசப்பு, துவர்ப்புச் சுவையை உணவில் அதிகம் சேர்க்கவும். இரவில் படுக்கும் முன் திரிகடுக சூரணம் எனும் சுக்கு மிளகு திப்பிலி சூரணத்தை 5 கிராம் எடுத்து 10 மிலி தேனில் குழைத்துச் சாப்பிட்டுவர, அலர்ஜி உபாதை குறைந்துவிடும்.

(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com