நீரிழிவு நோய் கட்டுப்பட... தொட்டாற் சிணுங்கி!

தொட்டாற்சிணுங்கி பற்றிய முழு விவரங்களையும் மருத்துவ குணங்களையும் அறிய விரும்புகிறேன்.
நீரிழிவு நோய் கட்டுப்பட... தொட்டாற் சிணுங்கி!


சமீபத்தில் கோவை சென்றிருந்த போது தொட்டாற்சிணுங்கி எனும் தரையோடு படரும் செடியைப் பார்த்தேன். தொட்டதும் இலைகள் சுருங்கிக் கொள்வதைப் பார்ப்பதற்கே அழகாக இருந்தது. இந்தச் செடி பற்றிய முழு விவரங்களையும்  மருத்துவ குணங்களையும் அறிய விரும்புகிறேன்.
-முரளிதரன், சேலம்.

வளரியல்பு - சிறுசெடி

தாவர விளக்கம் - பரந்து விரிந்த வளரியல்பு கொண்ட தாவரம். தாவரம் முழுவதும் சிறு முட்கள் காணப்படும். இவை, நேராகவோ, வளைந்தோ இருக்கும். இலைகள், சிறகு வடிவமான கூட்டிலையானவை. தொட்டால் வாடிவிடும். இதன் இலைகளின் சிறப்பான அமைப்பாலேயே இது தொட்டாற்சிணுங்கி என்கிற பெயர் பெற்றது. மலர்கள் விளிம்புகளில் முள் போன்ற சொரசொரப்பான உரோமங்கள் காணப்படும். கனியில் 5 விதைகள் வரை தட்டையாகக் காணப்படும். இந்தியா முழுவதும் சமவெளிகள், கடற்கரையோரங்களில், சிறிய தொகுப்பாக காணப்படுகின்றன. தமிழகத்தில், ஈரப்பாங்கான இடங்கள், ஆற்றங்கரைகள், சாகுபடி நிலங்களின் கரைகள் மற்றும் தரிசு நிலங்களில் வளர்கின்றன. தொட்டாற்சிணுங்கிக்கு தொட்டால்வாடி, இலச்சி, இலட்சுமி மூலிகை போன்ற மாற்றுப் பெயர்களும் உண்டு. முழுத்தாவரமும் மருத்துவத்திற்குப் பயன்படும்.

மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள் 
இனிப்பு, துவர்ப்பு, கசப்பு ஆகிய சுவைகளைக் கொண்டது. வெப்பத் தன்மையானது. இலை,  மூலநோய், பவுத்திர புண்களைக் குணமாக்கும்  உடலைத் தேற்றும். இலைச்சாறு, புண்களைக் குணமாக்கும், அதிக மூத்திரத்தைக் கட்டுப்படுத்தும்,  காமம் பெருக்கும், மூலநோய் மற்றும் வாதத்தடிப்பைக் குணமாக்கும்.

நீரிழிவு நோய் கட்டுப்பட-
முழுத்தாவரத்தை உலர்த்தி, தூள் செய்து பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு, ஒரு தேக்கரண்டி அளவு, காலையில், வெந்நீருடன் 48 நாட்கள் வரை சாப்பிட்டு வர வேண்டும்.

மாதவிடாயின் போது ஏற்படும் அதிகமான இரத்தப்போக்கை கட்டுப்படுத்த முழுச்செடியையும் இடித்து சாறு எடுக்க வேண்டும். 4 தேக்கரண்டி அளவு சாற்றுடன், இரண்டு தேக்கரண்டி அளவு தேன் கலந்து குடிக்க வேண்டும். தினமும் மூன்று வேளைகள், அவ்வப்போது தயார் செய்த சாறைப் பருக வேண்டும் அல்லது ஒரு கைப்பிடி அளவு இலைகளுடன், சிறிதளவு சீரகம், வெங்காயத்தைச் சேர்த்து, அரைத்து எலுமிச்சம் பழ அளவு சாப்பிட வேண்டும்.

வெட்டுக்காயங்கள் குணமாக- 
முழுச்செடியை அரைத்து சாறு எடுக்க வேண்டும். காயத்தின் மீது சாற்றைத் தடவ வேண்டும். குணமாகும் வரை, தினமும் இரண்டு வேளைகள், தொடர்ந்து தடவி வர வேண்டும். 

கை, கால், மூட்டு வீக்கம் குணமாக-  இலையை அரைத்து பசையாக்கி, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். 

ஒவ்வாமை, தோல் தடிப்புகள் குணமாக-  இலைச்சாறைப் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்.

மதனாதி நிகண்டு 

தொட்டாற்சிணுங்கி செடியை நிழலில் காய வைத்துப் பொடித்தும்  தேன் குழைத்துச் சாப்பிட்டால் பித்தத்தினால் ஏற்படும் பேதி நின்றுவிடும். ரத்தத்தில் கலந்துள்ள விஷசத்துக்களை முறிக்கும். கபம் மற்றம் பித்தங்களால் ஏற்படும் சளி இருமல் ஆகியவற்றுடன் கலந்த மஞ்சள் மற்றும் பச்சை நிறம் ஆகியவை குறையும்.

வீர்யத்தில் தொட்டாற்சிணுங்கி குளிர்ச்சியானது. கசப்பான சுவையுடையது.

தன்வந்தரி நிகண்டு 
தொட்டாற்சிணுங்கி இலையைக் காய வைத்து புண் மீது தூவ, புண் ஆறும். தோல் உபாதைகளுக்குத் தேய்த்துக் குளிக்கலாம். வீக்கத்தின் மீது அரைத்துக் கட்ட, வீக்கம் வடியும். இருமலின் போது கபத்துடன்  ரத்தம் கலந்து வருவது நின்றுவிடும். உள்ளுக்குச் சிறிது தொட்டாற்சிணுங்கி சூரணத்தைப் பாலுடன் சாப்பிட, எரிச்சல் அடங்கும். மூச்சுவிட சிரமமான நிலைகளில் தொட்டாற்சிணுங்கி சூரணத்தை தேன் குழைத்துச் சாப்பிட, மூச்சுக் குழாய்விரியும்.

ஷொடல நிகண்டு 
அரிசி கழுவிய நீருடன் தொட்டாற்சிணுங்கி செடியை அரைத்துக் குடித்தால் பாம்பு விஷம் இறங்கும்.

(தொடரும்)

பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com