அவசரமாகச் சிறுநீர் பிரிவதைக் குணப்படுத்தலாம்!

சிறுநீரைத் தேக்கி வைக்கும் சிறுநீர்ப்பை, நரம்பு மண்டலத்தின் இயக்கத்தின் மூலமாக, சிறுநீரின் அளவு கூடாத வண்ணம் வெளியேற்றுகிறது.
அவசரமாகச் சிறுநீர் பிரிவதைக் குணப்படுத்தலாம்!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
எனக்கு வயது 70. சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் உள்ளது. அவசரமாக சிறுநீர் கழிக்கும் போது சில சொட்டுகள் ஆடையில் பட்டுவிடுகிறது. மேலும் அந்த நேரத்தில் பாதத்தில் எரிச்சல் ஏற்படுகிறது. உடன் சரியாகி விடுகிறது. இதற்கு ஆயுர்வேத மருத்துவம் ஏதேனும் உள்ளதா?

சுகுமாறன்,
மன்னார்குடி.

 சிறுநீரைத் தேக்கி வைக்கும் சிறுநீர்ப்பை, நரம்பு மண்டலத்தின் இயக்கத்தின் மூலமாக, சிறுநீரின் அளவு கூடாத வண்ணம் வெளியேற்றுகிறது. இந்த நரம்பு மண்டலத்தின் செயல்திறன் வயோதிகத்தில் மந்தமாவதற்கு ஏற்ப, சிறுநீரின் வெளியேற்றம் வேகமாகவோ, மந்தமாகவோ நிகழக்கூடும். இடுப்பினுடைய கீழ்பகுதியில் அமைந்துள்ள முதுகுத்தண்டு வடப்பகுதியிலிருந்து வெளிக்கிளம்பும் நரம்புகளே, சிறுநீர்ப்பையைத் தம் ஆளுமையின் கீழ்வைத்துள்ளது. அவற்றின் செயல்களைச் சீராக்கினால், உங்களுக்கு ஏற்படும் சிறுநீர்ச் சொட்டானது குணமடைய வாய்ப்பிருக்கிறது. 

அந்த வகையில், கடிவஸ்தி அதாவது இடுப்பைச் சுற்றி உளுந்து மாவினால் வரம்பு கட்டி அதனுள்ளே, மஹாமாஷம், பலா அஸ்வகந்தாதி எனும் பெயர்களிலுள்ள மூலிகைத் தைலங்களை, வெது வெதுப்பாக  ஊற்றி, அரைமணி நேரம் முதல் முக்கால் மணி நேரம் வரை ஊறவிடுதல், சூடு ஆற ஆற, மறுபடியும் பிழிந்தெடுத்துச் சூடாக்கி, மறுபடியும் ஊற்றி வைக்கும் சிகிச்சை முறை மிகவும் சிறப்பானது. இதைச் செய்து கொள்ளும் தறுவாயில், வயிறு காலியாக இருத்தலும், மலங்கழித்திருத்தலும் அவசியமாகும். சிறுநீரும் கழித்திருக்க வேண்டும்.

நொச்சி, ஆமணக்கு, புங்கை, வாதநாராயணன், கல்யாண முருங்கை, கற்பூரவல்லி செடி ஆகியவற்றின் வேர்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, குக்கரில் தண்ணீருடன் கலந்து கொதிக்கவிட்டு, குக்கரின் மூடியிலுள்ள குழலில் ஒரு ரப்பர் டியூபைப் பொருத்தி, அதிலிருந்து வரும் மூலிகை நீராவியை இடுப்பு பகுதியில், முன் குறிப்பிட்ட வரம்பு மற்றும் எண்ணெய்களை வழித்தெடுத்த பிறகு காண்பிப்பதும், இடுப்பு நரம்புகளின் செயல் ஊக்கிகளை மேம்படுத்தும் சிகிச்சை முறையாகும்.

உணவை உண்ட உடனேயே, ஆசனவாய் வழியாக மூலிகைத் தைலங்களைக் கொண்டு ஒரு பையில் நிரப்பி உட்செலுத்துதல் மூலம், இடுப்பிற்குக் கீழ்ப் பகுதிகள் அனைத்தும் நெய்ப்பைப் பெறுகின்றன. இரு தினங்கள் இந்த சிகிச்சை முறை செய்த பிறகு, மூன்றாவது நாள், காலையில் வெறும் வயிற்றில் உள்ளபோதே, தசமூலம், ஆமணக்கு ஆகியவற்றின் வேரைக் கொண்டு காய்ச்சப்படும் கஷாயத்தில், தேன், இந்துப்பு, நல்லெண்ணெய், சதகுப்பை சூரணம் ஆகியவற்றைக் கலந்து, நன்றாகக் கடைந்து ஒரு பையில் ஊற்றி, ஆசனவாயினுள் செலுத்தி, சுமார் 25-30 நிமிடங்களுக்குள் கழிவறையில், அக்கஷாயத்தை கழித்து விடுவதால், பல வகையில் துன்புறுத்தும் வாத நோய்களைப் போக்கும் திறன் கொண்ட இந்த சிகிச்சை முறையும் உத்தமமானதே.

நீர்த்தொட்டி நீராட்டம் எனும் சிகிச்சை முறையும் தங்களுக்கு நல்ல பலனை அளிக்கலாம். மூலிகைகளைக் கொண்டு கஷாயமிட்டு,  ஓர் அண்டாவினுள் வெது வெதுப்பாக ஊற்றி, அதனுள்ளே இடுப்பு வரை மூழ்குமாறு அமர்ந்து கொள்ளும் இந்த சிகிச்சை முறை மூலம், உடலின் கீழ்ப்புறம் அமைந்துள்ள உறுப்புகளை வலுப்படுத்தலாம்.

இடுப்பு முதல் பாதம் வரை, மூலிகைத் தைலங்களைச் சூடாக்கி, பஞ்சினால் பிழிந்து ஊற்றும் தைல தாரா சிகிச்சையின் மூலமாகவும், சிறுநீர்ப்பையைச் சார்ந்த நரம்பு மண்டலத்தை வலுவாக்கலாம். 

நரம்புகளை வலுப்படுத்தும் யூகலிப்டஸ், முடக்கத்தான், எருக்கு, நொச்சி, ஏழிலம் பாலை, ஆமணக்கு ஆகியவற்றின் இலைகளை நறுக்கி, பந்துபோல் துணியில் கட்டி, சூடாக்கி, இடுப்பு மற்றும் கால் பகுதிகளில் ஒத்தடமிட, வாயுவை கீழடக்கி, நரம்புகளை வலுவடையச் செய்யும்.

விதார்யாதி, தசமூலம், சுகுமாரம், இந்துகாந்தம் போன்ற கஷாய மருந்துகளில் ஒன்றிரண்டை மருந்துவர் ஆலோசனைப்படி, தான்வந்திரம் அல்லது வாயு குளிகையுடன் பால் கஷாயமாக அருந்துவதன் மூலமாக, நரம்பு மண்டலங்களை வலுவூட்டலாம்.

உணவில் நரம்புகளை வலுவிழக்கச் செய்யும் காரம், கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகளைக் குறைத்து இனிப்பு, புளிப்பு மற்றும் உப்புச் சுவைகளை மிதமாகச் சேர்க்கலாம்.

(தொடரும்)

பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com