இடது பக்கம்  சரிந்து படுப்பதுதான் ஆரோக்கியமானது!

இடது பக்கம் சரிந்து படுப்பதுதான் ஆரோக்கியமானது என்று ஆயுர்வேதம் குறிப்பிடுவதாக அறிகிறேன். அது உண்மையா? அப்படி படுப்பதால் என்ன நன்மை? 
இடது பக்கம்  சரிந்து படுப்பதுதான் ஆரோக்கியமானது!

இடது பக்கம் சரிந்து படுப்பதுதான் ஆரோக்கியமானது என்று ஆயுர்வேதம் குறிப்பிடுவதாக அறிகிறேன். அது உண்மையா? அப்படி படுப்பதால் என்ன நன்மை? 

  - சா. முகம்மது , சிதம்பரம்.

இரவு உணவிற்குப் பிறகு, குறைந்தது நூறு அடியாவது நடக்க வேண்டும் என்றும் இடது பக்கமாக சரிந்து படுத்துக்கொள்ள வேண்டும் என்றும் "அஷ்டாங்க சங்கிரஹம்' எனும் ஆயுர்வேத நூல் கூறுகிறது.

1) சிறு குடலில் உற்பத்தியாகும் மலப்பகுதிகள், இலியோசீக்கல் வால்வு எனும் பகுதி வழியாக, வலதுபகுதியில் அமைந்துள்ள ஆரம்ப நிலையான பெருங்குடலில் சேர்த்து, வலது குடல்வழியாக, வயிற்றின் குறுக்கே நகரும் பெருங்குடல் மூலம், இடது பக்கம் அமைந்துள்ள இறங்கும் பெருங்குடலில் நகருவதால், புவி ஈர்ப்பு சக்தியின் மூலமாக, மலமானது எளிதில் நகர்வதற்கு உதவுகிறது. இதனால் மறுநாள் காலை, மலக்கழிவானது எளிதில் ஏற்படும்.

2) கரியமில வாயுவானது இன்பீரியர் வீனேகேவா எனும் மெல்லிய சுவருடன் கூடிய குழாய்மூலம் கீழ் உடலில் சேர்ந்து ரத்தத்தில் சேகரிக்கப்பட்டு, உடலின் வலதுபக்கத்தில் நகர்ந்து இதயத்தை வந்தடைவதால், இடது பக்கம் சரிந்து படுப்பதன்மூலமாக, உடல் உறுப்புகள், இடது பக்கம் சரிவதன் விளைவாக, இந்த ரத்தக்குழாயில் அழுத்தம் தவிர்க்கப்பட்டு, அதன் தொழிலை சிறப்பாகச் செய்யமுடிகிறது. இதயமும் கரியமிலவாயுவை நன்றாக உள்வாங்கி, வலது கீழ் பக்கத்திலுள்ள அறைக்குக் கொண்டு சென்று, நுரையீரலுக்கு எளிதாக எடுத்துச் செல்ல முடிகிறது. இதனால் இதயத்தின் செயல்பாட்டில் தொய்வு ஏற்படாமல், அதன் வேலைப்பளுவும் எளிதாகிறது. 

3) நிணநீர் சுரப்பிகளிலுள்ள நீரில், புரதம், க்ளுகோஸ், இதர கழிவுகள், அதன்குழாய்களின் நடுநடுவே அமைந்துள்ள முடிச்சு போன்ற க்ரந்திகளின் மூலம் சுத்தமாக்கப்பட்டு, இதயத்தின் இடது பக்கம் வந்து சேர்வதை, இடது பக்கம் சரிந்து படுப்பது எளிதாக்குகிறது. மேலும் இதயத்தின் வேலைப் பளுவும் குறைகிறது.

4) இதயத்தின் இடதுகீழ் பக்கம் அமைந்துள்ள வெண்டிரிக்கல் எனுமிடத்திலிருந்து பெரும் தமனி வழியாக, ரத்தத்திலுள்ள பிராண வாயுவானது, இடதுபக்கம் படுக்கும்போது புவியீர்ப்பு சக்தியினால் எளிதாக எடுத்துச் செல்லப்படுகிறது. இதயத்தினுடைய சுருங்கும் தொழிலானது சுலபமாக்கப்படுகிறது.

5)  மண்ணீரல் இடதுபக்கம்அமைந்துள்ளது. பெரிய நிணநீர் க்ரந்தியானது இது, நிணநீரை சுத்தப்படுத்துவதுடன் ரத்தத்திலுள்ள சில கசடுகளையும் சுத்தப்படுத்துகிறது. இடது பக்கம் படுப்பதால், நிணநீர் மற்றும் ரத்தம் ஆகியவை அதனுள் எளிதாக நுழைகின்றன. இதனால் மண்ணீரல் தன்தொழிலை சிறப்பாகச் செய்ய முடியும். இதய சுருக்கத்தை விட, தசை சுருக்கத்தின் மூலமாகத்தான் நிணநீரிலுள்ள அணுக்கள் விரைவாக நகருகின்றன என்பதால் இடது பக்கம் படுப்பதன் மூலம், தசை சுருக்கத்தின் செயல்பாடும் மேம்படுகிறது.
6) இடது  பக்கம்  சரிந்து படுப்பதால், உண்ட உணவானது வயிற்றினுடைய இடது பக்கத்தில் தங்கும்.  இயற்கையாகவே இடது பக்கம் சுலபமாகத் தொங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வயிறு மற்றும் பாங்கிரியாஸ் ஆகியவை சுரக்கும் அமிலங்கள் சீராக உணவின் மீது விழுந்து செரிமானத்திற்கு உதவுகின்றன. இதனால் அவற்றிலிருந்து ஊறும் அமிலமானது, உணவின் முழுப்பகுதியும் செரிப்பதற்கு உதவுகின்றன.

7) கல்லீரலும், பித்தப்பையும் வலது பக்கம் வயிற்றில் அமைந்துள்ளன. இடது பக்கம் படுப்பதால் அவை மேலே வந்து விடுவதால், பித்தநீரானது, உணவுப்பையின் நடுப்பகுதியில் எளிதாக வந்து சேர்ந்து, நெய்ப்புப்பொருட்களைச் செரிப்பதற்கும், அமிலங்களைச்  சமன்படுத்துவதற்கும் பெரிதும் உதவுகிறது. உணவின் சீரான செரிமானத்தால், அதன் சத்து முழுவதும் உடல் எளிதாக பெறும் என்பதால், சோர்வு எனும் நிலை தவிர்க்கப்படுகிறது. சுறுசுறுப்பாக உடல் இயங்கவும் உதவுகிறது.

படுக்கையிலிருந்து எழும் போது இடதுபக்கம் சரிந்து வலதுகையால் படுக்கையை அழுத்தி எழுந்துகொள்வதால், இடுப்பு எலும்பு மற்றும் கழுத்து எலும்புகளில் வலி ஏற்படாமல் தவிர்க்கலாம். காலையில் எழும்போது சுறுசுறுப்பாக இல்லாமல் சோர்வாக உள்ளதாகச் சிலர் உணர்வார்கள்.

இது  உண்ணும் உணவின் செரிமானத் தாமதத்தால் வயிற்றில் வாயு நிறைந்து ஏற்படக்கூடும். முன் குறிப்பிட்ட வகையில், வாழ்க்கை முறையை மாற்றி அமைப்பதால், காலையில் சோர்வை தவிர்த்திடலாம். இரவு முழுவதும் இடது பக்கம் படுக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. மலர்ந்தும் கிடக்கலாம். வலது பக்கம் படுப்பதையும், குப்புறப்படுப்பதையும் பெருமளவு தவிர்க்கலாம். வயிற்றிலுள்ள க்லேதகம் எனும் கபம், உணவை திரவ நிலைக்கு மாற்றுகிறது. பாசகம் எனும் பித்தம் உணவினுடைய செரிமானத்தை செய்து சத்தான பகுதியையும் உணவினுடைய கழிவுகளையும் பிரித்து பெருங்குடல் பகுதிக்கு அனுப்புகிறது. சமானன் எனும் வாயு உணவை பாசக பித்தத்திற்கு அருகில் எடுத்துத் சென்று செரிமானத்திற்கு உதவுகிறது. பெருங்குடல் பகுதியிலுள்ள அபானன் எனும் வாயு உணவுச் சக்கையிலிருந்து நீரைப் பிரித்து குடல் வழியாக உறிஞ்ச உதவுகிறது. இவை அனைத்தும் இடதுப் பக்கமாக படுப்பதன் மூலமாக விரைவாகச் செயல்பட உதவுகிறது. 

(தொடரும்)

பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com