உண்ணாதீர்கள்... பகைப் பொருட்களை!

ஒன்றோடு ஒன்று சேராத உணவுப்பொருட்களைச் சாப்பிடும் போது அவை பகைப் பொருட்கள் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.
உண்ணாதீர்கள்... பகைப் பொருட்களை!

பாலுடன் மீன், உளுந்துடன் தயிர், இரவில் தயிர், உப்புடன் பால்பொருட்கள் போன்றவை பகைப்பொருட்கள் என்று எழுதியிருந்தீர்கள். அப்படி சாப்பிட்டால் உடலில் என்ன நேரும்? என்னென்ன வியாதிகள் வரும்? ஏனெனில் என் மனைவி (5 அடி 90 கிலோ), மகன் (5. 6 அடி எடை 105கிலோ) இருவரும் இரவிலும் பகலிலும் இட்லி, தோசை, சப்பாத்தியுடன் கெட்டித்தயிர் இல்லாமல் சாப்பிடுவது இல்லை. இதனால் என்ன கெடுதிகள் ஏற்படும்?  

சந்தான கோபாலன், சென்னை-8.

ஒன்றோடு ஒன்று சேராத உணவுப்பொருட்களைச் சாப்பிடும் போது அவை பகைப் பொருட்கள் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. அவற்றை உண்ணும்போது - உடலில் உள்ள தோஷங்களாகிய வாத- பித்த- கபங்களை அவை இருக்கும் இடத்திலிருந்து நெகிழ வைத்துக் கிளறி விட்டு அதை முற்றிலும் வெளிப்படுத்தாமல் உடலிலேயே தேக்கி வைக்கும் பொருள்களே பகைப்பொருட்கள் எனப்படும். அந்த பொருட்கள், மனிதர்களுக்கு ஆதாரமாகி உடலின் நிலையை நிறுத்தக் கூடிய ஏழு தாதுக்களான- ரஸம், ரக்தம், மாமிசம், மேதஸ், எலும்பு, மஜ்ஜை, மற்றும் விந்து ஆகியவற்றிற்கு எதிரிடையானவை. இரு உணவுப்பொருட்களின் சக்தி வாய்ந்த பரஸ்பர குணங்கள் ஒன்றுக்கொன்று விஷமமாயிருந்தால் (எதிரிடையானது), சமமாயிருத்தல் (மாறுபடாத ஒரே தன்மையுடையது),

சிலகுணங்கள் சமமாகவும், சில விஷமமாகவும் கலந்திருத்தல், மேலும், செய்முறை, அளவு, தேசம், காலம், சேர்க்கை அதுபோல் இயற்கையாகவே ஒவ்வாதிருத்தல் ஆகிய காரணங்களால் பகைமை ஏற்படுகிறது. 

 இவற்றிற்கு உதாரணமாக - பால், கொள்ளுடன் விஷம குணம் கொண்டிருப்பதால் பகையாகிறது. பால், பலாப்பழத்துடன் சம குணங்களால் பகையாகிறது. பால், மீனுடன் சில விஷமமாகவும் சில சமமாகவுமுள்ள குணங்களால் பகையாகிறது.

தயிரைச் சூடாக்குவது செய்முறையால் பகை குணமாகும். சம அளவில் தேனும் நெய்யும் சேர்ப்பது அளவால் எதிரிடையானது. உவர்ப்பு நிலமும் நீரும் தேசத்தால் ஒன்றுக்கொன்று ஒவ்வாதவை. இரவில் சத்துமாவைப் புசிப்பது காலத்தால் தீமையானது. இதே சத்துமாவை இடை இடையே நீர் அருந்திச் சாப்பிட்டால் சேர்க்கையால் பகைகுணமாகிறது. இயற்கையாகவே வாற்கோதுமை அல்லது பார்லியைத் தனியாக சமைத்துப் புசித்தாலும் கேடுவிளைவிக்கும்.

 பகைமையிலுள்ள பொருட்களாலான உணவு, வைசூரி, உடல்வீக்கம், வெறி, பெரியகட்டி, குன்மம், எலும்புருக்கி நோய் போன்றவை ஏற்படுத்தும். உடல் ஒளி, வலிமை, நினைவாற்றல், அறிவுப்புலன், மனோபலம் ஆகியவற்றை அழித்து, காய்ச்சல். இரத்தக்கசிவு, எண்வகைப் பெருநோய்களான- வாதநோய், மூலம், குஷ்டம், நீரிழிவு, பவுத்திரம், நீர்ப்பீலிகை, கிராணி, நீரடைப்பு ஆகியவற்றைத் தோற்றுவிக்கும். நஞ்சைப் போல உயிரையும் மாய்க்கும்.

 மேற்குறிப்பிட்ட உபாதைகளை நீக்குவதற்குத்தக்க மருந்துகளைப் பயன் படுத்தி, வாந்தி செய்வித்தல், பேதிக்குக் கொடுத்தல் போன்றவற்றை விரைவில் செய்து, உடலைச் சுத்தம் செய்ய வேண்டும், அல்லது அத்தகைய பகைமைப் பொருட்களுக்கு எதிரிடையான பொருட்களால் நோயைத் தணிக்கச் செய்வது அல்லது அந்தப்பொருட்களைக் கொண்டே முன்னதாக உடலைப் பண்படுத்த வேண்டும் என்று ஆயுர்வேதம் அறிவுறுத்துகிறது. 

பகைப்பொருட்களும் சிலருக்கு தீமையை உண்டு பண்ணுவதில்லை. உடற்பயிற்சி செய்பவர்கள், எண்ணெய்ப் பசையுண்டாக்கும் சிகிச்சை செய்து கொண்டவர்கள், பசித்தீ நன்கு வேலை செய்கின்ற நிலையிலுள்ளவர்கள், நடுவயதை உடையவர்கள், நல்ல உடல் வலிமை பெற்றவர்கள் இவர்கள் விஷயத்தில் பகைப்பொருட்கள் தீங்கை விளைவிப்பதில்லை. அதுபோலவே உடலுக்கு ஏற்ற உணவும், அளவில் குறைந்த உணவும் கூட விரோதகுணம் உள்ளதாயினும் கெடுதலைத் தருவதில்லை.

தீங்கிழைக்கும்  இயல்புள்ள பொருட்களை உண்ணும் பழக்கத்தை நீக்க, முன்பு உண்ட பொருளில் நாலில் ஒரு பங்கை அல்லது சிறிது சிறிதாகக் குறைத்து அதற்குப் பதிலாக நன்மை பயக்கும் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். அப்படியே இடையில் ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாள் என முறையே விட்டுவிட்டு பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் தோஷங்கள் விலகிக் குணங்கள் வளர்கின்றன. தீங்கும் ஏற்படுவதில்லை.
(தொடரும்)

பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com